கே.கே.பாலசுப்ரமணியன், பெங்களூரு

""ஊடகங்களுடன் மக்கள் கைகோர்த்து நின்றால் எந்த சக்தியாலும் ஊடகங்களை பணிய வைக்க முடியாது' என்கிறாரே நக்கீரன் ஆசிரியர்?

அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக இ.பி.கோ.124-வது பிரிவின்கீழ் நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டபோது, ஒரு சிலரைத் தவிர ஒட்டுமொத்த தமிழ்நாடும் நக்கீரன் பக்கம் நின்றது. அதனால் ராஜ்பவனும் அரசாங்கமும் கூட்டணி போட்டு நிறைவேற்ற நினைத்த சதி, நீதிமன்றத்தால் முறியடிக்கப்பட்டது. இதைத்தான் நக்கீரன் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். எப்போதும் மக்களுடன் கைகோத்து நிற்கும் நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்களுடன் மக்களும் கைகோத்து நிற்கும்போது அடக்குமுறைகள் தவிடுபொடியாகும்.

எஸ்.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்

Advertisment

பரிசாகவும், விலை கொடுத்தும் புத்தகங்கள் வாங்குகிறவர்கள் எல்லாரும் படித்து முடித்துவிட்டுத்தான், தங்கள் புத்தக அலமாரியில் வைக்கிறார்களா?

படிப்பதற்குத் தேவையான புத்தகங்களை மட்டும் தேடிப் பிடித்து வாங்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அலமாரியில் இருப்பவை அவர்களின் மூளையில் நிறைந்தவை. படிக்கலாம் என்ற விருப்பத்துடன் ஏராளமாக வாங்குகிற வாசகர்கள் இருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றைப் படித்திருப்பார்கள்; சிலவற்றைப் புரட்டிப் பார்த்திருப்பார்கள். சில புத்தகங்களை மறந்தே போயிருப்பார்கள். பரிசாகக் கிடைக்கும் புத்தகங்கள் என்றால், பரிசு பெற்றவரின் மனநிலையைப் பொறுத்தே அவை படிக்கப்பட்டு மூளையில் ஏற்றப்படுமா, புத்தகத்தைப் பிரிக்காமலேயே மூலையில் வீசப்படுமா என்பது முடிவாகும்.

எம்.செல்லையா, சாத்தூர்

Advertisment

பரிதி இளம்வழுதி மறைவு பற்றி?

ஒரு காலத்தில் தி.மு.க.வின் இந்திரஜித்தாகவும் அபிமன்யூவாகவும் இருந்தவர், பின்னர் உள்கட்சி சிக்கல்களால் அ.தி.மு.க.வின் அபிமானத்தைப் பெற முயன்றார். இறந்தபோது அ.ம.மு.க.காரராக இருந்தாலும், அவருடைய அரசியல் அடையாளம் என்பது தி.மு.க.தான் என்பது மரணத்திலும் நிரூபணமானது. செயல்வீரர்களிடம் தலைமையும் தலைமையிடம் செயல்வீரர்களும் முரண்பட்டு நின்றால், அது இரு தரப்புக்கும் இழப்பு என்பதைப் பரிதியின் வாழ்வு எடுத்துக்காட்டுகிறது.

வண்ணை கணேசன், சென்னை

"பிரதமர் மோடியின் புகழுக்கு இணையாக எதிர்கட்சிகளில் ஒரு தலைவர் கூட இல்லை' என்று பா.ஜ.க. பொதுச்செயலாளர் ராம்மாதவ் கூறுவது?

அது புகழ் அல்ல.. பிரபலத்தன்மை. பிரதமராவதற்காக மோடிக்கு கொடுக்கப்பட்ட விளம்பரங்களும், பிரதமரான பிறகும் தொடர்கின்ற விளம்பரங்களும் மோடியின் பிரபலத்தன்மையைக் காப்பாற்றி வருகின்றன. அதற்கு ஈடு கொடுக்க வேண்டிய காங்கிரசில் இப்போதுதான் ராகுல் காந்தி மெல்ல பிரபலமாகிறார். சாண் ஏறினால் முழம் சறுக்கும் நிலைமையே காங்கிரசுக்கு இருக்கிறது. அதனால், மோடிக்கு இணையாக யாருமில்லை என்கிறார்கள் பா.ஜ.க.வினர். எனினும், தேர்தல் வரலாற்றில் யானை காதில் புகுந்த கட்டெறும்புகள் ஏராளம்.

