திராதி, துடியலூர், கோவை-34

"நேரு குடும்பம் அல்லாதவரை காங்கிரஸ் கட்சித் தலைவராக்க தயாரா?' என பிரதமர் வினா தொடுக்கிறாரே?

காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்க நினைக்கும் பா.ஜ.க.வுக்கு, காங்கிரசில் யார் தலைவர் என்பது பற்றி ஏன் இவ்வளவு அக்கறை?

வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர் -திருச்சி-17

Advertisment

"கஜா புயல்' வந்த விதம்? அதை சமாளித்த தமிழக அரசு சாதித்த விதம் எப்படி?

கடற்கரைப் பகுதி தொடங்கி கொடைக்கானல் மலைவரை தன் வீச்சைக் காட்டியிருக்கிறது "கஜா' புயல். அது கரையேறுவதற்கு முன் விடிய... விடிய எச்சரிக்கை விடுத்த அரசு, தன்னை முன்னேற்பாடாக வைத்துக் கொள்ளாமல் நிவாரணப் பணிகளில் முடங்கிப் போய்விட்டது.

ச.புகழேந்தி, மதுரை-14

Advertisment

"கேரள எதிர்க்கட்சியினர் அரசுடன் இணைந்து மழை பாதிப்புக்கு உதவினார்கள். தமிழக எதிர்க்கட்சியினர் அப்படியில்லை' என குற்றம்சாட்டிய தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்கள், கேரள முதல்வர் பினராயி விஜயன் மாதிரி வேட்டியை மடித்துக்கொண்டு களத்தில் மலை, மேடு என பாராமல் ஏறி இறங்காமல் ஹெலிகாப்டரில் ரவுண்டு அடித்தால் போதுமா?

"ஜீபூம்பா போட்டு எல்லாவற்றையும் சரி செய்ய முடியுமா?' எனக் கேட்பவரிடம் இதையெல்லாம் கேட்டால் பதில் கிடைக்குமா?

mavalianswers

நித்திலா, தேவதானப்பட்டி

குத்துச் சண்டையில் 6-வது முறையாக உலகச் சாம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்திருக்கிறாரே இந்திய வீராங்கனை மேரி கோம்?

எதிரி எப்போது அடிப்பானோ எனத் தயங்கிக்கொண்டிருக்காமல் எதிரியைத் திணறடிக்கும் வகையில் கவனமாகவும் திறமையாகவும் செயல்பட்டால் தொடர்ந்து வெற்றிபெறலாம் என்ற தத்துவத்தைப் போதிக்கிறது மேரி கோமின் சாதனை.

பி.மணி, வெள்ளக்கோயில் -திருப்பூர் மாவட்டம்

எலி வலையானாலும் தனி வலை என்பதற்கேற்ப பெரிய கட்சியோ அல்லது சிறிய கட்சியோ தேர்தலில் தனித்து நின்று தனது பலம் என்ன என்று சுயபரிசோதனை செய்ய எந்தக் கட்சியாவது முன்வருமா?

தனிப்பட்ட கட்சிகள் வாங்கும் வாக்குகளின் அடிப்படையில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அடிப்படையிலான தேர்தல் நடைபெறும் காலம் வந்தால் நீங்கள் எதிர்பார்ப்பது ஓரளவு நடக்கும். களத்தில் உள்ளவர்களில் அதிக ஓட்டு வாங்கும் வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்றவர் என அறிவிக்கும் தற்போதைய தேர்தல் முறையில் பரிசோதனை முயற்சிகளுக்கு அரசியல் கட்சிகள் தயாராக இல்லை.

எஸ்.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்

புரிகின்றதோ இல்லையோ கமல்ஹாசனின் பேச்சை செவிமடுத்துக் கேட்பதிலும் ஒரு தனி ரசனை, சுவை இருக்கத்தானே செய்கின்றது?

என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் கேட்கத் தொடங்கி, எதையாவது சொல்லிவிடமாட்டாரா எனக் காத்திருந்து, என்னவோ சொல்கிறாரே என வியந்து, அது என்னவாக இருக்கும் என விளக்கம் தேடுவது சுவையும் சுவாரஸ்யமும் நிறைந்ததுதான்.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

"மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு ஒருபோதும் தருவதில்லை' என்கிறாரே திண்டுக்கல் சீனிவாசன்?

அவர் முன்னாள் எம்.பி. அதே நேரத்தில் அ.தி.மு.க.வின் இன்றைய எம்.பி.க்களாக அரை நூறு பேர் இருக்கிறார்கள். மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெயரும் உண்டு. அவர்கள் யாரும் இந்தக் குரலை உயர்த்தவேண்டிய இடத்தில் உயர்த்தவில்லையே!

___________________

காந்தி தேசம்

mavalianswers

அஜித்விஜய், ராசிபுரம்

மகாத்மா வழிக்குப் பதிலாக நேதாஜி வழியில் இந்தியா சுதந்திரம் பெற்றிருந்தால் நமது நாடு வல்லரசு ஆகியிருக்குமல்லவா?

இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை வேகப்படுத்தினார் காந்தி. தனிப்பட்ட பிரிட்டிஷ் ஆளுமையினருக்கு அவர் எதிராக இல்லை. பிரிட்டிஷ் அரசு இந்தியாவை ஆளக்கூடாது என்ற நிலையை மட்டுமே அவர் முன்னிறுத்தினார். யுத்தத்தில் பிரிட்டன் உள்ளிட்ட நேசநாடுகள் வெற்றி பெறவும் காந்தி விரும்பினார். அதே நேரத்தில் நேதாஜி, தனது இந்திய தேசியப் படையைப் பலப்படுத்தி, பிரிட்டிஷ் ஆட்சியை ஆயுத பலத்துடன் விரட்டுவதில் முனைப்பு காட்டியவர். அதனால் பிரிட்டனுக்கு எதிரான ஹிட்லரின் அச்சு நாடுகளுடன் அவர் நட்புகொள்ள வேண்டியிருந்தது. இரண்டாவது உலகப்போரில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பிரிட்டனுக்கு ஆதரவாகவும் ஹிட்லருக்கு எதிராகவும் களமிறங்கியதால் ஹிட்லர் படை முறியடிக்கப்பட்டது. குருசேத்திரத்தில் கௌரவர் பக்கம் நின்றதாலேயே கர்ணன் தோல்வியுற்றதுபோல நேதாஜி பாணியிலான விடுதலை முயற்சி வெற்றி பெற முடியாமல் போனது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சர்வதேச அளவில் ஏற்பட்ட மாற்றங்களால் பிரிட்டன் தனது காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளுக்கு சுதந்திரம் அளித்தது. அதன் ஆளுகையில் இருந்த மிகப் பெரிய நாடான இந்தியாவும் காந்தி வழிப் போராட்டத்தை பெரியளவில் முன்னெடுத்து சுதந்திரம் பெற்றது. காந்தி வழிபோலவே நேதாஜி வழி, கம்யூனிஸ்ட் தொழிலாளர்கள் போராட்ட வழி என பிரிட்டிஷாருக்கு எதிரான பல முனைத் தாக்குதல் இந்தியாவில் நடந்தது. எனினும் வரலாறு, காந்தியின் தலைமைக்கு சாதகமாக அமைந்தது.