ப.மணி, திருப்பூர்

"அ.தி.மு.க.வை பெண்தான் தலைமையேற்று வழிநடத்துவார்' என்ற செல்லூர் ராஜுவின் கருத்து பற்றி?

கட்சியில் உள்ள ஃபிடல்காஸ்ட்ரோ மீதும் சேகுவேரா மீதும் அமைச்சருக்கு பலமான அதிருப்தி இருக்குமோ!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு,

Advertisment

"தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதித்துள்ள இலங்கை அரசை, இந்தியா எச்சரிக்க வேண்டும்' என ஸ்டாலின், ராமதாஸ், வைகோ என பல தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனரே?

"குஜராத் மீனவர்கள்போல தமிழக மீனவர்களும் கடல் எல்லை தாண்டும் விவகாரத்தில் பாதிக்கப்படுகின்றனர். பா.ஜ.க. ஆட்சி அமைந்தால், அவர்கள் நலன் பாதுகாக்கப்படும்' என ஏறத்தாழ நான்கரை ஆண்டுகளுக்குமுன் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார் மோடி. அவர்தான் இப்போது இந்தியாவின் பிரதமர். உங்கள் கேள்வியை அவருக்கும் அனுப்பி வையுங்கள்.

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

Advertisment

சமீபத்தில் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி பற்றி?

உத்தரபிரதேசம் -உத்தரகாண்ட் என இரு மாநிலங்களுக்கு முதல்வராக இருந்தவர் என்ற சாதனை படைத்த மூத்த காங்கிரஸ் தலைவர். அந்த மூத்த தலைவர் ஆந்திராவில் கவர்னராக இருந்தபோது முத்தக் கிழவராக மாறி, பின்னர் தன் வாழ்வின் கடைசி காலத்தில் டி.என்.ஏ. சோதனைவரை செல்லவேண்டியவரானது மகத்தான சாதனை.

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

பாபா ராம்தேவ், ஜக்கி வாசுதேவ் இருவருமே ஆன்மிக அரசியல்வாதிகளா?

தங்களின் ஆன்மிக நிறுவன வளர்ச்சிக்கும் -வணிகத்திற்கும் அரசியல்வாதிகளைக் கச்சிதமாகப் பயன்படுத்துபவர்கள்.

மல்லிகா அன்பழகன், சென்னை-78

தமிழகத்தை மட்டம் தட்டியும், பாகிஸ்தானை வாழ்த்தியும் பேசிய பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத்சிங் சித்து பற்றி தமிழக அரசியல்வாதிகள் அலட்டிக்கொள்ளவில்லையே?

சித்துவும் சர்ச்சைகளும் உடன்பிறவா சகோதரர்கள். சித்துவின் மனைவி பங்கேற்ற "ராவண வதம்' நிகழ்வில்தான் கொடூர ரயில் விபத்து நடந்தது. அந்தப் பஞ்சாயத்தே இன்னும் முடியவில்லை. அதற்குள் இன்னொரு விவகாரமா? "தனக்கு பாகிஸ்தான் உணவும் கலாச்சாரமும் ஒத்துப்போகிற அளவுக்கு தமிழகம் ஒத்துப்போகவில்லை' என்று சித்து சொன்னது இங்கே எவர் காதிலும் பலமாக விழவில்லை போலும். இப்போது அமைச்சராக இருக்கும் சித்து, முன்னாள் கிரிக்கெட் வீரர். ஓபனிங்கிலேயே சிக்ஸர் அடிப்பவரான அவருக்கு சென்னையில் ரசிகர்கள் அதிகமாக இருந்தனர்.

jayalalitha

நித்திலா, தேவதானப்பட்டி

அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் வைக்கப்படவுள்ள ஜெ.வின் புதிய சிலை எப்படி?

"செத்துப்போன விவகாரத்தில்தான் உண்மை நிலை தெரியவில்லை. சிலையிலாவது உண்மை முகம் மீண்டுள்ளதே' என தொண்டர்கள் ஆறுதல் அடைவார்கள்.

sarathanayarசுந்தரமூர்த்தி, திருவெண்ணெய்நல்லூர்

கேரளாவில் மீண்டும் புயலைக் கிளப்புகிறாரே சரிதா நாயர்?

இது "மீ டூ' காலம். சரிதா புயலும் கரையேறத்தான் செய்யும். அது ஆலமரங்களை சாய்க்குமா அல்லது வலுவிழந்து போகுமா என்பது போகப்போகத் தெரியும்.

ஆன்மிக அரசியல்

வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி

ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று இறைவனை வணங்கும்போது "இந்த சிலைகளெல்லாம் உண்மையா -போலியா' என்று நினைக்க வேண்டிய அளவுக்கு நிலைமை உருவாகியிருக்கிறதே?

ponmanikavel

இறை வழிபாடு என்பது நம்பிக்கை சார்ந்தது. "கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று சொல்லும் இதே மண்ணில்தான், வீடுகளில் சாமி சிலைகள் இல்லாவிட்டாலும் பண்டிகைக் காலங்களில் சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதற்கு சந்தனம் அல்லது மஞ்சளில் பொட்டிட்டு, தாங்கள் சமைத்த பலகாரங்களைப் படையலிட்டு பகிர்ந்து உண்ணும் வழக்கம் உண்டு. ஆனால், அதே பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபடும்போது, அந்த விக்ரகத்தின் சிறப்பை நினைப்பதுடன், அதன்மூலம் கிடைக்கும் அருளையும் எதிர்பார்ப்பார்கள். அண்மைக்காலமாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு மேற்கொள்ளும் சோதனைகளுக்கு உலகப் புகழ்பெற்ற தமிழகக் கோவில்களான ஸ்ரீரங்கமும் தஞ்சாவூரும்கூட தப்பவில்லை. "திருவரங்கம் கோவிலில் பராமரிக்கப்படும் சிலைகள் எல்லாம் ஆயிரம்கால் மண்டபத்தில் பத்திரமாக இருக்கிறது' என்கிறது அறநிலையத்துறை. ஆனால், சிலை தடுப்புப் பிரிவோ காணாமல் போன சிலைகள் பற்றி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜராஜ சோழன் சிலையும் லோகமாதேவி சிலையும் குஜராத்திலிருந்து மீட்டுவரப்பட்டுள்ளது. ஆனால், சில ஆண்டுகளுக்குமுன் "இவை நம்முடையவை அல்ல' என ஆய்வாளர் ஒருவர் சான்றிதழ் தந்தார். தோண்டத் தோண்ட இப்படி நிறைய முரண்பாடுகள் தோன்றும் நிலையில், யார் சொல்வது உண்மை என்ற சந்தேகமும், கோவில் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டபோது அர்ச்சகர்கள், அறநிலையத்துறையினர், கோவில் நிர்வாகிகள், காவல்துறையினர் இத்தனை காலம் என்ன செய்தனர் என்ற கேள்வியும் எழுகின்றன. பக்தி மனதில் ஏற்படும் கேள்விகளுக்குப் பதில் இல்லாமல் செய்கிறார்கள் கூட்டுக் களவாணிகள்.