mavali

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

எதிர்காலத்தில், ஆந்திர மாநிலத்தில் துணை முதலமைச்சர் பவன்கல்யாண் கட்சி ஆட்சியைப் பிடிக்குமா?

Advertisment

பவன்கல்யாணின் எதிர்காலத்தைப் பற்றி மாவலியால் சொல்லமுடியாது. கூட்டணிக் கட்சியாக ஒருவரைச் சேர்த்துக்கொண்டு அந்தக் கட்சிக்கு உரிய மரியாதை, நல்ல பதவிகளை வேண்டுமானால் ஒரு கட்சி தரலாம். ஆனால், அவர்களே வளர்ந்து போட்டிக் கட்சியாக உருவாவதை சந்திரபாபு நாயுடு மட்டுமல்ல... எந்த அரசியல் தலைவருமே விரும்பவும் மாட்டார். அனுமதிக்கவும் மாட்டார்.

Advertisment

வை. பாலசுப்ரமணியன், மன்னார்குடி

தினமும் செய்திகளில் ரவுடி கைது என்று செய்திகள் வருகின்றனவே ரவுடி என்பது அவர்கள் படித்து வாங்கிய பட்டமா?

ஆமாம் படித்து வாங்கிய பட்டம்தான். அவர்களைவிட சீனியர் ரவுடிகளைப் பார்த்தோ, பழகியோ பொதுமக்களுக்கு தொந்தரவு செய்வதும், சட்டம் ஒழுங்குக்கு இடையூறு செய்வதுமே அவர்கள் படிக்கவேண்டிய பாடங்கள். போதைப் பொருள் கடத்தல், அடிதடி, இவற்றையெல்லாம் முடித்தவர்கள் முதுகலை பட்டம் முடித்தவர்கள். கொலை, பாலியல் அத்துமீறல் போன்றவற்றில் தேறியவர்கள் டாக்டர் பட்டம் வாங்கியவர்கள்.

Advertisment

வண்ணைகணேசன், கொளத்தூர்

மாநிலங்கள் வசம் மீண்டும் மருத்துவ மாணவர் தேர்வு நடத்தும் உரிமை தேவையென ஸ்டாலின் வலியுறுத்துகிறாரே?

அதற்கு ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும். மோடியின் ஆட்சி போய் காங்கிரஸ் ஆட்சியோ, அதன் கூட்டணி ஆட்சியோ ஏற்படவேண்டும். பா.ஜ.க.வின் நோக்கம், வெறுமனே மையப்படுத்தப்பட்ட தகுதித் தேர்வு நடத்துவது மட்டுமல்ல... மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து கல்வியை முழுக்க மத்திய அரசின் வசம் வைத்துக்கொள்வதும்தான். அதனால் பா.ஜ.க. அரசிடம் அதை எதிர்பார்க்கமுடியாது. அல்லது அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து மாணவர்களைத் திரட்டி பா.ஜ.க.வே திகைத்துப் போகுமளவுக்கு ஒரு போராட்டத்தை நடத்தவேண்டும்.

த.சத்தியநாராயணன், அயன்புரம்

"வரும் சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றுவதே இலக்கு' என முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளாரே?

அதற்கு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் போன்ற சம்பவங்கள், மிச்சமுள்ள இரண்டு வருடங்களிலும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் முதல்வரும் அமைச்சர்களும்.

ரா.ராஜ்மோகன், முட்டியூர்

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுக்கும் பத்து லட்ச ரூபாய் நிவாரணம் போதாது என்கிறாரே முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.?

ஆமாம், ஓ.பி.எஸ். போதாது என்கிறார். வேறு சிலரோ இதுவே அதிகம்… குடிகாரர்களுக்கு, அரசு கஜானாவிலிருந்து பத்துப் பத்து லட்சம் செலவிடவேண்டுமா என்கிறார்கள். குடித்த தவறைச் செய்தவர்கள் இப்போது இல்லை. அவர்கள் தவறுக்கு விலையாய் உயிரையே தந்துவிட்டார்கள். மிச்சமிருப்பவர்கள் மனைவி, குழந்தைகள், வயதில் மூத்த தாய்-தந்தை போன்றவர்கள். சமூகத்தின் அடித்தட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? அரசு, நிர்வாகத்தில் விழிப்பாய் இல்லாத தவறுக்கு அபராதம் என நினைத்துக்கொண்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு 10 லட்சம் கொடுக்கவேண்டியதுதான். தற்போதைய பொருளாதாரத்தில் 10 லட்சம் மிகப்பெரிய தொகையெல்லாம் இல்லை.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

60-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர்கள் பதவி காலியாக உள்ளது என்று கூறுகிறாரே மருத்துவர் ராமதாஸ்...

மருத்துவர் ராமதாஸின் தரவு உண்மையாயிருக்கும் பட்சத்தில், முதல்வர் ஸ்டாலின் அந்தப் பதவிகளை நிரப்புவதில் வேகம் காட்டவேண்டும். தமிழக மாணவர்களின் உயர்கல்வி தொடர்பான விஷயமல்லவா?… இதற்கல்லாமல் வேறெதற்கு முன்னுரிமை தரவேண்டும்!

தே.மாதவராஜ் கோயமுத்தூர்

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள்தான் தி.மு.க.வில் சேர்ந்து தி.மு.க. அமைச்சரவையில் இடம்பெற்று ஆட்சியை நடத்துவதாகப் பேசப்படுகிறதே?

கே.கே.எஸ்.எஸ்.ஆர்., செந்தில்பாலாஜி, செல்வகணபதி, சேகர்பாபு போன்றோர்களை வைத்துச் சொல்கிறீர்கள்போல. அப்படிப் பார்த்தால் மத்திய பா.ஜ.க. அரசில் பாதிக்குப் பாதி காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சியிலிருந்து இழுத்துவரப்பட்டவர்கள்தானே.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்

நடிகை தீபிகா படுகோனே சம்பளம் 30 லட்சமாமே...?

உங்களுக்கு யாரோ தவறான தகவல்கள் தந்திருக்கிறார்கள். தமிழகத்தின் டாப் ஹீரோயின்களே கோடியில் சம்பளம் வாங்குகிறார்கள். தீபிகா சம்பளம் 30 கோடி என்று சொன்னால் ஓரளவு பொருத்தமாக இருக்கும்.