ப.மணி, ஒத்தமான்துறை, சின்னதாராபுரம்

"மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல்-டீசல் விலையை பாதியாகக் குறைப்பேன்' என்கிறாரே மோடி?

Advertisment

"இன்னுமா இந்த உலகம் நம்மளை நம்புது...' என்ற டயலாக்தான் காதில் ஒலிக்கிறது.

எம்.கல்யாணசுந்தரம், கும்பகோணம்

தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அ.தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளர்போல செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருப்பது சரியா?

தவறுதான்... கிரிஜா வைத்தியநாதன் கொ.ப.செ.வாக செயல்படவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தலைமைச் செயலகத்தில் ஒரு சூப்பர் முதல்வரும், ராஜ்பவனில் ஒரு சூப்பர் கவர்னரும் கோலோச்சுகிறார்கள்.

பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118

Advertisment

மழை வருவது மயிலுக்குத் தெரியும்; ஆனால் நம் ஊர் அதிகாரிகளுக்குத் தெரியாதா?

மயிலுக்கே தெரியும்போது மனிதர்களுக்குத் தெரியாதா? சக மனிதர்களின் நிலையை நினைத்துப் பார்க்காமல் அதிகாரி என்ற பதவிக்குரியவராக மாறிவிடும்போது கடமையைவிட அலட்சியம் மேலோங்கிவிடுகிறது. அதனால் மழை நேரத்தில் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழை இல்லாத நேரத்தில் குடிநீருக்கு வழியின்றி வீடுகள் தவிக்கின்றன. வரும் முன் காக்கும் திட்டங்களில் கோட்டை விடுகிறார்கள் -கோட்டையில் இருப்பவர்கள் முதல் ஊராட்சி நிர்வாகம் வரை.

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை, ஆறுமுகச்சாமி ஆணையம் கேட்கிறதே?

Advertisment

அண்ணாவுக்கான சிகிச்சை விவரங்களையும் கேட்கலாமே.. மரணம் அடைந்ததால் முன்னாள் முதல்வர்களானவர்களின் சிசிச்சை விவரங்களைவிட, மரண சர்ச்சையால் முன்னாள் ஆக்கப்பட்ட முதல்வரின் சிகிச்சை விவரங்களைத்தான் மக்களும் கட்சித் தொண்டர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

mavalianswers

நித்திலா, தேவதானப்பட்டி

வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் முன்னெடுத்திருக்கும் "தமிழியக்கம்'’ அமைப்பின் விழாவில் கட்சி வேறுபாடின்றி பல தலைவர்களும் பங்கேற்றிருக்கிறார்களே?

முச்சங்கம் தொடங்கி காலந்தோறும் தமிழைக் காக்கும் அமைப்புகள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் வி.ஐ.டி. வேந்தர் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த முயற்சியும் முக்கியமானது. இன்றைய அறிவியல்-தொழில்நுட்ப உலகில் செம்மொழித் தமிழின் பழைய மரபுகளும் புதிய போக்குகளும் சரியான முறையில் அலசப்பட்டு, ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முழுநாள் விழாவில் பல கட்சித்தலைவர்கள் பங்கேற்ற நிலையில், யாரை எப்போது அழைப்பது என்கிற ஜி.விசுவநாதனின் நிகழ்ச்சி நிரலே தமிழின் தற்போதைய சூழலையும் அதன் அடுத்தகட்ட நகர்வையும் உணர்த்துவதாக உள்ளது.

பாகாநத்தம் ப.சத்ரியன்

எலும்பில்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் திரும்பும் என்பதற்கு உதாரணம்?

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என 2006ல் ஆர்.எஸ்.எஸ். மூலம் வழக்குப் போட்டு வாதாடிவிட்டு, 2018-ல் அந்த உரிமையை உச்சநீதிமன்றம் வழங்கியதை எதிர்த்து முழங்கியபடி பா.ஜ.க.வும் அதன் பரிவாரங்களும் நடத்தும் போராட்டங்கள்தான்.

ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

அ.தி.மு.க. உறுப்பினராக சசிகலா இல்லை என்கிறார்களே முதல்வரும் துணை முதல்வரும்?

ஒருகாலத்தில் இதைத்தான் ஜெயலலிதாவும் சொன்னார். அப்புறம் என்ன நடந்தது என்பது அ.தி.மு.க. உறுப்பினர்களாக இருக்கின்ற தொண்டர்களுக்குத் தெரியும்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"ரெட் அலர்ட்டைப் பார்த்து பயப்படுகிறார்களோ இல்லையோ, காவி அலர்ட்டைப் பார்த்து பயப்படுகிறார்கள்' என்கிறாரே தமிழிசை?

"அஞ்சுவது அஞ்சாமை பேதைமை' என்று வள்ளுவர் சொல்லியிருப்பதன் அர்த்தத்தை தனது தந்தை இலக்கியச் செல்வரிடம் தமிழிசை கேட்டறியலாம்.

____________

ஆன்மிக அரசியல்

மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை

நாகூர் தர்காவுக்கும் ஏர்வாடி தர்காவுக்கும் இந்து அரசர்கள் மானியங்கள் வழங்கியிருக்கிறார்கள். மன்னன் திப்புசுல்தான், ஸ்ரீரங்கப்பட்டணம் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு மனப்பூர்வமாக உதவிகள் செய்திருக்கிறார். இப்படிப்பட்ட நாட்டில் இன்று வேறு வர்ணம் பூச எத்தனிக்கிறார்களே சிலர்?

கோயில்களை இடித்த வேற்று மதத்து அரசர்கள் உண்டு. சமணர்களை கழுவில் ஏற்றிய சைவ மன்னர்கள் உண்டு. வைணவத்தை வளரவிடக்கூடாது என கங்கணம் கட்டிய ராஜாக்களும் உண்டு. இவையெல்லாம் அந்தந்த காலத்து ஆன்மிக அரசியல். ஆனால், இவற்றையெல்லாம் மீறி, மக்களின் வழிபாட்டு முறைகளை மதித்தவர்களே செல்வாக்குமிக்க அரசர்களாக விளங்கியிருக்கிறார்கள். கோயில்களுக்கும் தர்காக்களுக்கும் மாற்று மதங்களைச் சேர்ந்த மன்னர்கள் -சிற்றரசர்கள் உதவியிருப்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில்கூட, வழிபாட்டு முறைகளில் கை வைப்பதற்கு அரசாங்கம் அத்தனை எளிதாக முன்வரவில்லை. அதன் தொடர்ச்சியாகத்தான் சுதந்திர -ஜனநாயக நாட்டில் அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் "மதச்சார்பின்மை' என்ற வார்த்தை இணைக்கப்பட்டது. அது வெறும் வார்த்தைகளாலான இணைப்பு அல்ல. மதத்தின் பெயரால் பிளவுபடாமல் மனிதர்களும் அவர்தம் மனங்களும் இணைந்தே இருக்கவேண்டும் என்பதன் அடையாளம். ஆனால், மத அடிப்படைவாதிகளும் மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களும் நமது அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரையை விரும்புவதில்லை. "ரகுபதி ராகவ ராஜாராம்' எனத் தொடங்கி "ஈஸ்வர அல்லா தேரே நாம்' என தொடர்ந்த மகாத்மா காந்திக்கு முடிவுரை எழுதிவிட்டது மதவெறி.