வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"தமிழகத்தில் நல்லாட்சி நடப்பதால்தான் தினமும் மழை பொழிகிறது' என அமைச்சர் செங்கோட்டையன் சொல்கிறாரே?

அப்படிப் பார்த்தால், 2015-ல் ஜெயலலிதா ஆட்சியில் பெருமழையும் அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளமும் பல மனித உயிர்கள் பறிக்கப்பட்டு, விலங்குகள் கொல்லப்பட்டு, விளை நிலங்களை வீணடித்து, குடியிருப்புகளை மிதக்கவிட்டு, உடைமைகளை நாசமாக்கியதே அதுதான் அதிகப்படியான நல்லாட்சியோ!

sardarpatelstatue

Advertisment

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

உண்மை கண்டறியும் சோதனை என்கிறார்களே… அப்படியென்றால் என்ன?

குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத சிக்கலான வழக்குகளில் சந்தேகத்திற்குரியோரிடம் நடத்தப்படும் சோதனைகளில் முக்கியமானது உண்மை கண்டறியும் சோதனை. இதில் ப்ரெய்ன் மேப்பிங், பாலிகிராஃப் எனப்படுபவை மூளை மற்றும் இதயத்தின் அதிர்வலைகளை இயந்திரத்தின் மூலம் கண்டறிந்து குற்றவாளியை அடையாளம் காண்பதாகும். உதாரணமாக, ஒரு கொலை நடந்திருந்தால் அது சம்பந்தப்பட்ட தடயங்களை இந்த சோதனைக்குள்ளாகும் நபர்களின் முன்வைத்து அதனால் அவர்களின் இதயத்துடிப்பு, மூளை செயல்பாடு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றத்தின் அளவைக் கொண்டு குற்றவாளியைக் கண்டுபிடிப்பதாகும். மற்றொரு முறை, சோடியம் பென்டத்தால்-சோடியம் அமிட்டால் போன்ற மயக்க மருந்துகளை சந்தேகத்திற்குரியவரின் உடலில் செலுத்தி, அவரை அரை மயக்கத்திற்குள்ளாக்கி, போலீசார் கேட்கும் கேள்விக்கு மனதில் உள்ள பதிலை சொல்ல வைத்து அதன் மூலமாக உண்மையைக் கண்டுபிடிப்பதாகும். உண்மை கண்டறியும் சோதனைகள் மூலம் பெறப்படும் பதில்கள் உண்மையான குற்றவாளிகளை 100% அடையாளம் காட்டுகிறதா என்பது இதுவரை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அத்துடன், இத்தகைய சோதனைகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகளால் அப்பாவிகள் பாதிக்கப்படுவதால் மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்பும் அதிகரித்துள்ளது.

Advertisment

தூயா, நெய்வேலி

உலகிலேயே மிக உயரமான சிலையை பட்டேலுக்கு நிறுவியிருக்கிறதே மோடி அரசு?

பட்டேல் இந்தியாவின் "இரும்பு மனிதர்'. இந்திராகாந்தி இந்தியாவின் "இரும்புப் பெண்மணி'. நேரு "ஆசிய ஜோதி'. மகாத்மா காந்தி "தேசத் தந்தை'. காந்தி, நேரு, இந்திரா ஆகியோருக்குள்ள உலகளாவிய புகழின் உயரத்தைக் குறைக்கலாம் என்ற அரசியல் கணக்குடன் பட்டேலுக்கு 3000 கோடி ரூபாய் செலவில் 182 மீட்டர் உயரமான சிலை வைத்துள்ளது மோடி அரசு. புகழ்வானில் பட்டேல் உட்பட அந்தந்த தலைவர்களுக்குரிய உயரத்தை யாரும் அழிக்க முடியாது என்பதை அதிகார போதையில் இருப்பவர்கள் உணர்வதில்லை.

நெய்வேலி க.தியாகராஜன், கொரநாட்டுக் கருப்பூர்

டான்சி வழக்கில் ஆவணத்திலுள்ள கையெழுத்து தன்னுடையதல்ல என்று வாதாடிய ஜெ., நீதிமன்றத்தையும், காவல்துறையையும் இழிவாகப் பேசிய ஹெச்.ராஜா, முன்னறிவிப்பின்றி கைதுசெய்யப்பட்ட நக்கீரன்கோபால்… ஒப்பிடுக?

