அ.குணசேகரன், புவனகிரி
புயல் நிவாரணமாக நடிகர்கள் நிதி கொடுத்து உதவும் அளவிற்கு ஏன் நமது முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அனைவரும் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து நிதி கொடுத்து உதவவில்லை?
சொந்தப் பணம் என்று சொன்னால், "அந்தப் பணம் எப்படி அவர்களுக்கு சொந்தமானது' என்ற கேள்வி வரும். வில்லங்கத்தை எதற்கு விலைக்கு வாங்க வேண்டும் என நினைத்து தவிர்த்திருப்பார்கள்.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை 14
நாய்க்கறி உணவு உடலுக்கு ஆபத்தை விளைவிக்குமா?
மாமிச உணவில் புரதம், கொழுப்பு உள்ளிட்டவை அடங்கியிருக்கும். புரதம் மிகுந்த அசைவ உணவு உடலுக்குத் தெம்பு தரும். கொழுப்பைக் கரைக்கும் திறன் இல்லாவிட்டால் சிக்கல் ஏற்படும். இதனை உணர்ந்த அசைவப் பிரியர்களால் நாய் என்ன, பேய் கிடைத்தால்கூட பக்குவமாகச் சாப்பிடமுடியும். ஆனால், ஆட்டுக்கறி என்ற பெயரில் நாய்க்கறி விற்பதோ, நாய்க்கறி என்ற பெயரில் நரிக்கறி விற்பதோ தவறானது. ஆட்டுக்கறியை நாய்க்கறி என வதந்தி பரப்புவது அதைவிடத் தவறானது.
பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை 118
அண்ணா, கலைஞர் போன்ற சிறந்த பேச்சாளர்கள் வரிசையில் திருமாவளவனையும் சேர்த்துக் கொள்ளலாமா?
கட்சித் தலைவர்களில் வைகோ, திருமாவளவன், சீமான் உள்ளிட்ட பலர் சிறந்த பேச்சாளர்களாக இருக்கிறார்கள். அண்ணாவும் கலைஞரும் தங்கள் இயக்கத்தின் கொள்கைகளையும் தத்துவங்களையும் பேச்சாற்றல் மூலம் மக்கள் மனதில் பதித்து அரசியல் களத்தில் வெற்றி கண்ட திராவிட இயக்கத் தலைவர்கள். திருமாவின் ஆற்றல் மிக்க பேச்சில் திராவிட இயக்கத் தலைவர்களின் பிரதிபலிப்பு வெளிப்படுகிறது.
ஏழாயிரம்பண்ணை எம். செல்லையா, சாத்தூர்
எம்.ஜி.ஆர்., சிவாஜி, முத்துராமன், நம்பியார் இவர்களில் மன்னர் வேடத்தில் யார் பொருத்தமானவர்?
நம்பியார் அணிந்த மன்னர் வேடம் என்பது இறுதிக் காட்சியில் தோற்பதற்காகவே சித்தரிக்கப்பட்டது. இறைவனின் திருவிளையாடலையும் நக்கீரரின் தமிழ்ப்பற்றையும் வெளிப்படுத்துவதற்கு முத்துராமன் மன்னர் வேடம் போட வேண்டியிருந்தது. கர்ணனா, வீரசிவாஜியா, ராஜராஜசோழனா, வீரபாண்டிய கட்டபொம்மனா அது இதிகாசமாக இருந்தாலும் வரலாறாக இருந்தாலும் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தவர் சிவாஜி மட்டுமே. எம்.ஜி.ஆரோ மக்களாட்சிக் காலத்தில் மன்னாதி மன்னனாக விளங்கியவர்.
பி.மணி, குப்பம், ஆந்திரா
கன்னட திரையுலக ஜாம்பவான் நடிகர் அம்பரீஷ் மறைவு குறித்து?
"டார்லிங்.. டார்லிங்.. டார்லிங்' எனத் தமிழில் "ப்ரியா' படத்தின் பாடல் காட்சியில் தோன்றியவர் கன்னட ரசிகர்களின் பிரியத்துக்குரிய டார்லிங்காக இருந்து அரசியல் களத்திலும் ஒளிர்ந்தவர்.
