நித்திலா, தேவதானப்பட்டி
தி.மு.க. இப்போதும் குடும்பக் கட்சிதானா?
எப்போதும் குடும்பக் கட்சிதான். அதுதான் அதன் பலமும் பலவீனமும். பலம் -குடும்பம் போல கொள்கை உறவு கொண்ட உடன்பிறப்புகள். பலவீனம் -குடும்பத்திலிருந்து தலையீடு செய்யும் மகன், மருமகன், இத்யாதிகள்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு, சென்னை-110
"அனுமர் தலித்' என்று பிரச்சாரம் செய்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நோக்கி, "அப்படியென்றால் அனுமர் கோவில்களில் தலித்தை அர்ச்சகராக்க முடியுமா?' எனக் கேட்டிருக்கிறாரே பீம் சேனை தலைவர்?
அனுமர் வாலில் வைத்த நெருப்புபோல ஆகிவிட்டது உ.பி. முதல்வரின் தேர்தல் பிரச்சாரப் பேச்சு. "ராமருக்கு உதவி செய்த அனுமர் ஒரு தலித்' என யோகி பேச, இன்னொருவரோ, "அனுமர் தலித் அல்ல.. அவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்' எனச் சொல்ல, நிலைமை உச்சகட்டத்திற்குப் போய், அனுமரின் சாதிச் சான்றிதழ் கேட்டு ஓர் ஆர்வலர் விண்ணப்பித்திருக்கிறாராம். ஆனால், உ.பி. முதல்வர் வலியப் போய் பேசிய மாநிலங்களில் எல்லாம் பா.ஜ.க. ஆட்சியை இழந்ததுதான் மிச்சம்.
எம்.சண்முகம், கொங்கணாபுரம்
நடிகை அமலாபால் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு "கள்' பாட்டிலுடன் இருந்த ஸ்டில் பற்றி?
"கள்' தமிழரின் பானம்... டாஸ்மாக்குக்குப் பதில் கள்ளுக்கடைகளைத் திறக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்படும் நிலையில், அமலாபாலை அதற்கான அம்பாசிடராக்கலாம்.
தூயா, நெய்வேலி
"பட்டியல் இன மக்களுக்கான தமிழகத்தின் 7 எம்.பி. தொகுதிகளில் பெரிய கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரிக்காமல், தலித் கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைந்து வேட்பாளரை நிறுத்தினால், வெற்றிபெறச் செய்ய தயார்' என்கிறாரே இயக்குநர் பா.ரஞ்சித்?
நல்ல யோசனைதான். தனி தொகுதிகளில் அதிகபட்சம் 40 முதல் 45 சதவீதம் வரை பட்டியல் இன மக்களின் வாக்குபலம் இருக்கிறது. இவற்றை மொத்தமாக வாங்கினால் தலித் கட்சியின் வேட்பாளர் எளிதாக வெற்றிபெறலாம். ஆனால், இந்த வாக்குகளில் கணிசமானவை பெரிய கட்சிகளுக்கு ஆதரவாக உள்ளன. அவற்றை மாற்றி, தலித் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் என்றால், அதிலும் ஏராளமான கட்சிகள் உள்ளன. அதில் ஒற்றுமை உருவாகி, ஒற்றை வேட்பாளரை முன்னிறுத்தினால் ரஞ்சித்தின் கனவு நிறைவேறும். அதைவிடுத்து, தானும் ஒரு தலைவராக வேண்டும் என ஒவ்வொருவரும் நினைத்தால் பட்டியல் இன மக்களின் வாக்குகள் ஒருங்கிணைப்பு என்பது கானல் நீர்தான்.
ராகுலன், கும்பகோணம்
"மனிதர்களின் சாதிக்கேற்ற குணம் அவர்களின் மரபணுவில் இருக்கிறது' என்கிறாரே அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்?
அமைச்சரவையில் இன்னொரு ஆபத்தான விஞ்ஞானி இவர். சாதி பற்றிய அவரது பேச்சு ஒரு புறம் இருக்கட்டும். எந்தக் கட்சிக்குச் சென்றாலும் பதவி வாங்கிவிடும் குணம் இவரது மரபணுவில் இருக்கிறதோ என்பதைத் தனியாக ஆராய்ச்சி செய்யவேண்டும்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
சர்க்கஸ்களுக்கு மவுசு குறைந்தது ஏன்?
அரசியல் கட்சிகள் அதிகமானதால்.
________________
காந்தி தேசம்
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
தீண்டத்தகாதவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று பாகுபடுத்தப்பட்ட நம் நாட்டு மக்களை "ஹரிஜன்' என்று மகாத்மா காந்தி குறிப்பிட்டதால் என்ன மேன்மை?
காந்தி ஒரு மத நல்லிணக்கவாதி. எல்லா மதங்களையும் நேசித்தார். தன் மதத்தின் மீது உறுதியான நம்பிக்கைக்கொண்டிருந்தார். தனது மதமான இந்து மதத்தில்தான் வருணாசிரம தர்மம் என்ற பெயரில் சாதிப் பிரிவுகள் இருக்கின்றன என்பதும், அதில்தான் குறிப்பிட்ட சாதியினரை தீண்டத்தகாதவர்கள் -தாழ்த்தப்பட்டவர்கள் என ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். அதனைத் தகர்ப்பதற்கு ஜோதிபாபூலே, பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் வேறு. காந்தி கடைப்பிடித்த வழிமுறை வேறு. தாழ்த்தப்பட்ட மக்களை "கடவுளின் குழந்தைகள்' என்ற அர்த்தத்தில் "ஹரிஜன்' என அழைத்தார். ஹரி என்பது இந்துக் கடவுள். குஜராத்தி கவிஞர் நரசிங் மேத்தா தனது பாடலில் பயன்படுத்திய இச்சொல்லைப் பயன்படுத்திக்கொண்டதாக காந்தி குறிப்பிட்டுள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களை இந்து மதத்தில் உள்ள மற்ற சாதி மக்கள் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில், ஹரிஜன சேவா சங்கங்களை காந்தி தொடங்கினார். அதில் உயர் சாதிக்காரர்களைப் பங்கேற்கச் செய்தார். "ஹரிஜன்' என்ற பெயரில் பத்திரிகையும் நடத்தினார். தனது ஆசிரமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தினரைத் தங்க வைத்தார். காந்தியின் பார்வையில் ஒடுக்கப்பட்டோர் நலம் என்பது ஹரிஜனங்களுக்குத் தொண்டு செய்வதாக இருந்தது. அவர்களின் உரிமைகளையும் அவர்களுக்கான சம வாய்ப்புகளையும் பெற்றுத்தர காந்தியின் முயற்சி போதுமானதாக இல்லை. அதனால்தான் ஹரிஜன் என காந்தி அழைப்பதை அம்பேத்கர் விமர்சித்தார். காந்தி காலத்திற்குப் பிறகு ஹரிஜன் என்ற சொல் வலுவிழந்து தலித் என்ற வார்த்தை வலுப்பெற்றது. நமது அரசியல் சட்டமும்கூட, ஹரிஜன் என்ற வார்த்தையைத் தவிர்த்து, பட்டியலின மக்கள் (நஸ்ரீட்ங்க்ன்ப்ங்க் ஸ்ரீஹள்ற்ங்) என்றே குறிப்பிடுகிறது.