அ.குணசேகரன், புவனகிரி

'ஙங் பர்ர்...' மாவலி யார் பக்கம்?

நியாயத்தின் பக்கம்! பரபரப்பு, அவதூறு இவற்றைக் கடந்து உண்மைகள் வெளியாகி, தவறு யார் பக்கம் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

எஸ்.பூவேந்தஅரசு, பெரிய மதியாக்கூடலூர், சின்னதாராபுரம்

Advertisment

தமிழகத்தில் முன்னாள் அமைச்சர்கள் மருங்காபுரி பொன்னுசாமி, சத்தியமூர்த்தி, செல்வகணபதி போன்ற முன்னாள்-இந்நாள் அ.தி.மு.க.வினரும் அவர்களின் தலைவியு மான ஜெயலலிதா ஆகியோர் ஊழல் வழக்குகளில் தண்டிக்கப் பட, தி.மு.க.வினர் மட்டும் தப்பித்துக் கொள்கிறார்களே?

தி.மு.க. மீது அ.தி.மு.க. ஊழல் புகார் தெரிவித்தது. எம்.ஜி.ஆர். சொன்ன புகார் சர்க்காரியா கமிஷன் வரை சென்றது. ஜெ. ஆட்சியில் வழக்குகள் போடப்பட்டன. எதுவும் நிரூபணமாகவில்லை. அ.தி.மு.க. மீது தி.மு.க. புகார் தெரிவித்து, தனது ஆட்சிக் காலத்தில் வழக்குகளைப் போட்டது. அதில்தான் நீங்கள் சொல்லும் நால்வரும் தண்டிக்கப்பட்டனர். புகார் சொல்வதைவிட அதை நிரூபிக்கும் வலிமை முக்கியமானது. தி.மு.க.கூட, 1991-96 அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல்கள் தொடர்பாக தொடர்ந்த வழக்குகளில்தான் மேற்கண்ட நால்வருக்கும் தண்டனை கிடைக்கச் செய்ததே தவிர, அதன்பின் அமைந்த ஜெ. ஆட்சி தொடர்பான ஊழல்களில் தண்டனைத் தீர்ப்பு வரவில்லை. தண்டிக்கப்பட்ட -குற்றம்சாட்டப்பட்ட ஒருசிலர் தி.மு.க.வில் சேர்ந்த அதிசயமும் நிகழ்ந்தது.

சி.கார்த்திகேயன், சாத்தூர்

Advertisment

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியைப் பிரிக்க பல வகையிலும் முயற்சிகள் நடக்கிறதே, ஏன்?

வாக்குபலம் அடிப்படையில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்த அந்தக் கூட் டணிக்கு உள்ள வெற்றி வாய்ப்புதான்.

Nram-Nakkheerangopal

தூயா, நெய்வேலி

"கவர்னரையும் நிர்மலாதேவியையும் நக்கீரன் அட்டையில் வெளியிட்டது போல நாங்கள் வெளியிடமாட்டோம்' என நீதிமன்றத்தில் "இந்து' என்.ராம் சொன்னதன் அடிப்படையில், "நக்கீரன் செய்தது தவறு' என்று "துக்ளக்' இதழ் சீண்டியிருக்கிறதே?

மத்திய பா.ஜ.க. அரசு நியமித்த கவர்னராயிற்றே. அவரைக் காப்பாற்றத் துடிக்கும் துக்ளக் இதழ், நக்கீரன் செய்தது தவறு என்பதுபோல என்.ராம் அவர்களின் கருத்துகளைத் திசை திருப்புகிறது. நீதிமன் றத்தில் நக்கீரன் ஆசிரியர் ஆஜர்படுத்தப் பட்ட நேரத்தில் அங்கு வந்த என்.ராமின் கருத்துகளைப் பதிவு செய்த நீதிபதி கோபிநாதன், "நக்கீரன்' இதழை அவரிடம் காண்பித்து, "இரண்டு குற்றவாளிகள் நடுவே கவர்னர் படத்தை வரிசைப்படுத்தியுள்ளது சரிதானா? நீங்கள் இதுபோல வெளியிடுவீர் களா' என கேட்டார். அதற்கு என்.ராம், "நான் இதுபோல வெளியிட மாட்டேன். ஆனால், நக்கீரனில் அப்படி வெளியிட்டிருப்பது குற்றச் செயல் ஆகாது. ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு பாணி உண்டு. பத்திரி கைத் துறையைப் பல்வேறு வகையாகப் பிரிக்கலாம். அதன்படி புலனாய்வுச் செய்தி களை வெளியிடும் "நக்கீரன்' அதன் தனித் துவத்தில் இவ்வாறு வெளியிட்டுள்ளது. இதேபோன்ற படங்கள் -கேலிச் சித்திரங்கள் ஆங்கில பத்திரிகைகளி லும் மேலை நாடுகளி லும் இதைவிட அதிகமாக வருகின்றன. அதைத் தடுப் பதற்கு சட்டத்தில் இடம் இல்லை. அது குற்றமும் இல்லை' என்று அழுத்தமாகக் கூறினார். சட்டப்பார்வையுடன் நீதிபதி அதனை ஏற்று தீர்ப்பளித்தார். இதைத் திரித்து வெளியிடுவதற்குப் பெயர்தான் "துக்ளக் தர்பார்.'

