பி.சாந்தா, மதுரை-14
"கஜா' புயல் -பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலை -அரசு நடவடிக்கை?
கரையேறும்வரை கண்ணாமூச்சி ஆடி, கரை கடந்தபோது பேயாட்டம் ஆடிவிட்டது கஜா. அரசுத் தரப்பில் எச்சரிக்கை வார்த்தைகள் விடிய விடிய வெளிப்பட்டது நல்ல அம்சம். ஆனால், வார்த்தைகளில் இருந்த சுறுசுறுப்பை செயல்பாட்டில் கோட்டைவிட்டனர் கோட்டையில் இருப்போர்.
டி.சந்திரன், ஈரோடு
கள்ள ஓட்டுப் போட்டதற்கு எதிர்ப்பாக சர்க்கார் சவுக்கை சுற்றும்போது "சர்கார்' திரைப்பட டிக்கெட் முழுவதும் நியாயமாகத்தான் விற்கப்பட்டதா?
வீர வசனங்களுக்கு மயங்கும் ரசிகர்களிடம் கொள்ளையடிப்பதே திரை வணிகம் என்றாகிவிட்டது.
எம்.செல்லையா, ஏழாயிரம்பண்ணை, சாத்தூர்
பழ.நெடுமாறன் எழுதிய "ஈழம் சிவக்கிறது' என்ற புத்தகத்தை அழிக்க வேண்டும் என்ற உத்தரவு பற்றி?
கருத்துரிமையை முடக்க இறையாண்மையை முன்னிறுத்துவது அதிகாரத்தின் இயல்பு.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் ராஜாராம் மோகன்ராய் விருது இந்து என்.ராம் அவர்களுக்கு கிடைத்துள்ளது பற்றி...?
ஃபோபர்ஸ் பீரங்கி பேர ஊழலுக்கான ஆவணங்களை அம்பலப்படுத்தியதிலிருந்து பல சாதனைகளுக்குரியவர் இந்து என்.ராம். தற்போதைய விருது, "கருத்துரிமை' காக்க நீதிமன்றம் வரை ஒலித்த அவரது உரத்த குரலுக்கான சிறந்த பாராட்டு.
ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6
மறைந்த சி.என்.அண்ணாதுரை எழுதிய "நீதிதேவன் மயக்கம்' நாடகம் பற்றி...?
இலக்கியத்தை மறுவாசிப்பு செய்வது என்று நவீன படைப்பாளிகள் முழங்குகிறார்கள். அதனை 1940-களிலேயே செய்தவர் அறிஞர் அண்ணா. அதில் ஒன்றுதான், அவர் படைத்த "நீதிதேவன் மயக்கம்' எனும் நாடகம். கம்பராமாயணத்தில் இராவணனை, "இரக்கமெனும் ஒரு பொருளிலா அரக்கன்' எனச் சாடுகிறார் சேக்கிழார், மன்னிக்கவும்... கம்பர். "நான் இரக்கமில்லாதவனா?' என இராவணன் கேள்வி கேட்பதாக அண்ணா கற்பனை செய்கிறார். அதனடிப்படையில் இராவணன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறான். கம்பரில் தொடங்கி வால்மீகி, விஸ்வாமித்திரர் வரை பலரும் கூண்டில் ஏற வேண்டியிருக்கிறது. இராவணன் வைக்கும் வாதங்களாக அண்ணா எழுதியவை சமகாலத்துக்கு கச்சிதமாகப் பொருந்தக்கூடியவை. அதனால்தான் அலறுகிறார்கள்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு, சென்னை-110
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கோட்சூட் அணிந்த எந்தப் பணக்காரர்கள் வங்கி வரிசையில் நின்றார்கள் என்ற ராகுலின் கேள்வி?
சராசரி மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கத் தொடங்கியிருக்கிறார் எதிர்காலத் தலைவர்.
பிரதீபா ஈஸ்வரன், மேட்டுக்கடை, தேவூர்
ஜெயலலிதா இல்லாததால், நடிகர்களுக்கு மட்டுமே குளிர்விட்டுப் போனதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறாரே?
