மகிழை, சிவகார்த்தி, புறத்தாக்குடி

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறதே எடப்பாடி பழனிசாமி அரசு?

Advertisment

கூட்டம் சேர்ப்பது மட்டும்தான் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் வெற்றி என்றால், மாவட்ட அளவில் நடந்த விழாக்களில் ஃபெயில் ஆன எடப்பாடி அரசு, நிறைவு விழாவில் 90 மார்க் வாங்கியுள்ளது அதிகாரம் எனும் "பிட்' அடித்து!

அ.யாழினி பர்வதம், சென்னை-78

கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் என்ன வித்தியாசம்?

"ரகசிய சந்திப்பு' என டி.டி.வி.தினகரன் சொன்னபோது, "அட... இப்படியும் இருக்குமா?' என விழிகளை விரிய வைப்பது, கவர்ச்சி. தர்மயுத்த நாயகன் ஓ.பி.எஸ். அப்படிப்பட்ட ஆள் அல்ல என நினைத்திருந்த வேளையில்... "ஆமா.. சந்திச்சோம். அதுவேற' என அவரே சொன்னபோது "அடச்சீ... இதுதான் அரசியலா' என வெறுப்பு ஏற்படுவது, ஆபாசம்.

பி.சாந்தா, மதுரை-14

தி.மு.க. தலைவரானபின் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகள் எப்படி?

தலைவராகப் பொறுப்பேற்ற மேடையிலேயே மத்திய பா.ஜ.க. அரசின் மதவெறியை கடுமையாக விமர்சித்தார். முதல் போராட்டக் களத்தில் முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரையிலான ஊழல்களை அம்பலப்படுத்தினார். கட்சியின் சார்பில் ஆதாரங்களுடன் வழக்குப் பதிவு செய்தார். கலைஞர் இல்லாத முப்பெரும் விழாவில் தொலைநோக்குப் பார்வையை வெளியிட்டு உடன்பிறப்புகளுக்கு நம்பிக்கை தந்தார். எதிர்க்கட்சியின் கடமையை உணர்ந்து ஆட்சிக்கு எதிராகப் போராட்டங்களும், மற்ற இயக்கங்களுடன் அரவணைப்பும் மேற்கொள்கிறார். அத்தனை அம்புகளும் சரியாகவே குறி வைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் கட்சிக்காரர்களின் பிரச்சினைகள் -உதயநிதிக்கு அளிக்கப்படும் திடீர் முக்கியத்துவம் போன்ற சர்ச்சைகளைக் கடந்து, தேர்தலில் வெற்றிக்கனி விழும்வரை சளைக்காமல் குறி வைப்பதுதான் அரசியலில் சரியான நடவடிக்கையாக அமையும்.

Advertisment

mavalianswers

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)

மேடையில் சினிமா பாடல்கள் பாடுகிறாரே அமைச்சர் ஜெயக்குமார்?

ஆட்சியினால் மக்கள்படும் பாட்டுக்கு, மேடையில் அமைச்சர் பாடிய பாடல் மோசமில்லை.

நித்திலா, தேவதானப்பட்டி

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியிடம் வாக்குவாதம் செய்திருக்கிறாரே அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன். இது மேடை அநாகரிகமா, ஜனநாயக உரிமையா?

Advertisment

அதிகநேரம் பேசினார் அ.தி.மு.க.வின் அன்பழகன். அதுவும் கிரண்பேடியின் நடவடிக்கைகளை விமர்சித்துப் பேசினார். அதனால் மைக்கை ஆஃப் செய்யச் சொன்னார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. இதனையடுத்து மேடையிலேயே அவருடன் வாக்குவாதம் செய்தார் அன்பழகன். யூனியன் பிரதேசத்தின் துணை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்கள் இருந்தும் மக்கள் பிரதிநிதியான புதுச்சேரி அ.தி.மு.க எம்.எல்.ஏ., தனது ஜனநாயக உரிமையை வெளிப்படுத்தியிருக்கிறார். மாநில அரசை மீறி தமிழ்நாட்டில் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார். "துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்' என பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறார். இங்குள்ள அ.தி.மு.க. அரசோ பம்முகிறது. கிரண்பேடியுடன் மேடையில் நடந்த வாக்குவாதம் குறித்த இருவேறு பார்வைகள் இருக்கலாம். தமிழக அ.தி.மு.க. ஆட்சியாளர்களைவிட, புதுவை அ.தி.மு.க எம்.எல்.ஏ. சுயமரியாதைக்காரராக இருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஜி.மகாலிங்கம், காவல்காரன்பாளையம்

