எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

தெலுங்கானாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் இடஒதுக்கீடு ரத்துசெய்யப்பட்டு, அது பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் என்ற ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டியின் பேச்சு..?

இந்தியா முழுவதுமே முஸ்லிம்களின் சதவிகிதத்துக்கு ஏற்ப காவல்துறை, ராணுவம், பொதுத்துறைகளில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லவே இல்லை. எனவே வேலையிலும், படிப்பிலும் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய வேண்டியது ஒன்றிய அரசின் வேலை. அவர்களோ, இருக்கிற இடஒதுக்கீட்டை ரத்துசெய்வேன் என்பதும், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அவர்களுக்கான கல்வி உதவித்தொகையைக்கூட கொடுக்கமறுப்பதும் ஜனநாயக விரோதம். பா.ஜ.க.வின் வருகைக்குப் பின், தேர்தலில்கூட அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதியில் உரிய பிரதிநிதித்துவத்துடன் இடம் ஒதுக்காத கட்சியில் வேறெப்படி பேசுவார் என எதிர்பார்க்கிறீர்கள்?

ரா. ராஜ்மோகண், முட்டியூர்,

Advertisment

"நன்றி கெட்டவர்கள் சினிமாவில் குறைவுதான்; அரசியலில் அதிகம்' என்கிறாரே... முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர்?

அவர் யாரை மனதில் வைத்துப் பேசுகிறார் என்று தெரியவில்லை. அண்ணன் எப்ப சாவான்… திண்ணை எப்ப காலியாகும் என்ற மனோபாவம் பொதுவாகவே மற்றவரை முந்தி வளரத் துடிக் கும் மனிதர்களிடம் சகஜமானதுதான். அது அரசியலில் கொஞ்சம் அதிகம் என்பதுதான் மாவலியின் கருத்து.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

Advertisment

"சத்தீஸ்கர் மாநிலத்திற்கு ஐந்தாண்டுகளாக கிரகணம் பிடித்திருந்தது' என்று கூறுகிறாரே பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா?

இந்தியாவிலேயே வேலைவாய்ப்பின்மை குறைவாகத் திகழும் மாநிலம் சத்தீஸ்கர்தான். இங்கே வேலைவாய்ப்பின்மை விகிதம் 0.8 சதவிகிதம்தான். அந்த குறைவான சதவிகித வேலைவாய்ப்பில்லாதவர்களுக்கும் வேலை கிடைக்கும் வரை ரூ.2000 உதவித் தொகை வழங்குவோம் என்கிறார் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல். இதுவரை கிரகணம் தீண்டாத மாநிலங்களில் ஒன்றாக சத்தீஸ்கரும் இருந்தது என அவர்கள் சொன்னால் நட்டா என்ன செய்வாராம்!

வாசுதேவன், பெங்களூரு

போன முறை உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கை அணியிடம் தோல்வியைத் தழுவியுள்ளதே?

இலங்கையிடம் மட்டுமா… கிட்டத்தட்ட மோதிய அணிகள் அனைத்திடமும் தோல்வியைத் தழுவி சூப்பர் 4 சுற்றுக்கு தேர்ச்சிபெறுவது கஷ்டம் என்ற நிலையில் உள்ளது. வண்டி பயணிக்கும்போது சக்கரத்தின் ஆரக்கால்கள் ஒரு நொடி மேலே போகும். மறு நொடியே கீழே வந்துவிடும். அதுபோல நேற்றைக்கு வெற்றிபெற்ற அணி, இன்றைக்கு தோல்வியின் பிடியில் உள்ளது. நாளைக்குச் சரியாகிவிடும்... கவலை வேண்டாம்!

சி. கார்த்திகேயன், சாத்தூர்.

வரலாற்று நிகழ்வுகளை பி.ஜே.பி.யினர் பொது இடங்களில் தவறாகக் கூறுவதும் பின்னர் சமாளிப்பதும் தினமும் நடக் கிறதே?

எப்போதும் வெற்றிபெற்றவர் களின் தரப்பிலிருந்து எழுதப்படுவதுதான் வரலாறு. துரியோ தனன் வெற்றி பெற்றிருந்தால், நம் கையிலிருக்கும் மகாபாரதம் வேறொன்றாக இருந்திருக்கும் என்றொரு கருத்துண்டு. ஆனால் பா.ஜ.க.வினர் எல்லைமீறிப் போகிறார்கள். இதில் மற்றொரு விஷயமும் உண்டு. பொது இடங்களில் பேசும் பா.ஜ.க.வினர் பலருக்கு வரலாறும் தெரியாது. புராணமும் தெரியாது. பிறகென்ன, குறைகுடங்கள் கூத்தாடுகின்றன, தளும்பி வழிகின்றன.

vv

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

"கேரள குண்டுவெடிப்பு சம்பவத் தில் முதல்வர் மந்தமாக செயல் படுவதாக...' ஜே.பி. நட்டா கூறி யிருப்பது பற்றி?

ஒப்பிட்டுப் பாருங்கள், மணிப்பூர் விவகாரத்தில் மோடியின் சுறுசுறுப்பையும் கேரள குண்டுவெடிப்பில் பினராயி விஜய னின் சுறுசுறுப்பையும். ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. இருநூறுக்கு நெருக்கமான உயிர்கள் பலியாகிவிட்டன. இன்னும் மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. கலவரங்கள் கட்டுக்குள் வரவில்லை. பிரதமரை மணிப்பூர் விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்கே, எதிர்க்கட்சிகள் அமளி, புறக்கணிப்பு என போராடவேண்டி வந்தது. மணிப்பூரில் நடைபெற்ற இனக்கலவரம் குறித்து, உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையைப் பதிவிட்ட ஊடகங்கள், செய்தியாளர்கள் மீது பீரேன்சிங் எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்தார். நம் முதுகில் அழுக்கு மலையே இருக்கும்போது, எதிரியின் விரல்களில் இருக்கும் தூசியைப் பற்றிப் பேச மிகுந்த மனதைரியம் வேண்டும். அது நட்டா உள்ளிட்ட பா.ஜ.க.வினருக்கு ரொம்பவே இருக்கிறது.