மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
பாரதிய ஜனதா கட்சிக்கு இந்து-முஸ்லிம் தவிர வேறு எதுவும் தெரியாது என்று விமர்சித்துள்ளாரே யஷ்வந்த் சின்ஹா...?
ஏன் தெரியாது... யோகிக்கு புல்டோசர் அரசியல் தெரியும். நிர்மலா சீதாராம னுக்கு விக்கல், தும்மலுக்குக் கூட வரிவிதிக்கச் சாத்தியங் களை யோசிக்கத் தெரியும். எல்லா பயங்கரவாதங்களையும், தீவிரவாதங்களையும் இந்துத்துவவாதிகள் செய்துகொண்டிருக்க, அதை விமர்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவரை நாட்டின் நம்பர் 1 பயங்கரவாதி என விமர்சிக்கத் தெரியும். மைனாரிட்டி அரசாக இருந்துகொண்டே, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற் கான ராஜதந்திரங்களை வகுக்கத் தெரியும்.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
பெரியாரை போற்றுவோர்... தூற்றுவோர் என்ன வித்தியாசம்?
போற்றும் வார்த்தைகளும், தூற்றும் வார்த்தைகளும் பெரியாரை எதுவும் செய்துவிடப்போவதில்லை. ஒருவரை போற்றவோ, தூற்றவோ செய்யும் முன்பு அவரை ஏன் போற்றுகிறோம், ஏன் தூற்று கிறோம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இந்த சமூகத்துக்கு அவர் என்ன சொல்ல முயன்றார், தன் வாழ்நாளை எதற்காகச் செலவிட்டார் என்பதை படித்து அறிந்துகொண்டு, இரண்டில் எதைச் செய்தாலும் சரி! மேற்சொன்ன இரண்டு வகைப் பாட்டில் வருபவர்களில் பலரும், பெரியாரை முறையாக அறிந்திருக்க மாட்டார்கள் என்பதுதான் வருத்தம்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
அப்பாவு கிறிஸ்தவராக இருப்பதால்தான் சபா நாயகர் பதவி கிடைத்தது என ஜார்ஜ் பொன்னையா கூறியிருக்கிறாரே?
அப்படி தி.மு.க.வில் எத்தனை முறை கிறித்துவர் களை சபாநாயகராக நியமித்திருக்கிறார்கள். அரை வேக்காட்டுத்தனமாகப் பேசுபவர்களின் பேச்சை பொருட்படுத்தக்கூடாது. உண்மையில், இந்தியாவில் சிறுபான்மையினர்- அது மதச்சிறுபான்மையினர் ஆயினும் அல்லது ஜாதிய சிறுபான்மையினர் ஆயினும் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் போன்றவற்றில் உரிய பிரதிநிதித்துவம் பெறாமலிருப்பதுதான் கவலைக்குரிய யதார்த்தம்.
என். இளங்கோவன், மயிலாடுதுறை.
லெபனான் மற்றும் சிரியாவில் பேஜர்கள் வெடித்து பலர் பலியானதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாகக் கூறப்படுவது பற்றி?
கூறப்படுவதென்ன... அது இஸ்ரேலின் வேலைதான். வழக்கமாக தீவிரவாதிகள்தான் வெடி குண்டு வைப்பது, சதித்திட்டம் தீட்டுவது, பொது மக்களை அழிப்பது போன்ற அழிவுச் செயல்களில் ஈடுபடுவார்கள். தலைகீழாக லெபனானின் ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு இஸ்ரேல் குண்டு வைத்து பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது.
எஸ். சக்திவேல், கோவில்பட்டி
ஒரே நாடு ஒரே தேர்தல்...?
கடந்த மக்களவைத் தேர்தலை ஏழு கட்டமாக நடத்தும்போதே ஏகக் குளறுபடி. பல்வேறு இடங்களில் தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்த வாக்கு சதவிகிதத்துக்கும், சிலநாள் கழித்து அறிவித்த வாக்கு சதவிகிதத்துக்கும் இடையில் முரண். ஹரியானா, காஷ்மீரோடு, மகாராஷ் டிரத்துக்கு ஏன் தேர்தலை அறிவிக்கவில்லை யென்றால், போதுமான தேர்தல் அலுவலர்கள் இல்லையென்று சொல்லும் அரசு, இந்தியா முழுமைக்கும் எப்படி ஒரேசமயத்தில் சட்டமன்ற, மக்களவைத் தேர்தலை நடத்தும்? தலை நகரை மாற்றினார் துக்ளக். தேர்தல் நடைமுறையை மாற்றுகிறார்கள் நவீன துக்ளக்குகள். அரசியல் கோமாளி களுக்கு முடிவே இல்லை போலிருக்கிறது.
கே.பத்மராஜன், சிங்காநல்லூர்
மோடியின் நாற்காலியில் நிதின் கட்கரி?
சமீபத்தில் எதிர்க் கட்சியைச் சேர்ந்த ஒருவர், நீங்கள் பிரதமராக வந்தால் உங்களுக்கு ஆதரவளிப் போம் என நிதின் கட்கரியிடம் தெரிவித்த தாகவும், அதை, தான் ஏற்கவில்லை, தனக்கு பிரதமராகும் ஆசை இல்லையென்று அவரிடம் கூறியதாகவும் ஒரு மேடையில் தெரிவித்தார். எத்தனை அழுத்தமாகச் சொன்னாலும் சந்தேகம் எழுகிறதே. திருப்பதி லட்டில் நெய் இருக் கிறதா, விலங்குக் கொழுப்பு இருக்கிறதா என்று ஆராய லேப் இருக்கிறது. அரசியல்வாதிகளின் பதில்களின் உண்மைப் பொருளைக் கண்டறிந்து சொல்ல நவீன ஆய்வகங்கள் எப்போது வரப் போகின்றன?
சி. திருமலைராணி, திருத்துறைப்பூண்டி
திருப்பதி லட்டு விவகாரம்?
லட்டை விடுங்கள்... வேறொரு குட்டு ஒன்றைச் சொல்கிறேன். 2024 ஏப்ரலில் எத்திலீன் ஆக்ஸைடு இருப்பதாகச் சொல்லி எவரெஸ்ட், எம்.டி.எச். மசாலாக்கள், சிங்கப்பூர், ஹாங்காங், நேபாளத்தில் தடைசெய்யப்பட்டன. புற்றுநோய் வரும் வாய்ப்பதிகம் என்ற பயம். இந்திய உணவுப்பொருள் தரக்கட்டுப்பாட்டு நிறுவனமான எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. அதில் தலையிட்டது. என்ன நடந் திருக்குமென்று நினைக்கிறீர்கள்?, தரமான மசாலாக்கள் தயாரிக்கப் பட விதிமுறை, கெடுபிடிகள் அதிகரித்திருக்கும் என்றுதானே. ம்ஹூம், இந்திய உணவுப் பொருட்களில் பூச்சிக் கொல்லி பொருட்கள் இருப்பதற்கான அளவை 0.01 மில்லிகிராமிலிருந்து 0.1 மில்லிகிராமாக தளர்த்தியிருக்கிறது இந்தியா. லட்டுக்குப் பொங்கிய இந்தியர் களில் 1 சதவிகிதம் பேர்கூட இதற்குப் பொங்கமாட்டார்கள்.