வி.கார்மேகம், தேவகோட்டை
குஜராத்தில் 597 அடி படேல் சிலையை அடுத்து, அயோத்தியில் 725 அடி உயர ராமர் சிலை நிறுவப்பட இருக்கிறதே?
அண்ணாந்து பார்த்து ஆச்சரியப்படக்கூடிய வகையில் சாதனைகள் இருக்க வேண்டும் என நினைத்து ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் சிலைகளை அமைக்கிறது பா.ஜ.க. அரசு. ஆனால், 2014 எம்.பி. தேர்தலின்போது மோடி அளித்த வாக்குறுதிகளும் அவை ஏற்படுத்திய ஏமாற்றங்களும் சிலைகளைவிட பல மடங்கு உயர்ந்திருக்கின்றன. 2019 எம்.பி. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அந்த சாதனைதான் மக்கள் மனதில் பதிந்திருக்கிறது.
தூயா, நெய்வேலி
மாவலியை சமீபத்தில் துயரப்பட வைத்த மரணம் எது?
எல்லா மரணங்களும் துயரமானவைதான். அவற்றிலிருந்து மீள்வதுதான் மனித வாழ்வின் இலக்கணம். அண்மையில் மூவரின் மரணங்கள் அவர்களின் பெரும் உழைப்பை மனதில் நிழலாடச் செய்தன.
1.கல்வெட்டுகளில் உள்ள பழந்தமிழ் (பிராமி) எழுத்துகளைத் தொகுத்தும்-சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதை உறுதிப்படுத்தியும் வரலாற்றுத்தளத்தில் செம்மையாகப் பணியாற்றிய அறிஞர் ஐராவதம் மகாதேவன்.
2.பழம்பெருமைகள் மட்டும் போதாது, இன்றைய அரசியல் -சமூக -பொருளாதாரச் சூழலுக்கேற்ற போராட்ட குணத்தால் உரிமைகளை மீட்க வேண்டும் எனத் தொழிலாளர்களை ஒன்றிணைப்பதில் முனைப்பு காட்டி சிறைப்பட்டும் தலைமறைவாக வாழ்ந்தும் தீவிரமாக இயக்கம் கட்டிய நக்சல்பாரி தோழர் ஏ.எம்.கோதண்டராமன் (ஏ.எம்.கே.) 3. ஆயுதங்கள் இல்லாமல் ஜனநாயக வழியில் மக்களைத் திரட்டி-அரசியல்மயப்படுத்தி உரிமைகளை வெல்லலாம் என்ற அடிப்படையில் நிலவுடைமையாளர்களின் பிடியிலிருந்த கீழத்தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டு-சட்டப்படியாக நில மீட்பினையும் உரிமையினையும் பெறுவதில் போராடி வென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கோ.வீரய்யன்.
அன்பு, சாத்தூர்
ராஜஸ்தான் மாநில அமைச்சர் ஒருவர் தனக்கு மக்கள் வாக்களிக்காவிட்டால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டல் விடுத்திருக்கிறாரே?
ராஜஸ்தான் மாநில வீட்டுவசதித்துறை அமைச்சராக இருக்கும் பா.ஜ.க.வின் சாந்த் கிருபளானி, சித்தோர்கர் தொகுதியில் இரண்டுமுறை போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார். மூன்றாவது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுவதால், மக்களைச் சந்தித்து ஓட்டு கேட்கும்போது, “"நான் செய்துள்ள வளர்ச்சிப் பணிகளுக்காக நீங்கள் எனக்கு ஓட்டுப் போட்டு வெற்றிபெற வைக்க வேண்டும். இல்லாவிட்டால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்வேன்' என மிரட்டும் தொனியில் வாக்கு சேகரிக்கிறார். சாய்ஸ், மக்கள் கையில்.
நித்திலா, தேவதானப்பட்டி
நேருவுக்குப் பதில் பட்டேல் பிரதமராகியிருந்தால் பா.ஜ.க.வினர் சொல்வதுபோல இந்தியாவின் நிலை மாறியிருக்குமா?
