வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
""நான் இன்னும் எத்தனை நாட்களுக்கு உயிருடன் இருப்பேனோ அதுவரை மக்களுக்கு சேவை செய்வேன்''’என்று உருக்கமாகப் பேசுகிறாரே கர்நாடக முதல்வர் குமாரசாமி?
எத்தனை நாட்களுக்கு -மாதத்துக்கு -ஆண்டுக்கு பதவியில் இருக்கிறாரோ அதுவரை மக்களுக்கு -மக்களுக்கு மட்டுமே "சேவை' செய்தாலே போதும் என்கிறார்கள் கர்நாடகவாசிகள்.
பி.மணி, குப்பம், ஆந்திரா.
"தமிழக சட்டசபையில் பத்துப்பேர் காவி உடையுடன் அமரும் காலம் வெகுவிரைவில் வரும்' என்கிறாரே அமித்ஷா?
காவி உடை இல்லாவிட்டாலும் 2001-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ஜ.க. 4 தொகுதிகளில் வெற்றிபெற்று சட்டமன்றம் சென்றது. அதுதான் தமிழக சட்டமன்றத்தில் இதுவரை பா.ஜ.க. பெற்ற அதிகளவு பிரதிநிதித்துவம். அதில் எச்.ராஜாவும் ஒருவர். அதைவிட வலிமையான கூட்டணி அமைத்தால் அமித்ஷாவின் கணக்கு நிறைவேறும். இல்லையென்றால், ஜனநாயகத்திற்குப் புறம்பான முறையில்தான் அதனை செயல்படுத்த முடியும். தமிழ்நாட்டில் தொடர்ந்து காலி நாற்காலிகளுடன் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்திவரும் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு இது தெரியும்.
ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி
"அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பங்களுக்கு சசிகலாவே காரணம்' என்கிறாரே திவாகரன்?
அது மட்டுமா சொல்லியிருக்கிறார்? "ஜெயலலிதா தனக்குப் பிறகு அடுத்த தலைவரை உருவாக்காத காரணத்தால்தான், அ.தி.மு.க.வில் தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பதுபோல செயல்படுகிறார்கள்' என்றும் சொல்லியிருக்கிறார். அதனால் திவாகரன் தனது உடன்பிறந்த அக்காவை மட்டும் விமர்சிக்கவில்லை. அந்த அக்காவின் உடன்பிறவா அக்காவையும் சேர்த்தே குற்றம் சாட்டுகிறார்.
நித்திலா, தேவதானப்பட்டி
நாட்டைக் காக்கவும் ஜனநாயகத்தைக் காக்கவும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் கை குலுக்கியிருக்கிறாரே ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசக் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு?
தெலுங்கு தேசம் கட்சியை நிறுவிய என்.டி.ராமராவின் ஆட்சியைக் கவிழ்க்க அந்தக் கட்சிக்குள்ளிருந்தே பாஸ்கர்ராவ் என்பவரை இழுத்தார் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் இருந்த இந்திராகாந்தி. அதனால், தெலுங்கு தேசம் கட்சிக்கு காங்கிரஸ் ஜென்ம எதிரியானது. பின்னர், என்.டி.ஆரை அவரது மருமகன் சந்திரபாபு நாயுடுவே ஓரங்கட்டி, "தெலுங்கு தேசம்' கட்சியைக் கைப்பற்றியபோது, "காங்கிரசே பரவாயில்லை' என்பதுபோல அதிர்ச்சி யானார் என்.டி.ஆர். அந்த சந்திரபாபு நாயுடு நம்பிய பா.ஜ.க. அவரை ஏமாற்றிவிட்டது. அதனால் தற்போதைய எதிரியான பா.ஜ.க.வை வீழ்த்த பழைய எதிரியான காங்கிரசுடன் கைகுலுக்கி இருக்கிறது தெலுங்கு தேசம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பரும் இல்லை.
வி.கார்மேகம், தேவகோட்டை
ராஜபக்சேவை பிரதமராக்கியதன் மூலம் இலங்கையை, சீனா தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டதாமே?
இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகளுக்கும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்த ஆசை உண்டு. அதை அறிந்து, அவர்கள் அனைவரையும் "இலங்கையின் வளர்ச்சி' என்ற பெயரில் தன் குடும்ப வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் திறமை வாய்ந்தவர் ராஜபக்சே.
________________
ஆன்மிக அரசியல்
அ.யாழினி பர்வதம், சென்னை-78
அயல்நாடுகளிலும் ஆன்மிக அரசியல் உண்டா?
ஆன்மிகமும் உண்டு. அந்தந்த நாடுகளுக்கான அரசியலும் உண்டு. இரண்டும் சேரும்போது அது பெரும்பான்மை மதஅரசியலாக மாறிவிடுவது தான் பல நாடுகளிலும் வழக்கமாக இருக்கிறது. முஸ்லிம்கள் அதிகமாக உள்ள பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் ஆசியா பீபி என்ற கிறிஸ்தவ பெண்மணி, இவர் வேலை செய்துகொண்டிருந்தபோது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட குடிதண்ணீர் தொடர்பான தகராறில் மதரீதியான சச்சரவு ஏற்பட்டது. மத நம்பிக்கைகளை அவமதிக்கும் விதத்தில் ஆசியா பீபி செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. பாகிஸ்தானில் மத அவமதிப்பு, குறிப்பாக இஸ்லாம் -முகமது நபி மீதான அவமதிப்பு என்பது மரண தண்டனைக்குட்பட்டது. அதனால் "ஆசியா பீபிக்கு கீழ்க்கோர்ட்டில் விதிக்கப்பட்ட மரண தண்டனை ஹைகோர்ட்டிலும் உறுதி செய்யப்பட்டது. ஆசியா பீபியின் மரண தண்ட னையை ரத்து செய்ய வேண்டும்' என்ற லாகூர் மாகாண கவர்னர் சல்மான் தசீர் 2011-ல் மதத்தீவிரவாத இயக்கங்களால் கொல்லப்பட்டார். அதுபோலவே ஷப்பாஸ் என்ற அமைச்சரும் படுகொலை செய்யப்பட்டார். பல இடங்களிலும் வன்முறைகள் வெடித்தன. இந்நிலையில், ஆசியா பீபி, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அதனை விசாரித்த தலைமை நீதிபதி சாகிப் நிசார், “"ஆசியா பீபி மத அவமதிப்பு செய்ததை தகுந்த ஆதாரங்களுடன் அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை, எனவே அவரை விடுதலை செய்கிறேன். அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப் படுகிறது'’என உத்தரவிட்டார். "எனக்கு விடு தலையா... என் னால் நம்பவே முடியவில்லை'’என்றார் ஆசியா பீபி. "சட்டரீதியாக அவர் விடுவிக் கப்பட்டாலும், போதிய பாதுகாப்பு கிடைக்காது என்பதால் அவர் பாகிஸ்தானை விட்டு வேறு நாட்டிற்கு செல்வதே நல்லது' என்கிறார் அவரது வழக்கறிஞர். அத்துடன், "மரணதண்டனையை ரத்துசெய்து, தீர்ப்பளித்த நீதி பதிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்' என மத அடிப்படைவாத கட்சிகள் குரல் கொடுத்து, கலவரச் சூழலை உருவாக்கியுள்ளன. பாகிஸ்தான் அரசும் இவர்களுக்குச் சாதக மாகவே செயல்படுகிறது.