பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் - தேனி

'பல பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்து மோசடிசெய்யும் ஆண்கள்... அதேபோல் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்யும் பெண்கள்'.. என்ன வித்தியாசம் சார்...!?

Advertisment

அடிப்படையில் வித்தியாசம் ஒன்றும் இருப்பதில்லை. இருவருக்குமே சம்பந்தப்பட்ட நபர்களை ஏமாற்றி பணம், நகைபோன்ற ஆதாயங்களைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாவதுதான் இலக்காக இருக்கும். சில சமயங்களில் ஆண்கள் இத்தகைய மோசடியில் ஈடுபடும்போது மட்டுமீறிய பாலியல் விருப்பமும் காரணமாக இருக்கலாம். பெண் இத்தகைய மோசடியில் ஈடுபடும்போது, நம் ஒழுக்கம்சார்ந்த பார்வை காரணமாக "எத்தனை பேரை ஏமாத்தி கல்யாணம் பண்ணிருக்கா..." என சற்று இழிவாகவும், ஏளனமாகவும் பார்க்கத் தலைப்படுகிறது சமூகம். சம்பந்தப்பட்ட நபர்களின் அப்பாவித்தனம், பேராசை, சரிவர விசாரிக்காதது போன்றவற்றைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்டம்போடும் இந்த மோசடிப் பேர்வழிகள், "பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படு வான், ஆனைக்கும் அடிசறுக்கும்" போன்ற பழமொழிகளை மறந்துவிடுகிறார்கள்.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

மணிப்பூர் சம்பவத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மோடி மௌனம் கலைத்திருப்பது குறித்து...

mm

Advertisment

என்ன பயன்? இந்தச் சம்பவம் குறித்து உடனேயே புகார் கொடுக்கப்பட்டதாக குக்கி சமூக பழங்குடித் தலைவர்கள் கூறியுள் ளார்கள். ஆக, காவல்துறை மூலம் முதல்வருக்கும், முதல்வரிடமிருந்து உள்துறை அமைச்சருக்கும் அவரிடமிருந்து பிரதமருக்கும் தகவல் தெரிந்திருக்கும். அன்றைக்கே கண்டிப்பும் கறாரும் காட்டியிருந்தால் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவந்திருக்க லாம். உயிரிழப்புகளையும் பொருளிழப்புகளையும் தவிர்த் திருக்கலாம். மணிப்பூரில் இன்று அமைதிகூட திரும்பியிருக்கலாம். "அமைதியை உறுதிசெய்ய முடி யாதவர்களுக்கு மணிப்பூரை ஆட்சி செய்ய உரிமை இல்லை' என ட்விட்டரில் 2017-ல் ட்வீட் செய்தவர் மோடி, இப்போது அதைப் பின்பற்றி ஆட்சியை யாவது கலைத்திருக்கவேண்டு மல்லவா? உச்சநீதிமன்றம் கண்டித்ததற்காக பேசிய பேச்சு அது! ஒரு பாவனை என்பதற்குமேல் அதற்கு எந்தப் பொருளும் இல்லை.

எம். செந்தில்குமார், சென்னை-78

உம்மன்சாண்டி இறப்பு குறித்து?

mm

கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளியின் மாணவர் அமைப்பிலிருந்து அரசியலுக்கு வந்து காங்கிரஸில் உயர் பொறுப்புகள் பலவற்றுக்கு உயர்ந்தவர். இரண்டுமுறை முதல்வர் பொறுப்பில் அமர்ந்தவர். 2004-2006 காலகட்டத்தில் அவரால் ஐந்தாண்டு ஆட்சியை நிறைவுசெய்ய முடியவில்லை. இந்தியாவிலேயே நீண்ட காலம் எம்.எல்.ஏ.வாக நீடித்தவர் என்ற பெருமையைக் கையில் வைத்திருப்பதோடு, ஐ.நா.வின் பொதுச் சேவைக்கான விருதையும் 2013-ல் பெற்ற வர். சோலார் பேனலும் விழிஞ்ஞம் துறைமுகமும் அவரது பெருமையின் மீதான கறும்புள்ளிகள்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

வீர சாவர்க்கர் பெயரில் விமான நிலையம் சரியா?

Advertisment

மக்கள் எந்தக் கட்சியை ஆட்சிக்குத் தேர்வுசெய்கிறார்களோ, அந்தக் கட்சியின் கொள்கைக்கு நெருக்கமான தலைவர்களின் பெயரைத்தான் அது அரசுக் கட்டடங்களுக்கு, திட்டங்களுக்குச் சூட்டும். இன்னும் அவர்கள் கோட்சே பெயரை திட்டங்களுக்கு வைக்க தயங்கிக்கொண்டிருப்பதை எண்ணி நாம் ஆறுதல்பட்டுக் கொள்ளவேண்டியதுதான்.

எம். நிர்மலா, வாணரப்பேட்டை,

"சாதி ஒரு அழகிய சொல்" என்று அன்புமணி பேசியுள்ளது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பா.ம.க.வின் 35-ஆம் ஆண்டு தொடக்கவிழா மயிலாப்பூர் மாங்கொல்லைப் பகுதியில் நடந்தபோது பேசியது அது. "சாதி என்பதை ஒரு அழகிய சொல்லாகத் தான் நான் பார்க்கிறேன். ஆனால், சாதியால் வரும் பிரச்சனைகளை நாம் களையெடுக்க வேண்டும். சாதியால் வருகின்ற அடக்குமுறைகளை நாம் ஒழிக்கவேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில் சாதியில் அழகான வழிமுறைகள் இருக்கின்றது' என்று பேசினார். அவர் ஆதாயத்துக்கு அவர் பேசியிருக்கிறார். உங்கள் ஆதாயத்துக்கு எது உகந்தது எது என்பதை நீங்கள் தேர்வுசெய்யுங்கள். அந்த சாதி என்ற சொல்தான் கீழ்வெண்மணி கொடுமைக்குக் காரணமானது. அந்த சாதி என்ற சொல்தான் ஏழு கோடித் தமிழர்களை லட்சங்களாகவும், கோடிகளாகவும் பிரிந்து அடையாளம் காணச்செய்கிறது. இந்தியாவின் நூற்று நாற்பது கோடி மக்களை ஒரே திரளாக இணையவிடாமல், ஆயிரம் திரள்களாக வகிர்ந்துபோட்டிருக்கிறது.