மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
நகைச்சுவை உணர்வு இயல்பாக வருகிறதா அல்லது கற்க வேண்டுமா?
பா.ஜ.க. மாநிலத் தலைவரை சந்திக்கும்போது இதைக் கேளுங்களேன்.
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
"வஞ்சிக்கோட்டை வாலிபன்' பி.எஸ்.வீரப்பாவின் சிரிப்புக்கும் "வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.' பிரகாஷ்ராஜின் சிரிப்புக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
முன்னது, 2014 எம்.பி. தேர்தல் நேர மோடி. அடுத்தது, 2018-ல் நடந்த 5 மாநிலத் தேர்தல் நேர மோடி. அதாவது, வீரப்பாவினுடையது ஆணவம். பிரகாஷ்ராஜின் சிரிப்பு, விரக்தி.
டி.சந்திரன், ஈரோடு
தோல்வியில்கூட வெற்றிகரமான தோல்வி, தோல்விகரமான தோல்வி என்று உள்ளதா?
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு என்று சொன்னாலும் தோல்வியை ஏற்பதற்கு அரசியல்வாதிகளின் மனது இடம் தருவதில்லை. 1957-ல் தி.மு.க. முதன்முதலாக தேர்தல் களத்தை சந்தித்தபோது அண்ணா, கலைஞர் உள்ளிட்ட 15 பேர் வெற்றி பெற்றார்கள். ஆனால், நாவலர் நெடுஞ்செழியன், கவியரசர் கண்ணதாசன் போன்றவர்கள் தோல்வியடைந்தனர். அண்ணா வெற்றி, கலைஞர் வெற்றி என்று குறிப்பிடப்பட்டபோது, நாவலர் வெற்றி வாய்ப்பை இழந்தார், கவிஞர் வெற்றி வாய்ப்பை இழந்தார் எனத் தோல்விக்கு புது வார்த்தை பிரபலமானது. அது மற்ற கட்சிகளிலும் தொடர்ந்தது. காங்கிரசின் மூத்த தலைவரான குமரிஅனந்தன், "இலக்கியச் செல்வர்' எனப் பெயர் பெற்றவர். அவர் மகளும் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவருமான தமிழிசை, தனது கட்சியின் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், "வெற்றிகரமான தோல்வி' என்கிறார். மத்தியபிரதேசத்தில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பா.ஜ.க. பெற்றது வெற்றிகரமான தோல்வி என்றால், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் மாநிலங்களில் பெற்றிருப்பது படுதோல்விகரமான பெருந்தோல்வி.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு, சென்னை-110
மாநிலத்தைத் தங்கமாக மாற்றுவார் என கனவு கண்டால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், தனது குடும்பத்தைத் தங்கக்குடும்பமாக மாற்றிவிட்டார் என்ற ராகுலின் விமர்சனம்?
தெலங்கானா மக்களிடம் எடுபடவில்லையே! பல நெருக்கடிகள் -பல்வேறு குற்றச்சாட்டுகள் -ஊழல் புகார்கள் இவற்றிற்கிடையிலும் 5 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை மேற்கொண்டதால் மீண்டும் பெரும் வெற்றிபெற்று ஆட்சியை அமைத்திருக்கிறார் சந்திரசேகரராவ். அதன் விளைவு, தனது மகன் கே.டி.ராமராவை கட்சியின் செயல் தலைவராக்கி, அகில இந்திய அரசியலை நோக்கிப் பார்வையைத் திருப்பியிருக்கிறார் ராவ்.
திராதி, துடியலூர், கோவை
சிறந்த பெண் எம்.பி. என்று கனிமொழி கவுரவிக்கப்பட்டுள்ளாரே?
கட்சி கொடுத்த பதவியின் மூலமாக கிடைக்கக்கூடிய வாய்ப்புகளில் மக்கள் நலன் சார்ந்து சிந்தித்து செயல்படுவது கனிமொழியின் பலம். பெண்கள், திருநங்கையர், ஒடுக்கப்பட்டோர் என விளிம்பில் உள்ளவர்களுக்கான குரலாக நாடாளுமன்றத்திலும் வெளியிலும் தன்னைப் பதிவு செய்ததற்கு கிடைத்துள்ள பாராட்டு இது. டெல்லி அளித்த கவுரவம் போல தமிழ்நாட்டிலும் கிடைக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
பி.சாந்தா, மதுரை-14
போதிய தண்ணீர் இல்லாததால், வந்த பறவைகள் திரும்பிச் செல்லும் வேடந்தாங்கல் எதை நினைவூட்டுகிறது?
அ.ம.மு.க.
______________
காந்தி தேசம்
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
இந்தியாவில் காந்தியை மீறி பட்டேலுக்கு சிலை வைக்கும் நிலையில், வெளிநாடுகளில் காந்திக்கு சிலை இருக்கிறதா?
இந்தியாவின் சர்வதேச அடையாளம், காந்தி. வெள்ளைக்காரர்களை எதிர்த்து சத்யாகிரகம் செய்த அவருக்கு அதே வெள்ளைக்காரர்கள் இங்கிலாந்து நாட்டில் சிலை வைத்துள்ளார்கள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரியா எனப் பல நாடுகளிலும் காந்திக்கு சிலை உள்ளது. அவரது சத்யாகிரகப் போராட்டம் தொடங்கிய தென்னாப்பிரிக்காவிலும் காந்திக்கு சிலை உண்டு. உலக நாடுகளின் பார்வையில் காந்தி பலவாறு ஈர்க்கப்பட்டிருக்கிறார். எனினும், காலமாற்றங்களுக்கேற்ப விமர்சனங்களும் வெளிப்படுகின்றன. அதன் வெளிப்பாடுதான், கானா நாட்டின் தலைநகரான அக்ராவில் உள்ள கானா பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த காந்தி சிலை அகற்றப்பட்டிருக்கும் அண்மை நிகழ்வு.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடு கானா. கறுப்பின மக்கள் நிறைந்துள்ள இடம். அமெரிக்க கறுப்பின மக்களின் விடுதலையை முன்னெடுத்த மார்ட்டின் லூதர்கிங், தென்னாப்பிரிக்க விடுதலை வீரர் நெல்சன் மண்டேலா போன்ற கறுப்பினத் தலைவர்களை ஈர்த்தவர் காந்தி என்பதால் கானா பல்கலைக்கழகத்திலும் சிலை வைக்கப்பட்டது. எனினும், தென்னாப்பிரிக்க எழுத்தாளர்கள் இருவர் 2015-ல் எழுதிய ஒரு புத்தகத்தில், ""கறுப்பின -பூர்வகுடி மக்களுக்கு சமமாக தென்னாப்பிரிக்காவில் வாழும் நாகரிகமான இந்தியர்களையும் நடத்துவதை ஏற்க முடியாது'' என 1904-ஆம் ஆண்டில் காந்தி எழுதியிருப்பதை எடுத்துக்காட்டியுள்ளனர். இதனடிப்படையில் காந்தியை "நிறவெறியாளர்' என்றும், அவரது சிலையை வைத்திருப்பது தங்களின் சுயமரியாதைக்கு அவமானம் என்றும் கூறி, இரவோடு இரவாக அகற்றிவிட்டனர். நிறவெறிக்கு எதிராகப் போராடிய காந்திக்கே இந்த நிலைமை என்றால் அவரது சீடர்களான வலதுசாரி சிந்தனை கொண்ட பட்டேல் போன்றவர்களின் நிலை?