அயன்புரம், த.சத்தியநாராயணன், சென்னை-72
ரஜினிக்கும் ரசிகர்களுக்கும் இடையில் மவுனயுத்தம் நடக்கிறதா?
அது யுத்தமல்ல.. எதார்த்த நிலவரத்திற்கும் எதிர்பார்த்துக் காத்திருப்போருக்குமான இடைவெளியில் ஏற்படும் முனகல்கள்.
ஜி.மகாலிங்கம், காவல்காரன்பாளையம்
ராஜபக்சே பிரதமரானதில் இந்தியாவுக் கும் பங்கு உள்ளதாமே?
இலங்கையைப் பங்குபோட நினைக்கும் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் ராஜபக்சே "பங்காளி'கள்தான்.
சின்னஞ்சிறு கோபு, சேலையூர்.
தீபாவளிக்கே 2 மணிநேரம்தான் பட்டாசு வெடிக்க அனுமதி என்றால், கார்த்திகை தீபத்திற்கு?
தீபாவளிக்கு மிஞ்சிய பட்டாசு-அல்லது தீபாவளி நேரத்தில் ஒதுக்கி வைத்த பட்டாசைத் தான் கார்த்திகைத் திருநாளில் வெடிப்பது வழக் கம். உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தீபாவளிக்கு அதிக நேரம் பட்டாசு வெடித்ததுபோல, கார்த்திகையிலும் வெடிக்கக்கூடும். மற்றபடி, கார்த்திகை என்பது பட்டாசுப் பண்டிகை அல்ல. அது வரிசையாக ஒளிரும் விளக்குகளின் அழகு. அதற்கு மேலும் அழகூட்டுவதற்கு, கிராமப்புறங்களில் கார்த்திகைப் பொறி சுற்றும் வழக்கம் உண்டு. பனைமரப் பூவை எரித்துக் கரியாக்கிக் கொள்வதுதான் அதற்கான மூலப்பொருள். அதன் பின் வீட்டிலேயே அதனைத் தயாரிக்கக்கூடிய சில மரபார்ந்த தொழில்நுட்பங்கள் உண்டு. கார்த்திகை இரவில் சிறுவர்-சிறுமியர் அதனை சுற்றும்போது, வட்டமாகச் சிதறும் தீப்பொறி அழகையும் மகிழ்ச்சியையும் தரும். பசுமைப் பட்டாசு பற்றி பேசுகிற இக்காலத்தில், கெமிக்கல் பட்டாசுக்குப் பதில் கார்த்திகைத் தீப்பொறி சுற்றும் வகையில் அதனைப் பிரபலப்படுத்தலாம்.
ப.பாலா (எ) பாலசுப்ரமணி, பாகாநத்தம்
தன்னை நம்பி வந்த 18 எம்.எல்.ஏ.க்களை யும் நட்டாற்றில் விட்டுவிட்டாரா தினகரன்?
"தேர்தல் எனும் தண்ணீரில் நீச்சலடித்து கரையேறுவோம்' என நினைக்கிறார் தினகரன். "குட்டையில் விழுந்தாலும் சேறு ஒட்டவில்லை' என சமாளிப்பதுதான் அரசியல்.
எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
"அதிகப் போராட்டங்களை சந்தித்த முதல்வர் நான்,… எனக்குத் தெம்பு அதிகம்' என்கிறாரே எடப்பாடி பழனிசாமி?
சந்தித்த போராட்டங்களுக்கு உரிய தீர்வு காண்பதுதான், முதல்வருக்குரிய தெம்பு. பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தவர்களை குண்டர் சட்டத்தில் அடைப்பதும் தெம்பு அல்ல... திமிர்.
மு.ரா.பாலாஜி, கோலார்தங்கவயல்
"ஜெயலலிதா அட்மிட்டாகியிருந்தபோது வார்டுக்கு வெளியே வாட்ச்மேன் வேலை பார்த்த துணை சபாநாயகர் தம்பிதுரை நினைத்திருந்தால், வெளிநாட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருக்கலாம்' என்கிறாரே முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி?
வார்டுக்கு வெளியே தம்பிதுரை, வாட்ச் மேன் வேலை பார்த்தாரா எனத் தெரியாது. வார்டுக்குள் இருக்கும் உரிமை பெற்றிருந்தவர் சசிகலாதானே,…அவர் என்ன செய்தார் என்ப தையும் தினகரன் அணியில் இருக்கும் செந்தில் பாலாஜி விளக்கினால் நன்றாக இருக்கும். "சிங்கம்' என சித்தரிக்கப்பட்ட செல்வி ஜெய லலிதாவை அவருடைய கட்சியினர் தொடங்கி அன்றைய ஆளுநர் வரை அத்தனை பேரும் அசிங்கப்படுத்தியிருப்பது மெல்ல மெல்ல வெளிவருகிறது.
லட்சுமிகாந்தம், வேலூர், நாமக்கல்
20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருவது உறுதியா?
எல்லாமே மேலே உள்ளவர் கையில் இருக்கிறது.
___________________
ஆன்மிக அரசியல்
சாரங்கன், கும்பகோணம்
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கே ராமர் கோவில் கட்டியே ஆக வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் தொடங்கி சாமியார்கள் வரை ஆவேசம் காட்டுவதன் பின்னணி என்ன?
பா.ஜ.க.வைப் பொறுத்தவரை அது பலவீனமாக இருக்கும்போதெல்லாம் ராமர் கோவிலை வைத்து அரசியல் செய்து பதற்றத்தை உருவாக்கும். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மோடி ஆட்சியின் மீதான மக்களின் அதிருப்தியை மறைக்க "ராமர் கோவில்' என்ற உணர்ச்சிகரமான பிரச்சினை அதற்கு கைகொடுக்கும் என்று நம்புகிறது. அத னால் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தில் தொடங்கி, ம.பி. முன் னாள் முதல்வரும் தற்போ தைய மத்திய அமைச்சருமான உமாபாரதி வரையிலான காவி உடை அரசியல்வாதிகள் பலரும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே ஆகவேண் டும் என்கிறார்கள். இதில் உமாபாரதி ரொம்பவும் ஆவேசமாக, "ராமரின் புண்ணிய பூமியான அயோத்தியில், பா.ஜ.க பரிவாரங்களால் இடிக்கப்பட்ட மசூதியைத் திரும்பக் கட்டுவது எனச் சொல்வதே இந்துக்களைப் பொறுமை யிழக்கச் செய்யும்' என்கிறார். கார்ப்பரேட்டுகளும் காவி உடை சாமியார்களும்தான் ஆட்சி நிர்வாகத்தில் செல்வாக்காக உள்ளார்கள். அதனால்தான், பரமஹன்ஸ்தாஸ் என்ற சாமியார் "டிசம்பர் 6-ந் தேதி தீக்குளிப்பேன்' என எச்சரிக்கிறார். "வாழும் கலை' அமைப்பை நிறுவியுள்ள சாமியார் ரவிசங்கர், "அயோத்தி பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தலையிடக்கூடாது' என்றும், "இந்த விவகாரத்தினால் சிரியாவைப் போல இந்தியாவிலும் உள்நாட்டுப் போர் வெடிக்கும்' என்றும் ஆவேசப்படுகிறார். அமைதி வழியில் வாழ்வதே ஆன்மிகம் வலியுறுத்தும் வாழும் கலை என நினைக்கும் நிலையில், காவி உடைக்காரர்கள் அரசியல் சட்டத்தை மீறி மிரட்டல் தொனியைக் கையாள்வது இந்தியா வின் பன்முகத் தன்மைக்கு வைக்கப் படும் வேட்டு.