எம்.கல்யாணசுந்தரம், கும்பகோணம்

இட்லரின் நாஜிசமும், முசோலினியின் பாசிசமும் நம் நாட்டில் கைகோர்த்து நடனம் ஆடிக்கொண்டிருக்கின்றன'' என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சொல்கிறாரே?

எதிர்க்கட்சி என்பதால் கார்கேவின் விமர்சனம் அதிகப்படியாகத் தெரியலாம். ஆனால், நாஜிசமும் பாசிசமும் இணைந்து மக்களை அச்சுறுத்திய பேரழிவான இரண்டாம் உலகப் போரைப் போலவே இப்போதும் அச்சுறுத்தலை உண்டாக்கிவருகின்றன மத்திய ஆட்சியாளர்களின் மதவெறியுடனான எதேச்சதிகாரப் போக்கு.

மேட்டுப்பாளை யம் மனோகர், கோவை-14

Advertisment

இந்துக் கடவுள்களில் ஸ்ரீராமர் உள்பட யாரும் பிராமணர் அல்லர் என்ற கருத்து சரியா?

ஆமாம்... அதனால்தான் இந்துத்வா சொல்லும் இந்து மத வரையறையும் இந்த மண்ணின் பன்முகத்தன்மை கொண்ட பண்பாட்டு முறையும் மாறுபடுகின்றன. "எளிய மக்களின் குலசாமிகளுக்குக் கூட "இந்துத்வா' சாயம் பூசுவது சரியா எனக் கேட்கிறார்கள் வரலாறு அறிந்தவர்கள்.

ஜி.மகாலிங்கம், காவல்கார பாளையம்

Advertisment

நகரங்களின் பெயர்களை மாற்று வதால் யாருக்கு என்ன பயன்?

வரலாற்று அடிப்படையில் பெயர்களைச் சூட்டுவதும் மாற்று வதும் அரசியல் பார்வையுடன் நடைபெறுவது உலகம் முழுவதும் நடப்பதுதான். கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் உருவான சோவியத் யூனியனில் செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரம் லெனின்கிராடு ஆனது. கம்யூனிஸ்ட் ஆட்சி வீழ்த்தப்பட்டு, சோவியத் யூனியன் சிதைந்து ரஷ்யா தனிநாடானதும் லெனின்கிராடு மீண்டும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆனது. இந்தியாவில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், மொகலாயர் காலத்தில் சூட்டப்பட்ட நகரங்களின் பெயர்களை மட்டும் குறிவைத்து மாற்றுகிறார்கள். வேதாரண்யம் என்ற சமஸ்கிருதப் பெயரை "திருமறைக்காடு' என்றும் விருத்தாசலத்தை "திருமுதுகுன்றம்' என்றும் தமிழில் மாற்றக்கோரும் நீண்டகால கோரிக்கைக்கு இங்குள்ள பா.ஜ.க.வினர் ஆதரவு தருவார்களா?

அயன்பும் த.சத்தியநாராயணன், சென்னை-72

மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றுசேர்ந்து வருவது ஆன்மிக அரசியலுக்கு எதிரானதா?

ஒவ்வொரு கட்சியிலும் அவரவர் மத நம்பிக்கை கொண்ட அரசியல் பிரமுகர்கள் இருக்கிறார்கள். அத னால், அவர்கள் ஒன்றிணைவதால் ஆன்மிகத்துக்கு எந்த எதிர்ப்பும் ஏற்படாது. ஆன்மிகத்தின் பெயரில் அரசியல் செய்யும் பா.ஜ.க.வுக்கு பலமான எதிர்ப்பு உண்டாகும்.

கே.முரளி, விழுப்புரம்

எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை அகற்ற மு.க.ஸ்டாலின் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றதே ஏன்?

