பி.சாந்தா, மதுரை-14

நடப்பு 2018-19ஆம் நிதி ஆண்டில் நிர்ணயித்த இலக்கைத் தாண்டி நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் என்ற "இந்தியா ரேட்டிங்ஸ்' நிறுவனத்தின் மதிப்பீடு?

கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? இந்தியாவில் தற்போது இருப்பது கார்ப்ப"ரேட்'டிங் மட்டும்தான்.

எஸ்.பூவேந்தஅரசு, சின்னதாராபுரம்

Advertisment

இந்திராகாந்தி காலத்தில் எம்.ஜி.ஆருக்கு இருந்ததாகச் சொல்லப்படும் வருமானவரித்துறை மிரட்டல்கள், அரசியல் வசனம் பேசும் இன்றைய தமிழ் நடிகர்களுக்குக் கிடையாதா?

எம்.ஜி.ஆர். ஓர் அரசியல் இயக்கத்தில் 20 ஆண்டுகள் பங்கேற்று, தனக்கான செல்வாக்கைப் பெற்றிருந்தவர். சினிமாவில் அவர் டம்மி கத்தியைப் பயன்படுத்தினாலும் அரசியல் களத்தில் அவர் கையில் "வாக்கு' எனும் "வாள்' இருந்தது மத்திய அரசுக்குத் தெரியும். தற்போது வீரவசனம் பேசும் பலரும் அட்டைக்கத்திகள்தான். ஆனால், அவற்றை ஊடகங்கள் மூலம் சாணை பிடிக்க பெருமுயற்சி எடுக்கப்படுகிறது. மிரட்டல்களின் தன்மையும் மாறியிருக்கிறது.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

Advertisment

உலகம் முழுவதும் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் அவர்களின் வீடு என்று ஐ.நா.வின் ஆய்வு குறிப்பிடுவது பற்றி?

தங்கத்தால் செய்யப்பட்ட கூண்டாகவே இருந்தாலும் பறவைகளுக்கு அது சிறைதான். வீடு என்பது ஆண்-பெண் இருவரின் எண்ணங்களும் ஒன்றையொன்று உரசாமல் சிறகடிக்கும் வானமாக அமையவேண்டும். வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதர்கள் உள்ளவரை வீடு என்பது கூண்டுதான்.

mavalianswers

நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை, குமரி முனை வள்ளுவர் சிலை, குஜராத்தின் பட்டேல் சிலை ஒப்பிடுக.

அமெரிக்க சுதந்திரதேவி சிலை பிரான்ஸ் நாடு வழங்கிய அன்பளிப்பு. குஜராத்தின் பட்டேல் சிலை உலகின் பல பகுதிகளிலிருந்து பெறப்பட்ட நிதி வசூலின் தயாரிப்பு. ஆழிப்பேரலையை எதிர்கொண்டு கம்பீரமாக நிற்கும் குமரி முனை வள்ளுவர் சிலை தமிழரின் திறன் காட்டும் கலைப்படைப்பு.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு, சென்னை-110

"அனுமர் தலித்' என்று சொன்ன உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நோக்கி, "அப்படியென்றால் அனுமர் கோவில்களில் தலித்தை அர்ச்சகராக்க முடியுமா?' எனக் கேட்டிருக்கிறாரே பீம் சேனை தலைவர் சந்திரசேகர ஆசாத்?

அனுமர் வாலில் வைத்த நெருப்புபோல உ.பி. முதல்வர் பேச, அது ஊரெங்கும் பல விதங்களில் பரவுகிறது. அனுமர் தலித் அல்ல, அவர் பழங்குடி இனத்தனவர் என இன்னொரு வாதம் வைக்கப்பட, அனுமரின் சாதிச் சான்றிதழ் கேட்டு ஓர் ஆர்வலர் விண்ணப்பித்திருக்கிறாராம்.

வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி-17

இயற்கையை எதிர்த்து மனிதன் வெல்ல முடியாது என்பது தெரிந்தும், கஜா புயல் போன்ற இயற்கைப் பேரழிவுகளைக் காரணம் காட்டி ஆளும் அரசை விமர்சிப்பது சரியா?

