எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

இந்தியாவின் வளர்ச்சி எல்லாத் துறைகளிலும் தெரிகிறது என்கிறாரே மோடி?

இந்தியாவில் பணவீக்கம் வளர்கிறது. ஏழைகள் எண்ணிக்கை வளர்கிறது. ஜனநாயக நடைமுறைகள் தேய்வதில் வளர்கிறது. கடன் வளர்கிறது. உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் இடம் 101. சமீபத்தில் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிய இலங்கைகூட அதில் 65-வது இடத்தில் உள்ளது. இன்னும் தெளிவாகச் சொன்னால் இந்தப் பட்டிய லில் பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளத்தைவிட இந்தியா பின்னால் உள்ளது. இந்த வளர்ச்சி போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா!

வண்ணை கணேசன், கொளத்தூர்

சென்னை மாநகராட்சியில் ஆண்கள் குடும்ப நல சிகிச்சை செய்துகொள்ள பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்களே?

புரிதலின்மைதான் காரணமாக இருக்க வேண்டும். பலசமயங்களில் கருத்தடை என்பதை ஆண்மையோடு இணைத்துப் புரிந்துகொண்டி ருப்பார்கள். இந்த சிகிச்சை செய்தால் தாம்பத்தியம் பாதிக்கப்படுமென்று பெண்கள் நினைத்திருக்கலாம். கருத்தடை சிகிச்சை, பெண்களுக்கு செய்வதைவிட ஆண்களுக்கு செய்வது எளிது. இச்சிகிச்சைக்குப் பிறகு மகிழ்வான தாம்பத்தியத்துக்கு எந்த இடையூறும் வராது. ஒருவேளை, ஆண்கள் பின்னாலிருந்து, மனைவிகளிடம் எதிர்ப்புத் தெரிவிக்கும்படி தூண்டுகிறார்களோ... என்னவோ!

மா. சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

தற்போதைய எழுத்தாளர்களில் யாரை வாசகர்களுக்கு சிபாரிசு செய்வீர்கள்?

எழுத்தாளர்களைவிட, வாசிக்கும் பழக்கத்தையே வாசகர்களுக்கு சிபாரிசு செய்வேன். செல்போனில் ஸ்வைப் செய்து வீடியோக்களைப் பார்க்கும் பழக்கத்தால் வாசிப்புப் பழக்கம் என்பதே அரிதாகி வருகிறது. யார் என்பது வாசகர் சாய்ஸ்! வாசிக்கப் பழகுங்கள் என்பதே எனது சிபாரிசு!

த.சத்தியநாராயணன், அயன்புரம்

இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக, தமிழ்நாடு மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பாரா?

அவர் எதற்குத் தீர்வு காணப்போகிறார்? தமிழக முதல்வர், இந்தியப் பிரதமர்தான் இதற்குத் தீர்வு காணவேண்டும். இதில் பிர தான குற்றச்சாட்டு, எல்லைதாண்டி தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைப் பகுதி வரை வந்து மீன்பிடிக்கிறார்கள் என்பது. தமிழக மீனவர்களிடம் இருக்கும் படகு, வலை போன்ற நவீன வசதிகள் இலங்கை மீனவர்களிடம் இல்லை என்பதுதான். ஆனால், சமீபகால மாக இலங்கைக் கடற்கொள்ளை யர், இலங்கை கடற்படைகள் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி அவர்களது மீன்களைப் பிடுங்கிக்கொள்வது, படகு, வலை களைச் சேதப்படுத்துவது, படகைப் பறித்து சிறையில் அடைப்பது, கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதற்கு இந்தியா தீர்வுகாண அக்கறை செலுத்த வேண்டும்.

Advertisment

cc

சி. கார்த்திகேயன், சாத்தூர்

சதுரங்கத்தில் வென்றவருக் குக்கூட நிர்மலா சீதாராமன் வரி மூலம் சதுரங்கம் சொல்லித் தருகிறாரே?

ஒருவேளை வரிவிதிப்புக்கு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டால் நிர்மலா டைட்டில் வெல்வதற்கு பிரகாசமான வாய்ப்பிருக்கிறது. அப்படி அவர் வெல்லும் தொகைக்கு வரி கட்டினால்தான், வரியின் கடுமையை உணர்வார்போல!

தே. மாதவராஜ், கோயமுத்தூர் -45

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸுக்கு ராசியில்லாத தொகுதியா?

அதெல்லாம் மூடநம்பிக்கை. விக்கிரவாண்டிக்கும்தான் இடைத்தேர்தல் வந்தது. உடனே விக்கிரவாண்டி ராசியில்லாத தொகுதியாகிவிடுமா?

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

ராகுல் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறதே?

நாடாளுமன்றத்தை நாடக மேடையாக்க முடிவுசெய்துவிட்டது பா.ஜ.க. அம்பேத்கர் பற்றி அவதூறாகப் பேசிய பிரச்சனையிலிருந்து மீள் வதற்கு, ராகுல் தள்ளிவிட்டார் என பிரதாப் சாரங்கி தலையில் கட்டுப் போட்டு வந்து சென்டிமெண்ட் சீன்களைப் போட, காவல்துறை துணையுடன் வழக்கைப் பதிந்துவிட்டது பா.ஜ.க. இப்போது அமித்ஷாவை காட்சியிலிருந்து பின்னிக்கு இழுத்துவிட்டு, ராகுலை வில்லனாக்கப் பார்க்கிறார்கள்.

வாசுதேவன், பெங்களூரு

புது வருட காலண்டர்கள், டைரிகள் சேகரிக்கும் மோகம் குறைந்துவிட்டதல்லவா?

ஒரு மோகம் போகும் இடத்தில் புது மோகம் வரும். அது சில காலம் நீடிக்கும். டைரி வாங்குகிறவர்களில் எத்தனை பேர் ஆண்டு முழுவதும் குறிப்புகளைப் பதிவுசெய்கிறார்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்!

ப.மூர்த்தி, கும்பகோணம்.

அம்பேத்கர் குறித்த அமித்ஷா பேச்சுக்கு, வலிக்காமல் விமர்சனம் செய்யக்கூட எடப்பாடி பழனிச்சாமிக்கு மனமில்லை என்கிறாரே அமைச்சர் ரகுபதி?

விமர்சனம் செய்யாமலே வருமானவரித் துறை, அமலாக்கத்துறை எப்போது பாயுமென அ.தி.மு.க.வினர் நடுங்கிக் கிடக்கவேண்டியிருக்கிறது. இதில் விமர்சனம் செய்தால் என்ன நடக்கும் என்ற பயம் எடப்பாடிக்கு இருக்காதா என்ன?