எம்.முகமது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

மொழிவழி மாநிலங்கள் பிரிந்தபிறகு தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளதா மாவலியாரே?

Advertisment

சென்னை மாகாணமாக இருந்ததைவிட, தமிழ்நாடான பிறகு கல்வி-மருத்துவம், தனி நபர் வருமானம், வாங்கும் சக்தி, பொருளாதார மேம்பாடு, உள்கட்டமைப்பு போன்றவற்றில் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது. மொழிவழிப்படி தமிழ்நாட்டுடன் இணைந்திருக்க வேண்டிய சில நிலப்பகுதிகள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா வசம் சென்றுவிட்டதால் ஆற்றுநீர் உள்பட பல அடிப்படைத் தேவைகளுக்குப் பிற மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மொழியுரிமை, மனித உரிமைகளைப் பறிப்பது நியாயமாகாது.

சி.கார்த்திகேயன், சாத்தூர்

கலைஞர்-ரஜினி நெருக்கம், ஸ்டாலின் - ரஜினி இடையே இருக்காதா?

"தென்னிந் தியாவின் மூத்த தலைவர்' என ரஜினியைச் சொல்ல வைத்தது கலைஞர்- ரஜினி நெருக்கம். அந்த ரஜினியை "தமிழ்நாட்டின் தலைவர்' எனச் சொல்ல வைப்பதற்கான முயற்சிகள் நடக்கும் நிலையில், ஸ்டாலின்-ரஜினி இடையே நெருக்கம் எப்படி இருக்கும்?

ப.மணி, சின்னதாராபுரம்

தமிழக முதல்வரில் இருந்து அமைச்சர்கள் வரை "மடியில் கனமில்லை; அதனால் வழியில் பயமில்லை' என்ற திருவாசகத்தை உதிர்க்கிறார்களே?

Advertisment

உங்களுக்கான பதிலை பி.மணி, குப்பம் -ஆந்திரா, தன் கேள்வி மூலம் தந்திருக்கிறார். "மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை' என்று கூறிவிட்டு முதல்வர் பழனிசாமி தன் துறையின் ஊழலை சி.பி.ஐ. விசாரிக்கும்படி உத்தரவிட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்று இடைக் காலத் தடை வாங்கியது ஏன்?'

ப.பாலா (எ) பாலசுப்பிரமணி, பாகாநத்தம்

தி.மு.க.வை முன்னிலைப்படுத்தி தற்போது வெளிவரும் கருத்துக்கணிப்புகள் ஆட்சி கலையாமல் இருக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு விடுக்கப்படும் மறைமுக எச்சரிக்கையா?

எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமில்லை. அவர்களை சரியானபடி கவனித்துக் கொள்ள வேண்டும் என எடப்பாடிக்கும் சேர்த்து விடப்படும் எச்சரிக்கை. அதேநேரத்தில், கருத் துக்கணிப்புகளைத் தாண்டி, களநிலவரம் கடைசி நிமிடம்வரை மாறுதலுக்குட்பட்டது என தி.மு.க.வுக்கும் சேர்த்தே அடிக்கப் படுகின்ற அலாரம்.

Advertisment

mavali answers

ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

சிவாஜி, ரஜினி, விஜயகுமார், விஜய காந்த், சரத்குமார் இவர்களில் நாட்டாமை வேடம் யாருக்குப் பொருத்தம்?

பல வரலாற்று நாயகர்களை உயிருடன் நம் முன் நிறுத்தியவர் சிவாஜி. ரஜினியின் சிறப்பு, "பாட்சா' பாணி கதாபாத்திரங்கள். மற்ற மூவரில் நாட்டாமை வேடத்தைப் பொறுத்தவரை, நிதானமான அணுகுமுறையால் நீதிபதியையே அசத்தியவர் "சின்ன கவுண்டர்' விஜயகாந்த். ஆனாலும் விஜயகாந்த் என்றால் அமைதியைவிட ஆக்ரோஷமான கதாபாத்திரம்தான் முன்னிலை பெறும். எனவே, ஃபைனல் ரவுண்டுக்கு வருபவர்கள் சரத்குமாரும் விஜயகுமாரும்தான். நாட்டாமை படத்தின் கதாநாயகன் சரத் என்றாலும், "நாட்டாமை' என்றால் மனதில் நிற்பவர் விஜயகுமார்தான்.

