பூ.மாறன், மணலி
"தேர்தலில் போட்டியிட பணமில்லை' என்கிறாரே நிர்மலா சீதாராமன்?
மனமில்லை என்பதை தவறாக உச்சரித்துவிட்டார். மக்களைச் சந்தித்து ஓட்டுக்களை வாங்கி நேர்வழியில் அமைச்ச ராவதற்குத் தைரியமில்லாமல் அளந்துவிடுகிறார். நிதியமைச்ச ருக்கு மக்கள் மத்தியில் எத்தனை செல்வாக்கு என்பது அம்பல மாகிவிடுமென்ற பயம்தான்.
எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
"அடிக்கடி கூட்டணி மாறும் பா.ம.க. ஒரு வேடந்தாங்கல் பறவை' என்ற இ.பி.எஸ்.ஸின் பேச்சு..?
எடப்பாடியின் பேச்சில் கணிசமாக உண்மையும் இருக்கிறதுதான். இதே எடப்பாடி, பா.ம.க. தங்கள் பக்கம் கூட்டணிக்கு வந்திருந்தால் ஐயா ராமதாஸின் பெருமைகளையும், அன்புமணியின் மகத்துவத்தையும் பேசியிருக்க மாட்டாரா என்ன? கிடைக்காத பழம் புளிக்கும் என்ற ஈசாப் நரி கதைதான் எடப்பாடியின் பேச்சு. அடுத்த சீஸனில் எடப்பாடிக்கும் மாம்பழ ஆசை வரலாம்… பறவையும் புகலிடத்தை மாற்றிக் கொள்ள நேரலாம். எனவே இரு தரப்பும் இப்போது அத்துமீறாமல் பேசிக்கொள்வது நல்லது.
வாசுதேவன், பெங்களூரு
அந்தக்கால கிரிக்கெட் வீரர்கள் மேட்ச் விளையாடவே மிகவும் குறைந்த பணம் பெற்றனர். இந்தக் கால வீரர்கள் அபராதமே லட்சக்கணக்கில் செலுத்து கின்றனரே?
நாட்டுக்காக விளையாடுவது மாறி நோட்டுக்காக விளையாடும்போது அதற்குத் தட்டுப்பாடு வருமா என்ன? ஒவ்வொரு ஐ.பி.எல். அணியின் பெயரில் மட்டும்தான் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் பெயர் இருக்கிறது. அணியில் வேற்று நாட்டு, வேற்று மாநில வீரர்கள்தான் பெரும்பான்மையாய் இருக்கின்றனர்.
அ.யாழினிபர்வதம், சென்னை-78
நாம் தமிழர் கட்சியின் விருதுநகர் வேட்பாளர் சி.கவுசிக்கிற்கு தமிழ் படிக்கத் தெரியாதாமே?
"ராஜாதி ராஜா' படத்தில், ஓட்டலில் வெங்காய பஜ்ஜி ஆர்டர் செய்துவிட்டு வெங்காயம் எங்கே என்பார் ஜனகராஜ். சப்ளையர், “"முதலாளி நாளைக்கு இவர் மைசூர் போண்டா ஆர்டர் பண்ணிட்டு அதுல மைசூர் எங்கே?ன்னு கேட்பார். அவ்ளோ பெரிய போண்டா நாம சுட முடியுமா?'’என சமாளிப்பார். அதுபோல நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் என்பதால் தமிழ் தெரிந்திருக்க வேண்டுமா என்ன? நாற்பது தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேடிப் பிடிப்பது எத்தனை சிரமம் தெரியுமா?
தே.மாதவராஜ், கோயமுத்தூர்
உலகில் உயரிய விருது எது? எந்த நாடு வழங்குகிறது?
இலக்கியத்துக்கு, சமூக சேவைகளுக்கு, அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு, புகைப்படத் திறமைக்கு, அமைதிக்கு, திரைப்படங்களுக்கு என தரவாரியாக விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் எந்தத் துறைக்கு கேட்கிறீர்கள்? பரவலாக அறியப்பட்ட சில விருதுகளைச் சொல்கிறேன். நோபெல் பரிசு. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி என்ற தலைப்புகளில் நோபெல் பரிசுகளை சுவீடன் நாடு நீண்டகாலமாக வழங்கிவருகிறது. ராமன் மகசசே விருது, பிலிப்பைன்ஸ் அரசால் வழங்கப்படும் விருது. புலிட்சர் விருது, ஊடகவியல், இலக்கியம், இசை இவற்றுக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் விருது. திரைப் பங்களிப்புக்கான ஆஸ்கார் விருதும் நீங்கள் அறிந்ததே. இன்னும் நூற்றுக்கணக்கில் விருதுகள் இருக்கின்றன. விருதுகளில் உயர்வும் தாழ்வும் இல்லை. சரியான நபர்களுக்கு அளிக்கப்படும் விருதுகள் எல்லாமே உயர்வானவைதான்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
"தேர்தல் பத்திரம் விவகாரத்தை திசை திருப்பவே கெஜ்ரிவால் கைது' என பினராயி விஜயன் கூறியிருக்கிறாரே?
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரக்கலா பிரபாகர், "தேர்தல் நிதிப் பத்திர முறைகேடு, உலகின் மிகப்பெரிய முறைகேடு'' என விமர்சித்திருக் கிறார். ஒன்று ப்ளஸ் ஒன்று எனக் கணக்கிட் டால் இரண்டு வரும். பினராயி விஜயன் மகள் வீணா விஜயன், கெஜ்ரிவால், கவிதா, ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், மஹூவா மொய்த்ரா என தேர்தல் நேரத்தில் விசாரணை அமைப்புகளால் நெருக்கப்படும் எதிர்க் கட்சித் தலைவர்களைக் கணக்கிடும்போதும், தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி அபராதம் விதிப்பதையும் பார்த்தால், பினராயி விஜயன் கூற்று உண்மையெனவே படுகிறது.
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
கேரளாவில் கைச் சின்னத்துக்கு ஓட்டுப் போட்டாலும், அரிவாள் சுத்தியல் சின்னத்துக்கு ஓட்டுப் போட் டாலும் வெற்றி என்னவோ இந்தியா கூட்டணிக்குத்தானே...?
அதுக்கு நேர் மாறாகவும் இருக்க லாம். இப்படி எல் லாரும் இந்தியா ஆதரவு ஓட்டுக்களை பிரித்துப் போட்டு, பா.ஜ.க.வுக்கான ஓட்டு பிரியாமல் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் விழுந்து பா.ஜ.க. சில தொகுதிகளில் ஜெயித்துவரவும் செய்யலாம். கூடாரத்துக்குள் ஒட்டகத்தை தலையை நுழைத்துக்கொள்ள அனுமதிப்பவன், கடைசியில் கூடாரத்துக்கு வெளியில் படுக்க நேரிடும் என்பது அனுபவ மொழி.