தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
வந்தே பாரத் ரயிலை காவிக் கலரில் பெயிண்ட் அடிக்க முடிவெடுத்து விட்டார்களே?
வெள்ளை நிறத்திலிருக்கும் ரயில் அழுக்காகிவிடுவதால், ஆரஞ்சு வண்ணம் அடிப்பதாக சாக்குப்போக்கு தெரிவித்திருக் கிறார்கள். இந்தியாவுக்கே காவி அடிப்பதுதான் அவர்கள் இலட்சியம். முதலில் ஆங்காங்கே அடித்து பல்ஸ் பார்த்துவிட்டு, பிறகு எங்கெங்கும் அடிப்பார்கள்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்
'திரிபுரா சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்த பா.ஜ.க. உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய "திப்ரா மோத்ரா' கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்துள்ளாரே சபாநாயகர்!?
திரிபுராவில் மார்ச்சில் நடந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜடாப்லால் நாத் செல்போனில் ஆபாசப் படம் பார்த்ததாக புகார். அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திப்ரா மோத்தா கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். சமாளித்துப் பார்த்த சபாநாயகர், அமளி செய்ததாகக் கூறி ஐந்து எம்.எல்.ஏ.க்களை சட்டசபை கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்து வெளியேற்றியிருக்கிறார். படம் பார்த்தவரை விட்டுட்டு, புகார் சொன்னவர்களை சஸ்பெண்ட் செய்து நீதியை நிலைநாட்டியிருக்கிறது பா.ஜ.க.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவுசெய்திருப்பது பற்றி…?
ரஷ்யா இத்தனை நாள் உக்ரைன் மீது வீசியதெல்லாம் சர்வதேச சமூகம் அங்கீகாரம் வழங்கிய குண்டுகளும் ஏவுகணைகளுமா? இந்தப் போரே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஆதரவாக நேட்டோ பக்கம் உக்ரைன் சாய முடிவெடுத்ததால்தான் நடக்கிறது. தங்கள் பக்கம் வர நினைக்கும் உக்ரைனுக்கு ஆதரவாக நேரடியாக ஆதரவு தராமல் ஆயுதம், பணம், வியூகம் என மறைமுக ஆதரவை வழங்கிவருகின்றன நேட்டோ நாடுகள். ஹோட்டலில் இன்றைய ஸ்பெஷல் போடுவதுபோல், போரில் சமீபத்திய உதவியாக கொத்துக்குண்டுகளைக் கொடுத்திருக்கின்றன. ரஷ்யத் தரப்பு பதிலுக்கு எந்த ஆயுதத்தை வெளியே எடுக்கப்போகிறதோ?
சி. இராணி, விருதுநகர்
மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் பற்றி?…
கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் தொடர்ச்சி யாக கோலோட்சிய கம்யூனிஸ்டுகளிடமிருந்து ஆட்சியைப் பிடித்து முதல்வராகியிருக்கிறார் மம்தா. தற்போது எதிரணியில் பா.ஜ.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் என மும்முனைத் தாக்குதல். பிடித்ததை விட்டுவிடக்கூடாது என்ற முனைப்பு மம்தாவிடம். எதைச் செய்தாவது மம்தாவின் பேரைக் களங்கப்படுத்திவிட வேண்டுமென்ற முனைப்பு எதிர்க்கட்சிகளிடம். இரு தரப்பின் வீம்புக்கு பலி தரப்பட்ட சாமானிய உயிர் களுக்குப் பதில்சொல்லத்தான் எந்தத் தரப்பும் இல்லை.
எம். நிர்மலா, வாணரப்பேட்டை
மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக வகுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் பற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழக மக்கள்தொகையில் சரி பாதி மகளிர் என்றால் அதுவே மூன்றரைக் கோடி. அவர்களில் பதின் பருவத்துக்குக் கீழுள்ளோர் ஒன்றரை கோடி எனத் தோராயமாக தள்ளினால்கூட மிச்சமுள்ள எண்ணிக்கை இரண்டு கோடி. இரண்டு கோடி பேருக்கும் எந்த அரசாங்கத்தாலும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கமுடியாது. எத்தனை பேர் பலன்பெறப் போகிறார்கள், யாருக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது என்பதைப் பார்த்தபின்தான் கருத்துச்சொல்ல முடியும். தற்போதைக்கு, தாமதமானாலும் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவதைப் பாராட்டலாம்!
பி.ராதாகிருஷ்ணன், சேலம்
கள்ளுக்கடை திறப்புக்கு மாவலியின் ஆதரவு உண்டா?
மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறைச் செயல்பாடு குறித்த ஆய்வுக்கூட்டத்துக்குப் பின் கள்ளுக்கடை திறப்பு குறித்து கருத்துத் தெரிவிக்கையில் விவசாயிகளுக்குப் பயன்படுமென்றால் ஆட்சேபனையில்லை, இதுகுறித்து ஆய்வுசெய்ய கமிட்டி அமைக்கப்படும் என்றிருக்கிறார் அமைச்சர் முத்துசாமி. டாஸ்மாக் வருவாய்க்கு கள்ளுக்கடை ஆபத்து. அதனால் ஒரு பெரிய நோ என்றுதான் கமிட்டி பதில்சொல்லும். மற்றபடி கள்ளோ, மதுவோ குடி எப்போதும் நாட்டுக்கும் வீட்டுக்கும் உடலுக்கும் கேடுதான்.