எம்.கல்யாணசுந்தரம், கும்பகோணம்

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் பொன்னையன் திடீரென இரண்டு நாட்கள் மீடியாக்களிடம் தோன்றி "காமெடி' செய்தாரே?

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, "அம்மா இட்லி சாப்பிட்டார்'’என்றவரும் அவர்தான். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, தர்மயுத்த அணி பக்கம் தாவி, "அம்மா மரணம் குறித்த விசாரணை வேண்டும்' என்றவரும் அவர்தான். இப்போது முதல்வர் எடப்பாடி மீதான சி.பி.ஐ. விசாரணை குறித்து சம்மனின்றி ஆஜராகி மீண்டும் காமெடி பண்ணியிருக்கிறார்.

________________

ஆன்மிக அரசியல்

mavalianswers

சாரங்கன், கும்பகோணம்

"ராவண வதம்' நடந்த நேரத்தில் ரயிலில் அடிபட்டு 60-க்கும் மேற்பட்டோர் பலியான கொடூர நிகழ்வு ஆன்மிக அரசியலின் விளைவா?

நீண்டகால பழக்க வழக்கங்களை காலமாற்றங்களுக்குரிய அணுகுமுறைகளுடன் கடைப்பிடிக்கத் தவறினால் ஏற்படக்கூடிய கொடூரத்தின் விளைவுதான் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த தசரா கொண்டாட்ட ராவண வதம் நிகழ்வின்போது நடந்த ரயில் விபத்து. பத்து நாட்கள் தசரா விழாவின் கடைசிநாளான விஜயதசமியன்று ராமலீலா கொண்டாடப்படுவதும் அப்போது ராவணன், இந்திரஜித், கும்பகர்ணன் போன்றவர்களின் உருவ பொம்மைகளை பெரிய அளவில் செய்து அதனை எரிப்பதும் டெல்லி போன்ற வட இந்திய நகரங்களில் வழக்கமான ஒன்று. ராவணனை வில்லனாக முன்வைத்து இந்நிகழ்வு நடைபெறும் அதே நாளில், மத்தியபிரதேசம்-ராஜஸ்தான்-கோண்டுவானா வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் பழங்குடி மக்கள் ராவணனைத் தெய்வமாக வழிபடுவதும் வழக்கம். இத்தகைய முரண்பாடான-மாறுபட்ட பண்பாடுதான் இந்தியாவின் சிறப்பு.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த ராவண வதம் நிகழ்வில் திரண்டிருந்த கூட்டத்தார், உருவபொம்மைகள் எரிக்கப்படுவதை மெய்மறந்து பார்த்த நிலையிலும், செல்ஃபி எடுத்து மகிழ்ந்த நிலையிலும் ரயில்வே தண்டவாளம் இருப்பதை மறந்துவிட்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் அனுமதி கொடுத்த நிர்வாகமும் இதை கவனத்தில் கொள்ளவில்லை. ரயில் இன்ஜின் டிரைவர் ஹார்ன் அடிக்கவில்லை. இத்தனை அலட்சியங்களும் சேர்ந்து ஓர் ஆன்மிக நிகழ்வில் 60 உயிர்களைப் பலி வாங்கிவிட்டது. பஞ்சாபை காங்கிரஸ் ஆள்வதாலும் அதன் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்துவின் மனைவி அந்த விழாவில் கலந்துகொண்டதாலும் பா.ஜ.க. இதனை அரசியலாக்கியது. ரயில்வே துறையின் அலட்சியத்தையும் அதை மூடிமறைக்கும் மத்திய பா.ஜ.க. அரசையும் எதிர்த்து காங்கிரஸ் அரசியலாக்குகிறது.