ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்
குட்கா வழக்கில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
அது என்ன நிர்மலாதேவி விவகாரமா? வெளியே தெரிவதற்கு முன் முடித்துவிடவேண்டும் என அவசரமாக வழக்குப்பதிவு செய்து, அதிரடியாக கைது செய்ய!
மல்லிகா அன்பழகன், சென்னை
ஐ.நா.சபை பொதுக்குழுக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுக்கு உலகத் தலைவர்கள் சிரித்தார்களாமே, ஏன்?
2 வருடத்திற்கும் குறைவான காலத்திலேயே அமெரிக்காவின் எந்த அதிபரும் செய்யாததை சாதித்திருக்கிறேன் என்று ஐ.நா. பொதுச்சபையில் டிரம்ப் பேசியபோது மற்ற நாட்டுத்தலைவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்து அடங்கியது. தன் பேச்சை ரசித்துச் சிரித்தார்கள் என்கிறார் டிரம்ப். சிரிப்பாய் சிரித்த கதைதான் என்கிறார்கள் டிரம்ப்பை விமர்சிப்பவர்கள்.
ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி
"உறவினர் தயவால் தப்பிக்கிறேன் என்றால், வழக்கே போடாமல் செய்திருக்க முடியாதா?' எனக் கேட்கிறாரே எஸ்.வீ.சேகர்?
"நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்... நீ அழுகிற மாதிரி அழு' என்பதுபோலத்தான் இதுவும். எஸ்.வீ.சேகரின் நாடகங்களை மிஞ்சிய காமெடியாகிவிட்டன அவர் மீதான வழக்கு.
நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியதற்கு, உயர்நீதிமன்றம் காலங்கடந்து கண்டனம் தெரிவித்திருப்பதால் யாருக்கு என்ன இலாபம்?
புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியது, லாப நோக்கத்திற்கானதல்ல. அது காழ்ப்புணர்வு; அரசுக்கு வீண் செலவு. தீர்ப்பும் காலங்கடந்துவிட்டது. அது எழுப்பிய கேள்விகளால் கண்டிக்கப்பட வேண்டியவரும் காலம் கடந்துவிட்டார்.
மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை திராவிடக் கட்சிகள் எப்படிக் கொண்டாட வேண்டும்?
கொண்டாட வேண்டியதில்லை. காந்தியை எப்படி நினைவு கூர்ந்திடவேண்டும் என அறிந்திருந்தால் போதும். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் உலகளாவிய அடையாளம் காந்தி. அவரை ஏற்கலாம், தள்ளலாம்; தவிர்க்க முடியாது.
கதர் ஆடை உடுத்துவதும், ராட்டை சுழற்றுவதும், பஜனை பாடுவதும் காந்தி ஜெயந்திக்கான சடங்குகள். காந்தியப் பாதை என்பது இப்போது நெடுஞ்சாலையின் நடுவே இருக்கும் டிவைடர் போல சுருங்கிவிட்டது. எனினும், நாம் பயணிப்பது அதன் வலப்பக்கமா அல்லது இடப்பக்கமா என்பது முக்கியம். இடது பக்கம் பயணிப்பதே சரி என்கிறது சாலை விதி. வலது பக்க பயணம்தான், காந்தியின் உயிருக்கே ஆபத்தாக முடிந்தது. அரசின் அதிகார மிரட்டலுக்குப் பணியாமல் சட்ட மறுப்பு, ஒத்துழையாமை உள்ளிட்ட காந்தியின் போராட்டங்களை இன்றைய சூழலுக்கேற்ப முற்போக்கு அணுகுமுறையுடன் முனைப்பாகக் கையாண்டு, பன்முகத்தன்மையைக் காப்பதே திராவிடக் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய காந்தியப் பார்வை.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
கழிவுநீர் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்த புதுச்சேரி முதல்வருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து இருக்கிறாரே?
மக்களாட்சியைக் குப்பையாக்கும் கவர்னரின் அதிகாரத்தைத் துடைத்தெறிந்து சுத்தம் செய்வதற்காக களமிறங்கியுள்ள புதுச்சேரி முதல்வரையும் பிரதமர் பாராட்டுவாரா?
____________
ஆன்மிக அரசியல்
நித்திலா, தேவதானப்பட்டி
ஆன்மிக அரசியலால் சர்வாதிகாரம் தலைதூக்க வழியுண்டா?
பன்முகத்தன்மை இல்லாத எந்த அரசியலிலும் சர்வாதிகாரத்தின் கோர நாக்கு, ஜனநாயகத்தை மேய்ந்து விடும். அது மதரீதியாக கையாளப்படும்போது சர்வாதிகாரத்தின் அகோரப் பசி எல்லாவற்றையும் வேட்டையாடும். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முன்வைக்கும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளை மீட்பதில் ஈராக் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து போராடி வருகின்றன. மதத்தின் பெயரைப் பயன்படுத்தி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகள் பெண்களை எப்படி பாதித்தன என்பதற்கு நேரடி சாட்சி, நாடியா முராத். அங்குள்ள யாஷிதி சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் வசித்த பகுதியை ஐ.எஸ். அமைப்பின் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி கைப்பற்றியபோது, இவருடன் பிறந்தவர்கள் கொல்லப்பட்டனர். இவரைப் போன்ற இளம்பெண்கள் அந்தத் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியதால், பாலின அடிமைகளாக நடத்தப்பட்டனர். மிகக் கொடூரமான பாலின சித்ரவதைகளை அனுபவித்த நாடியா முராத், ஒருகட்டத்தில் ஐ.எஸ். அமைப்பின் பிடியிலிருந்து தப்பி வந்தார். தனக்கு நேர்ந்த கொடூரத்தை உலகத்திற்கு அறிவித்தார். தன்னைப்போல பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுத்தார். யாஷிதி பெண்களின் நலனுக்காகப் பாடுபட்டார். தீவிரவாதிகளால் பாலியல் அடிமைகளாக்கப்படும் பெண்களுக்கு நேரும் அநீதிகளை ஐ.நா.வரை கொண்டுசென்றார். அந்த நாடியா முராத்தான், இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ள இருவரில் ஒருவர். பாகிஸ்தானின் மதத்தீவிரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு ஆளாகி உயிர் மீண்ட மலாலாவுக்குப் பிறகு, மிகக்குறைந்த வயதில் நோபல் பரிசு வென்றவர் என்ற பெருமைக்குரியவர் நாடியா. ஆன்மிகப் போர்வையில் மத அடிப்படைவாதம் நுழைந்துவிடக்கூடாது என்பதை உணர்த்துகிறது நாடியாவின் வாழ்க்கை.