சட்டப்பிரிவு 497 நீக்கம் நமது கலாச்சாரத்துக்கு எதிரானதா?

ஒரு சட்டப்பிரிவின் நீக்கம் அல்லது சேர்ப்பினால் பாதிப்பு ஏற்படும் என்றால், அதுவா பாரம்பரியமிக்க கலாச்சாரம்?

ஆன்மிக அரசியல்

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை

மனிதர்களே உருவாக்கிக்கொண்ட பிரச்சினைகளை கடவுள் தீர்க்க வேண்டும் என நினைத்து கோயிலுக்குச் சென்றுவரும் பக்தர்கள் பற்றி?

தொழிலாளர்கள் -தொண்டர்கள் -பக்தர்கள் இவர்களெல்லாம் நம்பிக்கை மிகுந்த விசுவாசிகள். முதலாளிகள் -தலைவர்கள் -கடவுளர்கள் இவர்களெல்லாம் அந்த நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் உரிய மதிப்பளிக்க வேண்டியவர்கள். நம்பிக்கையுடன் உழைக்கும் தொழிலாளர்கள் தங்களின் அடிப்படை ஊதியம் மற்றும் உரிமைகளுக்காக தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதைக் காண்கிறோம். விசுவாசமிக்க தொண்டர்களைவிட வேறு வகையில் பயன்படக்கூடியவர்கள்தான் தலைவர்களால் அதிகப் பலனடைகிறார்கள் என்ற விரக்தி ஆட்சிக்கு வரும் கட்சியினரிடம் காணப்படுகிறது. பக்தர்கள் மட்டும்தான் தங்களின் நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்குமான பலன் என்ன என்பது பற்றி யோசிக்காமல் கடமையே கண் என்று கோயிலுக்குச் சென்று வரக்கூடியவர்களாக இருக்கிறார்கள். தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு சட்டங்கள் இருக்கின்றன. தொண்டர்களின் சிக்கலுக்கு தேர்தல் களம் பதிலளிக்கிறது. ஆனால், பக்தர்களின் பிரச்சினைகள் வேறுவிதம்.

நம்பிக்கையுடன் கோயிலுக்குச் சென்று பிரச்சினைகளை கடவுளிடம் இறக்கி வைத்துவிட்டு, அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை நடைமுறை யதார்த்தத்துடன் அணுகக்கூடிய பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதாக நிம்மதியடைகிறார்கள். இதனை அறியாத பக்தர்களுக்கு நம்பிக்கையே பிரச்சினையாகிவிடுகிறது. கடவுள் சம்பந்தப்பட்ட விவகாரங்களிலேயே சட்டமும் நீதியும் தலையிட வேண்டிய காலத்தில், மனிதர்கள் தேவையின்றி உருவாக்கிக்கொள்ளும் பிரச்சினைகளுக்கெல்லாம் கடவுள் தீர்வு காணவேண்டும் என நினைக்கிறது நம்பிக்கையும் விசுவாசமும் கொண்ட பக்தர்களின் மனம். இதை நாத்திகர்கள் கேள்வி கேட்பது ஒருபுறமென்றால், ஒரு மதத்தாரை நோக்கி இன்னொரு மதத்தார் விமர்சிக்கும்போது கூடுதல் சிக்கலாகிவிடுகிறது. கிறிஸ்தவ மதபோதகர் லாசரஸ், கோயில்கள் உள்ள தமிழ்நாட்டில் சாத்தான்கள் நிறைந்திருப்பதாக வம்பு பேசி, வழக்கில் சிக்கியிருப்பது சமீபத்திய உதாரணம்.