எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

"நாட்டின் மிகப்பெரிய சொத்து ராணுவம்தான்' என்கிறாரே ஆளுநர் ரவி?

நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கும், உயிர்த்தியாகம் செய்யும் ராணுவம் என்றும் நாட்டின் மிகப்பெரிய சொத்துதான். ஆனால் அந்த ராணுவம் நாட்டு மக்களின் பாதுகாப்பின் பொருட்டும், எல்லைப் பாதுகாப்பின் பொருட்டுமே நியமிக்கப்படுகிறது. ராணுவத்துக்கும் பொதுமக்களிலிருந்தே ஆட்கள் தேர்வுசெய்யப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள். எனவே, ராணுவத்தைவிட மிகப்பெரிய சொத்து அந்நாட்டு மக்கள்தான். அவர்களைக் காக்காத, கண்ணீர்விட வைக்கும் எந்த அரசாக இருந்தாலும் சீக்கிரமோ, தாமதமாகவோ அதன் விளைவுகளைச் சந்திக்கும். அதுதான் வரலாறு.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

Advertisment

"பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு தேவையில்லை' என ஸ்மிருதி இரானி கூறியிருப்பது பற்றி?

சமீபத்தில் பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் விடுப்பளிக்க மத்திய -மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி ஷைலேந்திரமணி திரி பாதி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். "முத லில் அரசு மாதவிடாய் தொடர்பான கொள்கையை வகுக்கட்டும். பிறகு இந்த வழக்கை பரிசீலிக்க லாம்'’என தலைமை நீதிபதி சந்திரசூட் நழுவிக் கொண்டார். இந்த நிலையில்தான் முன்பும் பல முறை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ள கோரிக்கையான, பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய்க்கால விடுப்பு அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை மீண்டும் எழுந்தது. அதை நிராகரித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, "மாதவிடாய் என்பது ஒரு குறைபாடல்ல. எனவே ஊதியத்துடன் கூடிய விடுமுறை தேவை யற்றதென' நிராகரித்தார். பெண்களை மாதவிடாய்க் காலத்தில் வீட்டில் அமர வைப்பதை, பா.ஜ.க.வில் உள்ள பழமையார் வலர்கள் வரவேற்கவே செய்வார்கள். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களில் உள்ள முதலாளிகள், விடுப்பும் கொடுத்து, ஊதியமும் கொடுப்பது என்றால் முகஞ் சுளிப்பார்கள். அவர்களைப் பகைத்துக் கொள்வானேன் என்ற தயக்கத்தில்தான் ஒரேயடியாக மறுத்திருக்கிறார். இத்தகைய நேரத்தில் எல்லாப் பெண்களுக்கும் விடுப்பு தேவைப்படாதுதான். தேவைப்படுபவர்கள், பயமின்றி விடுப்பெடுப்பதற்கான வழிவகை களையாவது அரசு மேற்கொள்ளவேண்டும்.

ரா.ராஜ்மோகன், முட்டியூர்

Advertisment

தி.மு.க.வின் ஊழல் பட்டியல்களை வெளியிட்டு வந்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகிறாரே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்?

இப்போது வந்த அண்ணாமலைக்கு தி.மு.க.வின் ஊழல்கள் தெரியுமென்றால், அதற்கும் முன்பே அரசியலுக்கு வந்த சண்முகத்துக்கு தெரியாத ஊழல்களா? சி.வி.சண்முகமும் எதிர்க்கட்சிக்காரர் தானே. அவரே பட்டியலைத் தயாரித்து ஆளுநரிடம் எடுத்துச் செல்லவேண்டி யதுதானே. அப்படியே அண்ணாமலை படித்த 10,000 புத்தகங்களின் பட்டியல், ரஃபேல் வாட்சின் ரகசியங்கள், நண்பர்களின் கருணையிலே குடும்பச் செலவுகளை நடத்தும் வியூகங்களையும் அம்பலப்படுத்தி பெயர் வாங்க வேண்டியதுதானே! எது அவரை சுணங்கச்செய்கிறது?

சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி

15 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை எப்படி பார்க்கிறீர்கள்?

பா.ஜ.க.காரர்கள் வரலாற்றுச் சாதனைகளைச் செய்வதில் கெட்டிக்காரர்கள். டிமானிடைசேஷன் அறிவித்து கோடிக்கணக்கான பேரை வீதிக்குக் கொண்டு வருவதாகட்டும், கொரோனாவில் கோடிக்கணக்கான மக்கள் சொந்த ஊர் திரும்ப வழிசெய்யாமலேயே லாக் டவுன் அறிவிப்பதாகட்டும், 2020 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 10,552 பேரை உபாவில் கைது செய்வதாகட்டும், எப்போதுமே சாதனை மன்னர்கள்தான். இப்போது நாடாளுமன்றத்தில் ராஜ்ய சபா, லோக் சபா இரண்டிலுமாக 141 பேரை இடைநீக்கம் செய்திருக் கிறார்கள். அவர்கள் சஸ்பெண்ட் செய்தது பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமல்ல,… இந்திய ஜனநாயகத்தை யும்தான்.

பி.ஸ்ருதி, மதுரை

அதீத மழை தமிழகத்தை புரட்டியெடுக்கிறதே?

தமிழகத்தை மட்டுமல்ல… உலகத்தையே மிரட்டிக்கொண்டிருக்கிறது. இப்போது நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்தமிழகம். கடந்த வாரம் சென்னை. அதற்கும் முன்பு அமெரிக்கா. சில மாதங்கள் முன் குஜராத்.… அதீத மழைப்பொழிவு, வெள்ளத்தால் பாதிக்கப்படாத நாடுகளே குறைவு. வரும் காலத்தில் மிதமிஞ்சிய பருவநிலைகளின் தாக்குதல்கள்தான் மாநில முதல்வர்களும், நாட்டின் அதிபர்களும், பிரதமர்களும், மக்களும் சந்திக்கவேண்டிய மிக முக்கிய பிரச்சனையாக இருக்கும் போலிருக்கிறது.

mm

ஏ.ஞானகுரு, புளியங்குடி

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக ஏன் சுற்றுச்சூழல்வாதிகள் அலறுகிறார்கள்?

முதலில் நிலத்தில் புதைந்து மழைநீரை மண்ணுக்குள் அனுமதிக்க மறுத்தது. இப்போது கடலிலும் கலந்து கடல் உயிரினங்கள் வழியாக மனித உணவிலும் கலந்துவிட்டது. இந்தியா ஆண்டுக்கு 6 லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பைகளைத் தவறாகக் கையாண்டு நீர்நிலை, கடலில் கலக்கக் காரணமாக இருக்கிறது. பிளாஸ்டிக்கை முறையாகக் கையாளாத ஆசிய நாடுகளில் 12-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.