இயற்கைக்கும் மனித வாழ்வுக்குமான போராட்டமும் சமரசமும் அதன் விளைவாக ஏற்படக்கூடிய சமநிலையுமே மனித நாகரிகத்தைத் தொடரச் செய்கிறது. பேரிடர் பேரழிவுகளை ஆட்சியாளர்களால் ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது. அவர்களை மட்டுமே குற்றம்சாட்டுவது காழ்ப்புணர்வாகும். அதேநேரத்தில், "எடப்பாடியைப் பார்த்து கஜா புயல் கூஜா புயல் ஆகிவிட்டது', "மம்மியைப் பார்த்து சுனாமியே டம்மி ஆகிவிட்டது' என்கிற அறிவுஜீவி அமைச்சர்களின் வார்த்தைகளைக் கேட்கும்போது, இயற்கைப் பேரிடரைவிட பெரும் பாதிப்புக்குள்ளாகும் மனது எதிர்வினையாற்றாதா?

எம்.முகமது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

பொருளாதாரக் குற்றவாளிகளைப் பிடிக்க பிரதமர் மோடி 9 அம்ச அறிக்கையை ஜி-20 மாநாட்டில் தாக்கல் செய்துள்ளாரே?

விஜய மல்லையாவும், நீரவ் மோடியும் தயாரித்துக் கொடுத்த அறிக்கையோ!?

___________

காந்தி தேசம்

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

தமிழ்நாட்டின் மீது காந்திஜி மிகுந்த மதிப்பு வைத்திருந்தாரா?

காந்தியின் சத்யாக்கிரகப் போராட்டத்தில் தமிழ்நாடு -தமிழர்களின் தாக்கம் தனித்துவமானது. தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக காந்தி நடத்திய போராட்டத்தில் அவருக்கு அங்கிருந்த தமிழர்கள் துணை நின்றார்கள். குறிப்பாக, தில்லையாடி வள்ளியம்மை என்ற இளம்பெண் காந்தி அறிவித்த போராட்டத்தில் பங்கேற்று சிறைப்பட்டு உயிர்நீத்தார். ஒப்பந்தத் தொழிலாளியாக இருந்த தமிழர் பாலசுந்தரம் தனது முதலாளியால் மூர்க்கமாகத் தாக்கப்பட்டு பற்கள் உடைக்கப்பட்ட நிலையில், அவருடைய வழக்கை பாரிஸ்டர் காந்தி கையாண்டு சமரச அடிப்படையில் நீதி கிடைக்கச் செய்தார். கோட்-சூட் அணிந்திருந்த காந்தி பின்னர் "அரை நிர்வாணப் பக்கிரி' எனப்படும் அளவுக்கு இடுப்பில் ஒரு வேட்டியும் தோளில் ஒரு துண்டும் மட்டுமே அணியக் காரணமானதும் தமிழ்நாட்டு விவசாயிகளின் உடைதான். தமிழ்மீது கொண்ட ஆர்வத்தால் திருக்குறள் கற்கத் தொடங்கியதுடன், மோ.க.காந்தி என தமிழில் கையெழுத்துப் போடவும் பழகிக்கொண்டார். அவருக்கு இப்பயிற்சி அளித்தவர் பட்டியலின சமூகத்தின் தலைவர் இரட்டைமலை சீனிவாசன். காந்தி தனது மகனுக்கு ராஜாஜியின் மகளை மணம் முடித்ததன் மூலமாகத் தமிழ்நாட்டுடன் அவர் சம்பந்தி உறவும் கொண்டிருந்தார். காந்தி அறிவித்த கள்ளுக்கடை மறியல் போராட்டம் உச்சக்கட்டத்தைத் தொட்டபோது, அந்தப் போராட்டத்தை நிறுத்துமாறு அரசாங்கம் அவரிடம் வலியுறுத்தியது. அப்போது காந்தி, "இந்தப் போராட்டத்தை நிறுத்துவது என் கைகளில் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பெண்களின் கைகளில் உள்ளது'’என்றார். பெரியாரின் மனைவி நாகம்மையும் பெரியாரின் சகோதரி கண்ணம்மையும்தான் அந்தப் பெண்கள். அந்தளவுக்கு காந்தியின் உத்தரவை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தது, அப்போது காங்கிரசில் இருந்த பெரியார் குடும்பம். இப்படி காந்தியின் வாழ்வுடன் தமிழ்நாட்டுக்கு பல வகையிலும் தொடர்புண்டு. மதிப்புண்டு.