சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி
"ஒரு படத்திலாவது கலைஞர் எழுதிய வசனத்தை பேசி நடித்திருக்கலாமே என்ற குற்ற உணர்வு எனக்குள் எப் போதும் இருந்துகொண்டே இருக்கிறது' என்கிறாரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?
இதற்கு ரஜினியின் வார்த் தைகளிலே பதிலளிப்பதென்றால், "கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்கக்கூடாதது கிடைக்காது'.”கலைஞருக்கும் ரஜினிக்கும் இருந்த நட்புக்கு, கலைஞரிடம் ஒரேயொரு வார்த்தை கேட்டிருந்தால் ரஜினி படத்துக்கு கதை, வசனம் எழுதியிருக்கப்போகிறார். கெட்ட பின்பு வரும் ஞானம் என்பதைப் போல், கலைஞரின் மறைவுக்குப் பின்பு இந்த உணர்வு வந்து என்ன செய்யமுடியும்?
அ.யாழினிபர்வதம், சென்னை-78.
பா.ஜ.க. ஆளும் 14 மாநிலங்களில் ஒரு பெண் முதல்வர்கூட கிடையாது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் லாவண்யா பல்லால் ஜெயின் கூறுகிறாரே?
அதுதான் 2029-க்குப் பின்பு பெண்களுக்கு பாராளுமன்றத்தில் 33 சதவிகித இட ஒதுக்கீடு என்று மசோதா நிறைவேற்றிவிட்டார்களே போதாதா! அவர்கள் என்றும் மாறாத சனாதனத் தின் ஆதரவாளர்கள். சனாதனம், பெண்கள் பொதுவெளிக்கு பெருமளவில் வருவதை விரும்பாத தர்மம். அவர்களைக் கொண்டுபோய் முதல்வராக அமர்த்தமுடியுமா! தவிர காங்கிரஸாகட்டும், பா.ஜ.க.வாகட்டும்... ஒரு பெண் தன் திறமையால் முதல்வர் போன்ற உயர்ந்த இடங்களுக்கு வந்தால் தவிர்க்க இயலாமல் ஏற்றுக்கொள்வார்களே தவிர, விருப்பத்துடன் முதல்வர் பதவிக்கு பெண்ணை நியமிக்கமாட்டார்கள். அதனை பதவிப் போட்டியி லிருக்கும் அவர்களது கட்சியின் எம்.எல்.ஏ.க்களும் அத்தனை எளிதில் அனுமதிக்கமாட்டார்கள்.
மணலி மாறன், சென்னை
அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி முறிவு தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்துமா...?
எதிரி இரண்டுபட்டால் ஆளும் கட்சிக்குக் கொண்டாட்டம்தான். வாக்குகள் இரண்டாகப் பிரிவதால் ஆளும் கட்சிக்கான வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்தான். ஆனாலும் எப்போதும் ஆளும்கட்சி விழிப்பாக இருப்பதோடு, மக்களின் மனநிலையைக் கூர்ந்து கவனித்து வெற்றிக்குத் தேவையானதைச் செய்துகொண்டே இருக்கவேண் டும். மக்கள் மனது எப்போதும் மாறக்கூடியது.
மஞ்சுவாசுதேவன், பெங்களூரு
உலக காபி தினத்தன்று (01.10.2023) எத்தனை கோப்பை காபி அருந்தினீர்கள்?
காலண்டர் பார்த்தா காபி அருந்த முடியும். வழக்கம்போல்தான். ஆனால் நீங்கள் காபி பிரியர் எனில் சில நல்ல செய்திகளை உங்களுக்குக் கூறமுடியும். மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பை காபி சரிசெய்யும். அதனால் மதுப்பிரியர்கள் மதுவைக் குறைத்துவிட்டு காபியை நிறைய அருந்தலாம். பார்க்கின்சன் நோய் ஏற்படும் ஆபத்தை காபி குறைக்கிறது. காபியில் ஆன்டி ஆக்ஸிடன்ஸ் அதிகம். அதனால் லேசில் நோய் ஏற்படாததோடு நீண்டநாள் இளமையைத் தக்கவைக்கும். தலைவலியைக் குறைக்கும். உடல் எடை அதிகரிப்பைத் தடுக்கும். புற்றுநோய், ஸ்ட்ரோக், இதய நோய்களுக்கு எதிராக கணிசமான பாதுகாப்பை அளிக்கும். டைப் 2 டயாபடீஸ் ஏற்படுவதிலிருந்தும் ஓரளவு காக்கும். அதற்காக கோப்பை கோப்பையாக காபி அருந்தக் கிளம்பி விடாதீர்கள். நம் ஊரில் ஒரு பழமொழி இருக்கிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு
நாடாளுமன்றத்தில் டேனிஷ் அலிக்கு எதிராக ஆபாசமாகப் பேசி பலருடைய வெறுப்புக்கும் ஆளான ரமேஷ் பாதுரிக்கு, பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவி கொடுத்துள்ளதே?
பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான டேனிஷ் அலியை மதரீதியாகவும் தரக்குறைவாகவும் ரமேஷ் பாதுரி பேசிய விவகாரத்தில், டேனிஷ் அலிக்கு ஆதரவாக நிறைய குரல்கள் எழுந்த காரணத்தினால் பேருக்கு ஷோகாஸ் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ரமேஷ் பாதுரி அவதூறாகப் பேசுவது இது முதல்முறையல்ல. பல்வேறு முறை பேசியவர்தான். மாயாவதி, சோனியாவுக்கு எதிராகவும் தரம்தாழ்ந்து பேசியவர்தான். தரம்தாழ்ந்து பேசுபவர்களை, வெளிப்படையாகக் கண் டிப்பதுபோல் கட்சிகள் காட்டிக்கொண்டாலும், மறைமுகமாக இத்தகைய பேச்சுக்களை ஊக்குவிக்கும். அதேபோல்தான் பா.ஜ.க.வில் அவருக்கு ராஜஸ்தானின் டோங் பகுதியின் பிரச்சாரக் குழு தலைவர் பதவி வழங்கப்பட்டு, வெறுப்புப் பேச்சுக்கு வெகுமதி அளிக்கப் பட்டிருக்கிறது.
அன்னூரார், பொன்விழி
இப்போது உள்ள நடிகைகளில் அம்மன் வேடத்துக்குப் பொருத்தமானவர் யார்?
அம்மன் வேடத்துக்கு என சில செட் பிராப்பர்ட்டிகள் இருக்கின்றன. கிரீடம், சூலம், சிவப்புப் புடைவை. இவற்றை அணிவித்து, மேக்கப்மேனும் ஒளிப்பதிவாளரும் கொஞ்சம் சிறப்பு முயற்சி எடுத்துக்கொண்டால் யார் வேண்டுமானாலும் அம்மன் ஆகிவிடலாம். அதற்குமேல் தன் கேரக்டரில் அந்த நடிகை சிரத்தை காட்டினால் அம்மன் வேடத்துக்குப் பொருத்த மானவராகத் தோன்றலாம்.