எஸ்.பூவேந்தஅரசு, பெரியமதியாக்கூடலூர்
தமிழகத்தின் தலைமகன் (முதல்வர்) ஆவதற்கான தகுதி மு.க.ஸ்டாலினிடம் உள்ளதா?
தகுதி உள்ளவர்கள் மட்டும்தான் அந்தப் பதவிக்கு வருகிறார்களா என்ன?
காந்தி தேசம்
மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை
மகாத்மா காந்தியின் புகழுக்குப் பிறகு, "எல்லை காந்தி' கான் அப்துல் கபார் கான், "காலா (கறுப்பு) காந்தி' காமராஜர், "தென்னாட்டு காந்தி' அண்ணா எனப் பட்டியல் நீண்டதற்கு என்ன காரணம்?
காந்தி கடைப்பிடித்த வழிமுறைகள் வித்தியாசமானவை. விமர்சனங்களுக்கு உட்பட்டாலும் அவை ஏற்படுத்திய தாக்கம் தவிர்க்க முடியாதவை. ஆங்கில ஆதிக்கத்தின்கீழ் இருந்த தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த-பணியாற்றிய இந்தியர்கள் அனைவரும் கூலி, சாமி என்றுதான் அழைக்கப்பட்டனர். "சாமி' என்ற தமிழ்ச் சொல் அப்போது இந்தியர்களை இழிவுபடுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டதாக தனது சுயசரிதையான சத்தியசோதனையில் குறிப்பிடுகிறார் காந்தி. பாரிஸ்டர் பட்டம் பெற்ற வழக்கறிஞரான அவரையும் "கூலி பாரிஸ்டர்' என்றே அழைத்தனர். முதல் வகுப்பில் பயணித்ததற்காக மேரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் கீழே தள்ளப்பட்ட காந்தி பின்னர் பிரிட்டோரியாவுக்குப் பயணம் செய்யும்போதும் முதல் வகுப்பில் பயணிக்கவே விரும்பினார். ஆனால் அங்குள்ள ரயில்வே விதிகளின்படி இந்தியர்களுக்கு முதல் வகுப்பு டிக்கெட் வழங்கப்படுவதில்லை என்ற விவரம் காந்தியிடம் தெரிவிக்கப்பட, அவர் ஸ்டேஷன் மாஸ்டருக்கு கடிதம் எழுதி, நேரில் சந்தித்து முதல் வகுப்பு டிக்கெட் கோரினார். அந்த ஸ்டேஷன் மாஸ்டர் ஆங்கிலேயர் அல்ல. ஹாலந்து நாட்டுக்காரர். அதனால், காந்தியின் கோரிக்கையை சில நிபந்தனைகளுடன் ஏற்று முதல் வகுப்பு டிக்கெட் கொடுக்கிறார். பிரிட்டோரியாவுக்கான ரயில் பயணத்தில் காந்தியை பரிசோதகர் மூன்றாம் வகுப்பு பெட்டிக்குப் போகச் சொன்னபோதும் அவர் மறுத்துவிடுகிறார். அவருடன் முதல் வகுப்பில் பயணித்த ஆங்கிலேயர், "எனக்கு இந்த இந்தியருடன் பயணிப்பதில் ஆட்சேபணையில்லை' எனத் தெரிவிக்க, "கூலியுடன் பயணம் செய்ய நீங்கள் விரும்பினால் எனக்கென்ன கவலை' எனப் பரிசோதகரும் விட்டுவிடுகிறார்.
பிரச்சினையின் தன்மையை உணர்ந்து, அதனைத் தீர்ப்பதற்கான சட்ட வழிமுறைகளைக் கையாண்டு, மாற்றுக் கருத்துள்ளோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பொறுமையான அணுகுமுறையைக் கடைப்பிடித்தவர் காந்தி. ஏறத்தாழ அதேபோல் உறுதியுடன் செயல்பட்டவர்களுக்குத்தான் "எல்லைகாந்தி', "காலாகாந்தி', "தென்னாட்டுக் காந்தி' என்ற அடைமொழி கிடைத்தது.