ச.புகழேந்தி, மதுரை-14

பொதுமக்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கினால் என்ன என்று தமிழக அரசை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளதே?

சர்கார்’ மீது உயர்நீதிமன்றமும் செம கோபத்தில் இருக்கிறது போலும்.

ப.பாலா(எ)பாலசுப்பிரமணி, பாகாநத்தம்

Advertisment

ஜெயலலிதாவையே வழிநடத்திய சசிகலா, எடப்பாடி பழனிச்சாமியிடம் தோற்றுவிட்டாரா?

அ.தி.மு.க. நிறுவனரான எம்.ஜி.ஆரையே தனக்கேற்றபடி வழிநடத்த முயன்ற ஜெயலலிதா எப்படி சசிகலாவின் வழிகாட்டுதல்படி நடந்தார் என நினைக்கிறீர்களோ, அப்படித்தான் ஜெ.வையே வழிநடத்திய சசிகலாவும் எடப்பாடி விவகாரத்தில் சறுக்கியிருக்கக்கூடும்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

Advertisment

"கட்சித் தலைமை உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடத் தயார்' என பிரேமலதா கூறுவது?

"கூட்டணி பற்றி பொதுக்குழு முடிவு செய்யும்' என அ.தி.மு.க.-தி.மு.க. தலைமைகள் சொல்வது போலத்தான் இதுவும். தே.மு.தி.க.வில் தலைமை என்று தனியாக ஒன்று இருப்பதாகவும், தானும் அதற்குக் கட்டுப்பட்டு நடப்பதாகவும் வெளிப்படுத்தும் அரசியல் உத்தியைக் கையாண்டு, தேர்ந்த அரசியல்வாதி என்பதைக் காட்டியிருக்கிறார் பிரேமலதா.

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

மாவலியைக் கவர்ந்த தீபாவளி மலர் எது?

ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு விதத்தில் கவர்கின்றன என்றாலும் மாவலிக்கு தீபாவளி மலர்களைவிட, இயற்கை வழியிலான பொங்கல் திருநாளில் மலரும் மலர்களே ரொம்பப் பிடிக்கும்.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

1978-ல் லோக்சபாவில் தமிழில் பேசும் உரிமைப் பெற்று முதல் கேள்வி எழுப்பிய குமரி அனந்தன், தமிழில் "மணிஆர்டர்' என்கிற பணஅஞ்சல் அச்சிடவும் வழிவகுத்தார். அதற்குப் பின் தமிழ்நாட்டின் மற்ற எம்.பி.க்கள் அந்தப் பணியைத் தொடரவில்லையே?

இலக்கியச்செல்வர் குமரி அனந்தன், ஜனதா ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்திலும் மத்திய அரசிலும் மேற்கொண்ட தமிழ்ப் பணிகள் சிறப்பானவை. எனினும் அதற்கு முன்பும் பிறகும் அதற்கான முயற்சிகளைத் திராவிடக் கட்சிகள் தொடர்ந்து மேற்கொண்டுள்ளன. தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முரசொலி மாறன், வைகோ, விடுதலை விரும்பி உள்ளிட்ட பலரும் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கான அங்கீகாரத்தை வலியுறுத்தியுள்ளனர். அ.தி.மு.க.வில் தம்பிதுரை, எஸ்.எஸ்.சந்திரன், நவநீதகிருஷ்ணன் போன்ற எம்.பிக்களும் வலியுறுத்தியுள்ளனர். இதில் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருபவரில் திருச்சி சிவா எம்.பிக்கு சிறப்பான இடம் உண்டு. தற்போது ஆந்திராவைச் சேர்ந்த வெங்கையா நாயுடு குடியரசு துணைத்தலைவராக இருப்பதால் தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் மொழிகளில் மொழிபெயர்ப்பு வசதியை மாநிலங்களவையில் ஏற்பாடுசெய்து தந்துள்ளார். இந்தி மட்டுமே தேசிய மொழி என்ற தவறான எண்ணம் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் பேசும் மக்களிடமே உள்ளது. இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தும் இம்மண்ணின் தேசிய மொழிகள்தான் என்ற உண்மை நிலைநிறுத்தப்பட வேண்டுமானால் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் இந்தியாவின் ஆட்சிமொழியாக்கப்பட வேண்டும்.

mavalianswers

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

"மீ டூ' இயக்கம் ஆண்-பெண் உறவினை மேம்படுத்துமா?

ஆண்-பெண் நட்பை வேறு வகை உறவாக மேம்படுத்த நினைப்போரை பயமுறுத்தும்.

_____________

ஆன்மிக அரசியல்

வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி-17

தெய்வச் சிலைகளும் விக்கிரகங்ளும் களவாடப்பட்டு கொள்ளை போகும்போது, இதற்கு காரணமானவர்களை தெய்வங்கள் தண்டிக்காமல் இருப்பது ஏன், எதனால் என்ற கேள்வி எழுகிறதே?

ஆன்மிக நம்பிக்கை என்பது வெவ்வேறு வகையானது. கோவில்கள், அதில் உள்ள விக்கிரகங்களான தெய்வச்சிலைகள் இவற்றை வழிபடுவது மட்டுமே ஆன்மிக நம்பிக்கையன்று. இயற்கை வழி ஆன்மிகமும் தமிழ்நாட்டு மரபில் நீண்டகாலமாக இருக்கிறது. எந்தக் கடவுளை வணங்கினாலும் நடப்பதெல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்ற நம்பிக்கை கொண்டோர் அதிகம். அந்த விதி-ஊழ் என்பதையும் இயற்கை நிகழ்வு என்று குறிப்பிட்ட சமய நம்பிக்கைக்குப் பெயர், ஆசீவகம். இது சமண-பவுத்த காலத்திற்கும் முற்பட்டது என்றும், பின்னர் சமணத்தின் உட்பிரிவாக இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படுகிறது என்பதையும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்திய அளவிலும் ஆசீவகம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததை மவுரியர் காலத்துக் குறிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன. காலம்-கருவி இவற்றின் துணையினால் ஏற்படும் இயற்கை மாற்றத்தின் அடிப்படையிலேயே விதி அமைகிறது என்றும் அதனை மாற்ற முடியாது என்பதும் ஆசீவக நெறி. இங்கே விக்கிரக வழிபாடு முக்கியத்துவம் பெறவில்லை. ஆசீவகம் சமயத்தின் துறவிகள் படுத்திருந்த கல்படுக்கையும் அவர்கள் அளித்த போதனைகளுமே முதன்மையானவை. விதி, கர்மா, துறவு, மறுபிறப்பு என இன்றைய சமயங்கள் பலவும் சுட்டிக்காட்டும் நெறிகளை ஆசீவகமும் வலியுறுத்தினாலும் அது இயற்கை விதிப்படியான நிகழ்வு என்று ஏகாந்த நிலை நோக்கிய பயணத்திற்கு வழிகாட்டுகிறது. வேதநெறிக்கு எதிரான ஆசீவகத்தையடுத்து சமணம், பவுத்தம் ஆகியவையும் வேத மறுப்பைக் கடைப்பிடித்தன. பின்னர் அவற்றிலும் உருவ வழிபாடுகள் ஏற்பட்ட பிறகு, வேதநெறி -மரபிலும் கோவில்களும் உருவாகி, மனிதர்களால் செய்யப்பட்ட விக்கிரகங்கள் மனிதர்களாலேயே களவாடப்படும் நிலை உருவாகியுள்ளது. இயற்கை நிகழ்வு காலந்தோறும் மாறிக்கொண்டிருக்கிறது.