சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி

"இண்டியா கூட்டணியின் வலிமை காரணமாக பா.ஜ.க.வினர் அச்சமடைந் துள்ளனர்' என்கிறாரே சச்சின் பைலட்?

முதன்முதலில் இந்தியா கூட்டணி எனும் பெயரை அறிவித்து 28 கட்சிகள் ஒருங்கிணைந்தபோது பா.ஜ.க. அச்ச மடையத்தான் செய்தது. தற்போது ஆளுக்கொரு பக்கம் இழுக்கும் இந்தியா கூட்டணி வேடிக்கை பொருளாயிருக்கிறது. இந்தியா கூட்டணியின் வலிமையை தேர்தல் முடிவுகள் அறிவித்துவிடும். இன்னும் சில மாதங்களுக்கு சச்சின் பைலட்டும், அசோக் கெலாட்டும் யார் பெரியவர் என்கிற மோதலில் ஈடுபடாமல் இருந்தாலே ராஜஸ்தானில் இப்போது இருப்பதைவிட காங்கிரஸ் இன்னும் பலமாக இருக்கும்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

Advertisment

விஜய் மாறுவேடத்தில் சென்று மக்களிடம் கருத்து கேட்பது பற்றி?

மன்னர்கள் அரசாண்ட காலத்தில், உளவாளிகளின் சொல்லை மட்டும் நம்பாமல் மக்களின் மனநிலையை அறிய அமைச்சர் கள் சகிதமாக மாறுவேடத்தில் சென்று மக்களோடு மக்களாகத் தங்கி, தங்களது ஆட்சியைக் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என பார்ப்பதுண்டு. இப்போது விஜய், மரு வைத்துக்கொண்டா, தலைப்பாகை கட்டிக்கொண்டா எப்படி மாறுவேடத்தில் போகிறார்? எத்தனை மக்களைச் சந்திக்கிறார்… என்று தெரியவில்லை

சி. கார்த்திகேயன், சாத்தூர்

Advertisment

19 வயதிற்கு உட்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி தோற்றது பற்றி?

இந்திய அணிக்கு நிகழ்ந்த அதேவிஷயம் ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியிலும் அப்படியே நிகழ்ந்திருக்கிறது. தகுதிச்சுற்று ஆட்டங்கள், அரை இறுதிவரை தோல்வியே இன்றி இறுதிப் போட்டிக்குச் சென்ற ஜூனியர் இந்திய அணி, இறுதிப்போட்டியில் ஜூனியர் ஆஸ்திரேலிய அணியிடம் உலகக் கோப்பையைப் பறிகொடுத்திருக்கிறது. ஐண்ள்ற்ர்ழ்ற்ஹ் ழ்ங்ல்ங்ஹற்ள் ண்ற்ள்ங்ப்ச் என்று சொல்வார்கள். வரலாறு மீண்டும் தன்னைத்தானே நிகழ்த்திக்கொள்ளும் என்பார்கள். அதற்காக இத்தனை சீக்கிரமாகவா!

வாசுதேவன், பெங்களூரு

ஒரு சீட்டுக்காக கையேந்தும் கட்சியல்ல என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளாரே..?

ஜி.கே.வாசனின் முழக்கத்துக்குப் பயந்து பா.ஜ.க. கூட்டணி எத்தனை இடங்கள் கொடுக்கிறது, ஒருவேளை எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காவிட்டால் கூட்டணியில் தொடர்கிறாரா… இல்லை ரோஷத்துடன் கூட்டணியைவிட்டு வாசன் வெளியேறுகிறாரா என பார்க்கலாம்.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

"இரட்டை இலையை உபயோகப்படுத்த எனக்குத்தான் தடை, என் தொண்டர்களுக்கு இல்லை' என்ற ஓ.பி.எஸ்.ஸின் பேச்சு?

ஒரு நல்ல தலைவராக இருந்தால் சின்னத்தையோ, பெயரையோ பொருட்படுத்தாமல் தனக்குக் கீழ் பெருங்கூட்டத்தை கூட்டிக் காட்டுவார். தன் வியூகங்களின் மூலம் தன்னை வெளியேற்றிய கட்சியை, இத்தனை திறமைசாலியையா அடித்து விரட்டினோம் என தலைமையை மனக் கஷ்டப்பட வைத்திருப்பார். நீதிமன்றம் குட்டிய பிறகும் தொண்டர்களை வைத்து இரட்டை இலைக்கு மல்லுக்கட்டுகிறார் என்றால் அங்கே தன்னம்பிக்கை இல்லை என்று பொருள்.

mm

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

சீனா, உளவு பார்க்க அனுப்பியதாக மும்பை போலீசார் ஒரு புறாவை 8 மாதம் சிறை வைத்திருந்து விடுவித்திருக் கிறார்களாமே?

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். செயற்கைக் கோள்களும், செயற்கை நுண்ணறிவும் கோலோச்சும் உலகத்தில் உளவு பார்க்க எத்தனையோ நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. மும்பை போலீசார் ஒரு அப்பாவிப் புறாவை அநியாயமாய் சிறை வைத் திருந்துவிட்டு விடுவித்திருக்கிறார்கள். "இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசி' படத்தில் வருவதுபோல யாராவது ஒரு உயரதிகாரி புறா பொறியல் சாப்பிடாமல் போனாரே!

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்

குடிநீர் -புனித நீர் என்ன வித்தி யாசம்?

குடிநீர் எல்லா ஊரிலும் குடி நீர்தான். நீங்கள் புனித நீராகக் கருதுவதை மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர் புனிதமாகக் கருத மாட்டார்கள். இந்தியாவில் எந்த கங்கை நீரை புனிதமாகக் கருதி கோடிக் கணக்கான பேர் தீர்த்தமாக அருந்துகிறார்களோ, அதே புனித நீரில்தான் ஆயிரக்கணக்கான ஆலை களின் கழிவும் கலக்கிறது. அதைத் தூய்மை செய்கிறோம் எனச் சொல்லி ஆட்சிக்கு வந்த வேகத்திலேயே ஆயிரக்கணக்கான கோடிகளை மோடி அரசு ஒதுக்கியது. நதி தூய்மை யடைந்ததாகத் தெரியவில்லை. நிதி காலியாகிவிட்டது.