எம்.கல்யாணசுந்தரம், கும்பகோணம்

விலைவாசி உயர்வு பற்றிப் பேசினால்கூட தற்போதைய ஆட்சியில் தேசத்துரோக வழக்குப் போட்டுவிடுகிறார்களே?

உண்மை நிலவரத்தை உரக்கச் சொல்வோர் அனை வருமே இந்த ஆட்சியில் ஆன்ட்டி இந்தியன்கள்தான்.

_______________

ஆன்மிக அரசியல்

நித்திலா, தேவதானப்பட்டி.

தோசை சுடும் விதத்தில்கூட சாதி அடையாளம் இருப்பதாக எழுத்தாளர் வே.மதிமாறன் கூறுகிறார். சாதி, மதம் எல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான் ஆன்மிகம். அப்படி யென்றால், கோவிலில் கொடுக்கப்படும் உணவுப் பிரசாதங் களிலும் இதுபோன்ற வித்தியாசம் உண்டா?

உணவு என்பது அந்தந்த மண்ணில், அதனதன் தட்பவெப்ப நிலைக்கேற்ப விளையும் தானியங்களால் அவரவர் பொருளாதார வசதிக்கேற்ப சமைக்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை குடும்பப் பொருளாதார நிலைமை என்பது சாதிய ஏற்றத்தாழ்வுகளால் கட்டமைக்கப்பட்டது. அதனால்தான் தோசையில்கூட "நெய் -எண்ணெய் -வறட்டுத் தோசை' என அந்தந்த சாதியின் பொருளாதார நிலைக்கேற்ற வகைகள் கடைப்பிடிக்கப்பட்டன. இது இட்லி, சட்னி, சாம்பார், மோர்க் குழம்பு, பிரியாணி என எல்லாவற்றிலும் எதிரொலிக்கும். சமூகநீதி தந்த மாற்றமும், நகர்ப்புறமயமாக்கலும், உடல்நலன் கருதி "நான்-ஸ்டிக்' தோசைக் கல்லைப் பயன்படுத்துவதும் இன்றைய தலைமுறையினரிடம் இந்த வேறுபாட்டை பெருமளவு அகற்றிவிட்டன. சில கிராமப்புறங்களில் தற்போதும் சாதிரீதி யான உணவுமுறையைக் காணலாம். இது கோவில்களிலும் எதிரொலிக்கும். குலசாமிக்கு பொங்கலிடுவோரும் உண்டு. கடாவெட்டி சாராயம் படைப்போரும் உண்டு. சிவன் கோவிலில் மிளகு பொங்கல் ஸ்பெஷலாக இருக்கும். பெருமாள் கோவிலின் புளியோதரைக்கு நிகரில்லை. அம்மன் கோவிலில் கூழ் அப்படியொரு தெம்பான உணவு. கிறிஸ்தவ சர்ச்களில் தரப்படும் அப்பத்தை பக்தர்கள் பெறுகின்ற முறையிலேயே அவர்களை அடையாளம் கண்டுகொள்வார்கள் பாதிரியார்கள். பகல் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் ரம்ஜான் நோன்புக்குப் பிறகு, உடலுக்கான முழு சக்தியையும் தரும் வகையில் இருக்கும் பள்ளிவாசலில் தரப்படும் நோன்புக் கஞ்சி. உணவில் சாதி, மதம், தட்பவெப்பம் என அனைத்தும் வெளிப்படும். இவற்றைக் கடந்து, அவரவர் வாழ்க்கை முறைக்கேற்ற உணவு வகைகளை உட்கொள்வதே உடல்நலன் காக்கும்.