ஜியார்.சந்திரன், லக்காபுரம், ஈரோடு

ரஜினியும் கமலும் அரசியல் ஆசையை வெளிப்படுத்தியதும் 25% ரசிகர்களை இழந்திருப்பதாக சொல்லப்படும் நிலையில், தேர்தலில் நின்று ஆட்சியைப் பிடித்து விட முடியுமா?

25% ரசிகர்களை இழந்தது, 30% பொதுமக்களின் ஆதரவைப் பெறவேண்டும் என்ற அரசியல் கணக்கில்தான். ஒன்றை இழந்து இன்னொன் றைப் பெற நினைக்கும் "நட்சத்திரக் கணக்கு' பூமியில் சரிவருமா என்பதை தேர்தல் தீர்மானிக்கும்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"ஜெயலலிதாவால் கொடுத்த பதவி டி.டி.வி. தினகரனால் பறிபோய்விட்டது' என்கிறாரே அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்?

அந்தப் பதவியைப் பறிக்கும் அதிகாரம் பெற்ற பதவியில் இருப்பவரும் ஜெயலலிதாவால் பதவி பெற்றவர்தான்.

______________

ஆன்மிக அரசியல்

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்

தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோரும் தலித் சமுதாயத்தவரும் சேர்ந்து படிக்கும் வேத பாடசாலை உள்ளதா?

"ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம்' என்கிறபோது கோவில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்வதில் ஏன் சாதிப்பாகுபாடு என்கிற கேள்வி யுடன் முன்னெடுக்கப்பட்டதுதான் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கான உரிமைப் போராட்டம். 1970களில் இது சட்டரீதியான சவால்களை சந்தித்து, 2006-ல் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு, வேத ஆகமப்படி பயிற்சி அளிக்கும் மையங்களும் உருவாக்கப்பட்டன. சைவ ஆகமத்திற்கென திருவண்ணாமலை உள்ளிட்ட 4 இடங் களிலும், வைணவ ஆகம பயிற்சிக்காக திருவரங்கம் உள்ளிட்ட 2 இடங்களிலும் என 6 மையங்கள் அமைக்கப்பட்டன. தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட பிராமணரல்லாத சாதியினர் 206 பேர் முதல்கட்டமாக அர்ச்சகர் பயிற்சியினை நிறைவு செய்த நிலையில், அவர்களை அர்ச்சகராக நியமிப்பதற்கு எதிராக சிவாச்சாரியார்கள் உச்சநீதிமன்றம் வரை சென்றனர். நீண்ட சட்டப்போராட்டத்திற்குப் பிறகு, "அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் செல்லும்' எனத் தீர்ப்பு கிடைத்தாலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தால் அதனை நடைமுறைப் படுத்த அரசாள்வோர் அக்கறை காட்டவில்லை. வேத ஆகமப் பாடசாலைகள் மீதும் கவனம் செலுத்தவில்லை. அரசாங் கத்தைக் கடந்து, சைவ மடங்களில் பிராமணரல்லாதாருக்கு திருமுறைகள் கற்றுத்தரப்பட்டதும் காலப்போக்கில் குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் ஆன்மிக அரசியல் எனப் பேசப்படுவதெல்லாம் வடஇந்திய கலாச்சாரத்தின் அடிப்படையிலான பண்பாட்டுப் படையெடுப்புகளாகவே அமை கின்றன. தமிழ் மண்ணுக்குரிய வழிபாட்டு முறைகள்- திருவிழாக்கள் ஆகியவை கால வெள்ளத்தில் கரைந்து போவதை ஆன்மிக அரசியல் அறிவதில்லை.