முதல் இருவரும் சம்பந்தப்பட்ட வழக்குகளில், சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து தப்பிக்க தங்களைச் சார்ந்தோரைச் சார்ந்திருந்து கடைசியில் நீதியின்முன் தவறை ஒப்புக் கொண்டு மன்னிக்கப்பட்டவர்கள். மூன்றாமவர், அடக்குமுறைகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி, நீதியின் துணையுடன் வெற்றி கண்டவர்.

ஃ.முரளி, விழுப்புரம்-2

"சுனாமியே வந்தாலும் எங்கள் இருவரையும் பிரிக்க முடியாது' என்று ‘ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ்.’ கூட்டறிக்கை விட்டிருப்பது எதைக் காட்டுகிறது?

அரசியலில் ஏதோ ஒரு சுனாமியை இருவரும் எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.

லட்சுமி செங்குட்டுவன், வேலூர்

நித்தியானந்தா தமிழ்ப் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறாராமே?

அவர் என்ன புதிதாகவா "நடிக்க'ப் போகிறார்?

______________

ஆன்மிக அரசியல்

சே.கார்த்தி, அள்ளூர்

இஸ்லாமியப் பெண்களை மசூதிக்குள் நுழைய அனுமதிப்பதில்லை. இந்துப் பெண்கள் மட்டும் சபரிமலைக் கோவிலுக்குள் நுழைய அனுமதி கோரி போராட்டம் நடக்கிறதே?

முஸ்லிம் சமுதாயத்தில் "மசூதிக்கு (பள்ளிவாசல்) வந்து தொழுகை நடத்த வேண்டும்' என்பது ஆண்களுக்கு கட்டாயமான கடமை. "பெண்கள் விரும்பினால் மசூதிக்கு சென்று தொழலாம். அவர்களை அனுமதிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார் முகமது நபி. முஸ்லிம் சமுதாயத்தின் வாழ்நாள் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படும் "ஹஜ்' யாத்திரை மேற்கொள்ளும் ஆண்-பெண் இருபாலரும் காஃபாவில் தொழுகை நடத்துவதை "ரம்ஜான்', "பக்ரீத்' போன்ற பெருநாட்களில் தொலைக்காட்சிகளில்-இணையதளங்களில் ஒளிபரப்பாகும் காட்சிகள் மூலம் காணலாம். வழிபாட்டு இடத்தில் கருவறை என ஒன்றோ, அதன் புனிதம் கெட்டுவிடும் என்றோ இஸ்லாமில் கிடையாது. மாற்று மதத்தவரையும் பள்ளிவாசலுக்கு முகமது நபி அழைத்துச் சென்றிருப்பதை மார்க்க அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, அந்தந்த பகுதிக்குரிய பழக்கவழக்கங்கள் மதங்களைக் கடந்து கடைப்பிடிக்கப்படுகின்றன. முடி இறக்குதல் எனும் மொட்டையடிக்கும் பழக்கம்கூட இந்து மதத்தைக் கடந்து மாற்று மதங்களிலும் கடைப்பிடிக்கப்படுவதைக் காணலாம். ஆண்களால் கட்டமைக்கப்பட்ட பழக்க வழக்கங்கள் நிலவும் நம் நாட்டில் எல்லா மதங்களிலும் ஆணுக்கு இருக்கும் உரிமைகள் பெண்ணுக்கு இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. அந்த அடிப்படையில் முஸ்லிம் பெண்களை மசூதிக்குள் அனுமதிப்பதைத் தடை செய்வது குறித்தும் பரவலாகப் புகார்கள் எழுகின்றன. அப்படிப்பட்ட இடங்களில், முஸ்லிம் பெண்கள் தங்கள் உரிமையை வலியுறுத்த முடியும். இந்துப் பெண்களை அனுமதிக்க மறுக்கும் சபரிமலை போல, முஸ்லிம் பெண்களை அனுமதிக்க மறுக்கும் மசூதிக்குள் செல்வதற்கான உரிமையை அவர்கள் சட்டரீதியாகப் பெற முடியும்.