நாட்டின் நிலையையும் மக்களின் நிலையையும் உணர்ந்து செயல்பட்ட பிரதமர்களில் ஒருவர் வி.பி.சிங். அவரது ஆட்சியை 11 மாதங்களிலேயே கலைத்தது இதே பா.ஜ.க.தான்.
சாரங்கன், கும்பகோணம்
தோழமை-கூட்டணி இரண்டுக்கும் அரசியல் அகராதியில் என்ன வித்தியாசம்?
ஆட்சியில் இருப்பவர்களை அகற்றுவது ஒன்றே நோக்கம் என்று சொன்னால் தோழமை. அப்படி அகற்றுவதற்காக ஆளுக்கு எவ்வளவு சீட்டு போட்டி போடுவது எனக் கேட்டால் கூட்டணி.
___________________
காந்தி தேசம்
தமிழ்ச்சித்தன், புளியங்குடி, நெல்லை மாவட்டம்
காந்திக்கு 150-வது பிறந்தநாள், கார்ல் மார்க்சுக்கு 200-வது பிறந்தநாள். இருவரின் கொள்கைகள் இப்போதும் பொருத்தமானவையாக உள்ளனவா?
காந்தி-கார்ல்மார்க்ஸ் இருவரின் கொள்கைகளும் பல வகையிலும் மாறுபட்டவை. ஆன்ம பலத்தைப் பெருக்கி, சுயராஜ்ஜியம் அடைந்து, அதன் வழியாக ராமராஜ்ஜியம் அடைய நினைத்தவர் காந்தி. பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மூலம் வர்க்கபேதத்தைத் தகர்த்து பொதுவுடைமைச் சமுதாயம் அமைவதற்கான தத்துவங்களை வகுத்தவர் மார்க்ஸ். அதனால்தான், "இழப்பதற்கு எதுவுமில்லை.. அடைவதற்கு ஒரு பொன்னுலகம் இருக்கிறது' என உழைக்கும் வர்க்கத்தை நோக்கிக் கூறினார். காந்தியின் பார்வையில், "முதலாளி-தொழிலாளி என வர்க்க வேறுபாடு இருந்தாலும், பிராமணன்-சூத்திரன்-பஞ்சமன் என வருண வேறுபாடு இருந்தாலும் எல்லாரும் கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள்தான். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அகிம்சை வழியில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும்' என்றார். இரண்டு தலைவர்களுமே இயற்கை நெறிப்படி எல்லா மனிதர்களும் சமமானவர்கள் என்பதிலும் வர்க்கரீதியாகவும், வருணரீதியாகவும் பிரிக்கப்பட்டதென்பது ஆதிக்க மனம் கொண்டோரின் செயற்கையான ஏற்பாடுதான் என்பதிலும் தெளிவாக இருந்தவர்கள்.
இன்றைய சூழலில், காந்தி வலியுறுத்திய கிராமப் பொருளாதாரத்தையும், கார்ல்மார்க்ஸ் வலியுறுத்திய தொழிலாளர்கள் உரிமைகளையும் உலகமய-கார்ப்பரேட் சூழல் முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டது. உள்ளூர் அளவில் இருந்த கைத்தொழில்கள்-சிறுதொழில்கள் அனைத்தும் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. பெருமுதலாளிகளால் நடத்தப்படும் தொழில்களை நம்பியே தொழிலாளர்கள் வாழக்கூடிய நிலை உள்ளது. நிறுவனங்கள் வைத்ததே சட்டம் என்பதால் உழைப்போர் உரிமை கேள்விக்குறியாகி உள்ளது. எப்போது ஒரு தத்துவத்திற்கு நெருக்கடியும் ஆபத்தும் சூழ்கிறதோ அப்போதுதான் அந்தத் தத்துவத்தின் தேவை அதிகரிக்கும். அந்த வகையில் காந்தியின் 150-வது பிறந்தநாளும், கார்ல்மார்க்ஸின் 200-வது பிறந்தநாளும் அவர்களின் கொள்கைகள் குறித்த புதிய வாசிப்புக்கு வழி வகுக்கின்றன.