தான் பாடகர் என்பதை மேடையில் காட்டினார். நடிகர் என்பதை மீடியாக்களிடம் காட்டியிருக்கிறார். தன்னைத்தானே விமர்சித்துக்கொள்வது சிறந்த கலை.
அ.ர.ராசு, ஈரோடு
இலவச மிக்ஸி, கிரைண்டரை எரித்தவர்கள் இலவச வேட்டி சேலை, இலவச மிதிவண்டி, இலவச பஸ் பாஸ், இலவச ஸ்கூட்டி, இலவச வீட்டுமனை, இலவச சீருடை, இலவச மடிக்கணினி இவற்றை (இலவச கல்வியை என்ன செய்வது) மட்டும் ஏன் எரிக்கவில்லை?
இலவசக் கல்வி மட்டுமா? இலவச மின்சாரத்தில் விளைந்த பயிர்களால்தான் தங்கள் வீட்டு உலை கொதித்தது என்பதை அறியாதவர்கள். ஒருவேளை அதையும் தங்கள் கதாநாயகன் விமர்சித்திருந்தால், வாயில் விரலைவிட்டு வாந்தி எடுத்திருப்பார்களோ என்னவோ!
_________________
ஆன்மிக அரசியல்
சுந்தரமூர்த்தி, திருவெண்ணெய்நல்லூர்
ஆன்மிக அரசியல் செய்வதற்கு "பலசாலி'யாக இருக்க வேண்டுமா?
ஆன்மிகம், மன பலத்தை வலியுறுத்துகிறது. அரசியல் செய்ய பலவித பலமும் தேவைப்படுகிறது. அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு அராஜகம் செய்பவர்கள்கூட இங்கே பலசாலிகளாகப் பார்க்கப்படுகிறார்கள். ஆன்மிக அரசியல் என்ற பெயரில் எங்கெங்கே மத அரசியல் முன்னெடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அதிகாரம்மிக்க மதத்தின் பெயரால் அராஜகம் நடத்துபவர்களே பலசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை வேதநெறி -மனுதர்மம் இவற்றின் பெயரால் நடைபெற்ற ஆட்சிகளில் அவற்றுக்கு எதிரானவர்களைப் பலசாலிகள் பந்தாடினார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனல்வாதம் -புனல்வாதம் எனத் தொடங்கி சமணர்களைக் கழுவேற்றுவது வரையிலான பலசாலித்தனத்தைக் காட்டிய ஆட்சியாளர்கள் உண்டு. மொகலாயர் படையெடுப்பிற்குப் பிறகு வாள்முனையில் மத அரசியல் திணிக்கப்பட்ட நிகழ்வுகளை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது வெவ்வேறு வகைகளில் மத அரசியல் கையாளப்பட்டுள்ளது. எனினும், கலிங்கப்போருக்குப் பிறகு ஆயுதத்தைக் கைவிட்டு அன்பு தழைக்கச் செய்த அசோகன், சமணம் -பவுத்தம் -சைவ -வைணவ நெறிகளுக்கு இடமளித்த தமிழக மன்னர்கள், இந்து கோவில்களுக்கு நிதி அளித்த முஸ்லிம் மன்னர்கள், "துளுக்க நாச்சியார்' என்ற தெய்வத்தை வழிபடும் மதச்சார்பற்ற மக்கள் இவைதான் இந்த மண்ணின் பலம். "ரகுபதி ராகவ ராஜாராம்'. "ஈஸ்வர அல்லா தேரே நாம்' என அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை வழங்கும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் அரசியல் சட்டத்தை மீறிய பலசாலி எதுவும் இல்லை. மற்ற "பலசாலி'களெல்லாம் ஓட்டு அரசியல் மூலம் பதவிக்கு குறிவைப்பவர்களே.
("ஆன்மிக அரசியல்' நிறைவுபெறுகிறது.)