ஆட்சியை அகற்ற எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை பலம் தேவை. 2016 தேர்தல் களத்தில் அதை தி.மு.க. "கோட்டை விட்டதால் கோட்டையை விட்டது. அதன் பிறகு சட்டரீதியாகவும் சாதுர்யமாகவும் எந்த வாய்ப் பும் வெற்றிகரமாகவில்லை. எங்கே இழந்தார்களோ அங்கேதான் மீட்க வேண்டும். தேர்தல் களம் ஒன்று தான் ஸ்டாலினுக்கு இருக்கும் பிரகாசமான வாய்ப்பு.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு, சென்னை-110

"ஜெயலலிதா என்ற தலைவர் இல்லாததால் அமைச்சர்கள் கூத்தடிக்கின்றனர்' என இளங்கோவன் கிண்டல்...?

உண்மைதான்.. மேலே ஒரு தலைவர் இருந்தாலும் மாநிலத்துக்கு மாநிலம் கோஷ்டிக் கூத்தடிக்கும் காங்கிரஸ்போல இல்லையே அ.தி.மு.க.

gandhi

காந்தி தேசம்

கே.பி.கே.பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்

இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் இருந்தபோதும் மகாத்மா காந்தியை "தேசத் தந்தை' என அழைப்பது ஏன்?

"தேசத்தந்தை' என்பது அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பட்டமல்ல. அது காந்திக்கு இந்தியாவில் கிடைத்துள்ள அடையாளம். பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் இந்தியா ஒரே ஆட்சியாளரின் கீழ் முழுமையாக இருந்ததில்லை. ஆங்கிலேயர்கள்தான் ஒரே நிர்வாகத்தின் கீழ் இந்தியாவைக் கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் உருவாக்கிய அந்த இந்தியாவில் ஆங்கில மொழியைப் பயிற்றுவித்தனர். 1764-ல் முதல் அஞ்சல் அலுவலகம் ஆங்கிலேயர் களின் கிழக்கிந்தியக் கம்பெனியால் பம்பாயில் தொடங்கப்பட்டது. 1780-ல் "பெங்கால் கெஜட்' என்ற ஆங்கில செய்தித்தாள் அச்சிடப்பட்டு வெளியானது. முதல் தந்தி சேவை 1850-ல் கல்கத்தாவுக்கும் டைமன்ட் ஹார்பருக்கும் இடையே நடைபெற்றது. முதல் ரயில் பாதை 1853-ல் பம்பாய்க்கும் தானேவுக்கும் இடையில் போடப்பட்டு ரயில் இயக்கப்பட்டது. அதுவரை, இந்தியாவின் வடகோடியிலிருந்து தென்கோடி வரை பெயர்பெற்ற தலைவர் என்று யாருமில்லை. அந்த நிலையை மாற்றிய முதல் தலைவர், காந்திதான்.

பிரிட்டிஷ் ஆட்சி பயிற்றுவித்த ஆங்கிலம்தான், பல மொழிகள் பேசும் இந்திய மக்களிடம் காந்தி உரையாடுவதற்கான தொடர்பு மொழியானது. பிரிட்டிஷ் ஆட்சியில் பரவிய செய்தித்தாள்களைப் பின்பற்றி காந்தியும் பத்திரிகை அச்சிட்டார். ஆங்கிலேயர் போட்டிருந்த ரயில் பாதைகள் வழியே நாட்டின் பல பகுதிகளுக்கும் காந்தி பயணித்தார். ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்த நிர்வாகிகளுக்கு ஆங்கிலேயர் உருவாக்கிய அஞ்சல் சேவை வழியாக கடிதம் எழுதினார். அவசர செய்தி என்றால் பிரிட்டிஷார் உருவாக்கிய தந்தி சேவையும் காந்திக்குப் பயன்பட்டது. ஆங்கிலேயர் உருவாக்கிய வசதிகளைக் கொண்டு, இந்தியத் தன்மைக்கேற்ற போராட்டங்களைக் கையாண்டு, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை அடைய வழிவகுத்தார். ஒரு வகையில் காந்திய வழி, பிரிட்டிஷாருக்கு சாதகமானது என்றால், இன்னொரு வகையில், பிரிட்டிஷார் தங்கள் திட்டங்கள் மூலம் சொந்தக் காசில் வைத்துக்கொண்ட சூனியம்தான் காந்தி.