அன்பாழி, பெரியமதியாக்கூடலூர்

ஜெயலலிதா வழிநடக்கும் அரசு எனில், ஆறு மாதத்திற்கு ஒருமுறை யாவது மந்திரிசபை மாற்றம் இருந்திருக்க வேண்டுமே?

ஜெயலலிதா தனது ஆட்சியில் அடிக்கடி மந்திரிகளை மாற்றி அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் வாழ வைப்பார். எடப்பாடியோ மந்திரிசபையை மாற்றாமலேயே அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்களை மந்திரிகள் மூலம் வாழ வைக்கிறார்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

Advertisment

உ.பி.யை சேர்ந்த 1398 விவசாயிகளின் ரூ.4.05 கோடி கடனை அடைத்திருக்கிறாரே அமிதாப் பச்சன்?

அந்த மாநிலத்தில் ஆட்சியில் இருப்பவர் களுக்கு சூடு போட்டது மட்டுமல்ல, அரசியலுக்கு வர நினைக்கும் நடிகர்களுக்கும், எப்படித் தொடங்குவது என கோடு போட்டுக் காட்டியிருக்கிறார் நடிகர் அமிதாப்பச்சன். அவர் 1984-ல் உ.பி.யின் அலகாபாத் தொகுதியிலிருந்து எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அரசியல் சித்து விளை யாட்டுகளில் பலியாகி, பதவி விலகி ஒதுங்கியவர்.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

Advertisment

"பாலியல் புகார்களை விசாரிக்க எல்லா கட்சிகளும் குழு அமைக்க வேண்டும்' என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியிருப்பது குறித்து?

யோசனை நன்றாகத்தான் இருக்கிறது. சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்ள எந்தக் கட்சி தயாராக இருக்கிறது? தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, "ஜெயலலிதா இருந்தவரை அ.தி.மு.க.வில் பாலியல் புகார்கள் எழுந்தால், அமைச்சர்கள்கூட தப்ப முடியாது' என்ற நிலை இருந்தது. இப்போது அந்தக் கட்சியிலும் இல்லை. மற்ற பெரிய கட்சிகளிலும் சுத்தமாக இல்லை.

எம்.கல்யாணசுந்தரம், கும்பகோணம்

""உலக சந்தை அடிப்படையில் விலையேற்றம் ஏற்படுகிறது. மத்திய அரசு காரணமல்ல'' என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளாரே, கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதியில் இவர் போட்டியிட்டபோது காங்கிரஸ் ஆட்சியின் விலையேற்றம் பற்றி பேசாமல்தான் வெற்றி பெற்றாரோ?

ஆளுங்கட்சியாக இருந்தால் விலைவாசி உயர்வுக்கு சர்வதேச நிலவரம், உலகப் பொருளா தாரச் சூழல்களை காரணமாகக் காட்டுவதும், எதிர்க்கட்சியாக இருந்தால் விலைவாசியைக் கட்டுப்படுத்தக் கோரி ஆளுங்கட்சியை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதும் அரசியலில் சகஜம். பொன்.ராதாகிருஷ்ணன் நீண்டகால அரசியல்வாதி யாயிற்றே!

மல்லிகா அன்பழகன், சென்னை-78

"இந்தியர்கள் பேச்சில் வல்லவர்கள்' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளாரே?

அடுக்கடுக்காக எழும் குற்றச்சாட்டுகள், ஊழல் புகார்கள் இவற்றுக்கு சரிவர எதுவும் பேச முடியாமல் தவிக்கும் டிரம்ப், இந்தியர்களின் பேச்சாற்றலைப் பகடி செய்கிறார்.

எஸ்.பூவேந்த அரசு, பெரியமதியாக்கூடலூர்

"கல்லாதவனிடம் இருக்கும் செல்வம், கற்றறிந்தவரிடமிருக்கும் வறுமையைவிடக் கொடியது' என்று வள்ளுவர் கூறியுள்ளது, நமது அரசியல்வாதிகளைப் பற்றித்தானா?

அரசியல்வாதிகள் நன்கு கற்றுத்தேர்ந்து, செல்வத்தைக் குவித்தவர்கள். வள்ளுவருக்கு வறுமை என்றால் வாக்குச்சாவடிக்கு வரட்டும். அரசியல்வாதிகள் எப்படி கவனிக்கிறார்கள் என்று பாருங்கள்.

எம்.செல்லையா, சாத்தூர்.

"நாட்டில் ஜனநாயகம் அழுகிறது' என்கிறாரே பிரதமர் மோடி?

ஜனங்கள் அழுகிறார்கள். ஜனநாயகம் அழுகுகிறது -கடந்த நான்கரை ஆண்டுகளாக.

______________

காந்தி தேசம்

mavalianswers

த.சத்தியநாராயணன், அயன்புரம்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் படேல் சிலைக்கு இணையாக காந்திஜிக்கு சிலை வைப்பார்களா?

"கண்ணாடியைத் திருப்புனா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்?' என்கிற திரைப்பட நகைச்சுவை போலத்தான், பட்டேலுக்கு சிலை வைத்தால் மோடியின் சாதனையைப் பாராட்டி இந்திய மக்கள் மீண்டும் பா.ஜ.க.வுக்கு வாக்களித்து நாடாளுமன்றத்தில் தாமரையை மலர வைத்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கையும்! பா.ஜ.க.வின் வியூகங்களுக் கேற்ப தேர்தல் பிரச்சாரத்தில் தன்னையும் மாற்றிக்கொண்டு வரும் காங்கிரஸ் கட்சி, "காந்திக்கு பிரம்மாண்ட சிலை' என்ற வாக்குறுதியைத் தருமா எனத் தெரியவில்லை. அதற்கான தேவையுமில்லை. காந்தியும் பட்டேலும் காங்கிரஸ்காரர்கள்தான். பா.ஜ.க. வில் இப்படி சிலை வைக்கும் அளவுக்கான தலைவர்கள் யாரும் இல்லை என மோடி அண்ட் டீம் நினைத்திருக்கலாம். மத நம்பிக்கை கொண்ட தலைவரான பட்டேலை முன்னிறுத்து வதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் களான நேரு, இந்திரா, ராஜீவ் என குடும்ப அரசியலுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்கத் திட்டமிடலாம். எனினும், நேருவும் பட்டேலும் காந்தியின் வார்ப்புகள்.

இந்தியா சுதந்திரமடைந்தபோது காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் பட்டேல். ஆனால், இந்தியாவின் பிரதமர் பதவிக்கு பட்டேலை முன்னிறுத்தாமல் நேரு பிரதமராக ஆதரித்தவர் காந்தி. இந்தியாவின் பன்முகத் தன்மையையும் ஜனநாயக நெறிமுறைகளையும் அறிந்தவரான நேரு, உலக அரங்கிலான தலை வர்களையும் அறிந்தவர். சர்வதேச நிலைமைகளை உணர்ந்தவர். அதனால்தான் பட்டேல், ராஜேந்திர பிரசாத் போன்ற மதப்பிடிப்புள்ள தலைவர்களைக் கடந்து, மத நல்லிணக்கவாதியான நேருவை முன்னிறுத்தினார் காந்தி. அதனால்தான் காந்தியை விட்டுவிட்டு பட்டேலுக்கு சிலை வைக்கிறது பா.ஜ.க.