உமரி பொ.கணேசன், மும்பை-37

தேர்தலில் பண பலத்தைக் கட்டுப்படுத்தவே முடியாதா?

1952 தேர்தலில் "உப்புமா-காபி', 1962 தேர்தலில் ஓட்டுக்கு 5 ரூபாய் -"வெங்கடாசலபதி படத்தின் மீது சத்தியம்' எனத் தொடங்கி, 1994 மயிலாப்பூர் இடைத்தேர்தலில் "லட்டுக்குள் மூக்குத்தி', 2005 காஞ்சிபுரம்-கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் "வாக்காளர் ஒவ்வொருவருக்கும் பணம்', 2007-ல் "உலகப் புகழ்பெற்ற திருமங்கலம் ஃபார்முலா', 2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் "20 ரூபாய் டோக்கன்' என ஒவ்வொருவிதமாக வளர்ந்துகொண்டேயிருக்கிறது தேர்தல் பணபலம்.

நித்திலா, தேவதானப்பட்டி

Advertisment

திருமணத்தை மீறிய உறவு தொடர்பான சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு நமது நாட்டில் எதிர்ப்புக் குரல்கள் அதிகம் கேட்கின்றனவே, மற்ற நாடுகளில் எப்படி?

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் சீனா, ரஷ்யா போன்ற கம்யூனிசம் வேரூன்றிய நாடுகளிலும் திருமணத்தை மீறிய உறவுகள் சட்டரீதியான பிரச்சினையாகக் கருதப்படுவதில்லை. அவை தனி மனிதர்-குடும்பம் தொடர்புடைய சிக்கலாகக் கையாளப்படுகின்றன. அதே நேரத்தில் வளைகுடா நாடுகள், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட இஸ்லாமிய-பவுத்த மத சட்டங்கள் மிகுந்துள்ள நாடுகளில் இத்தகைய உறவுகள் கடும் குற்றமாகக் கருதப்படுகின்றன. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றாலும், இங்கே அனைத்து மதப் பழக்கங்களும் கடைப்பிடிக்கப்படுவதால், மத நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாகியுள்ள குடும்ப முறையே இங்கே மிகுதியாக உள்ளன. அதனால்தான் இத்தகைய தீர்ப்புகள் இந்தியாவில் அதிக அதிர்வை ஏற்படுத்துகின்றன.

சாரங்கன், கும்பகோணம்

Advertisment

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா எப்படி?

தன் படங்களில்கூட மது அருந்தும் காட்சிகளைத் தவிர்த்தவர் எம்.ஜி.ஆர். அவரது நூற்றாண்டு நிறைவு விழாவில் மதுக்கடைகளில் அலைமோதிய அ.தி.மு.க.வினரின் படங்கள் வெளியாகும் அளவுக்கு சாதித்திருக்கிறார்கள் ஜெ. வழியில் ஆட்சி நடத்தும் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இருவரும்.

mavalianswers

தூயா, நெய்வேலி

டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றும்போது விவசாயிகள் நலன் பற்றி ரொம்பவே பேசிய மோடியின் ஆட்சியில், டெல்லிக்குப் பேரணியாக வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் தாக்குதலுக்கும் உள்ளாகியிருக்கிறார்களே?

டெல்லி நோக்கி விவசாயிகள் பெரும் பேரணியாகச் செல்வது இது முதல் முறையல்ல. கடந்த 4 ஆண்டுகளாக மோடி அரசு சொல்லி வருவதை நிறைவேற்றக் கோரி தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். உற்பத்தி செய்யப்படும் தானியங்களுக்குரிய அடிப்படை ஆதார விலை, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளுடன் இம்முறை பாரதிய கிசான் யூனியனைச் சேர்ந்த விவசாயிகள் பேரணி சென்றனர். எம்.எஸ்.சாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினாலும் முக்கிய கோரிக்கைகளை ஏற்பது சாத்தியமில்லை எனச் சொன்ன அரசு, விவசாயிகளைத் தடுக்கும் நோக்குடன் தடியடி, கண்ணீர்ப்புகை, தண்ணீர் தாக்குதல் நடத்தியுள்ளது. வீறுகொண்ட விவசாயிகளும் அதனைத் துணிவுடன் எதிர்கொண்டு மோடி அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளனர்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"காங்கிரஸ் கட்சியுடன் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது' என்ற ராகுலின் பேச்சு?

கவலைப்பட வேண்டியவர் கரீனாகபூர். அவர்தான் தனக்கு ஷயீப் அலிகானுடன் திருமணம் ஆவதற்குமுன் ராகுல்மீது, தான் காதல்கொண்டதாகத் தெரிவித்திருந்தார். அதற்கு முன்பே ராகுல், காங்கிரஸை கல்யாணம் செய்துகொண்டுவிட்டார் போலும்.

_______________

ஆன்மிக அரசியல்

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

நாத்திகர் ஆத்திகராக மாறுவது, ஆத்திகர் நாத்திகராக மாறுவது எது நல்லது?

"நட்ட கல்லும் பேசுமோ' எனக் கேட்ட சித்தரான சிவவாக்கியாரின் பாடல்களில் நாத்திக கருத்துகள் ஏராளமாக உண்டு. எனினும் அவர் பிறக்கும்போதே "சிவ.. சிவா..' என சொல்லிக்கொண்டு பிறந்ததாகவும், பிற்காலத்தில் சிவன்மலையில் உள்ள கோவிலை அவர் கட்டியதாகவும் குறிப்புகள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. திராவிட இயக்கத்தில் நாத்திகம் பேசிய கண்ணதாசன் பின்னர் தேசிய இயக்கத்தில் கலந்து "அர்த்தமுள்ள இந்து மதம்', "இயேசு காவியம்' ஆகியவற்றை எழுதினார். நாத்திகர்கள் பலபேர் ஆத்திகர்களாகியிருக்கிறார்கள். இந்துத்வா கொள்கையை முன்னெடுத்த சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே, தனது மனைவி இறந்தபிறகு கடவுள் மீதான நம்பிக்கை போய்விட்டதாக பேட்டி அளித்திருக்கிறார். எனவே, அவரவர் சொந்த விருப்பங்களின் அடிப்படையில் இப்படியும் அப்படியும் மாறுவது உண்டு. எப்படி மாறுகிறார்கள் என்பது முக்கியமல்ல, என்ன செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

தந்தை பெரியார் தனது இறுதி மூச்சுவரை நாத்திகராக இருந்தவர். குன்றக்குடி அடிகளார் ஆன்மிக நெறியினை வளர்த்தவர். இருவரும் அவரவர் பாதையிலிருந்து கடைசிவரை மாறவில்லை. ஆனால் மனிதநேயம் மலரவும், சாதி ஏற்றத்தாழ்வுகள் மறையவும் பெரியாரும் அடிகளாரும் பல மேடைகளில் இணைந்து நின்றிருக்கிறார்கள். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் மதநல்லிணக்கம் அதிகமாக இருப்பதும், மதவெறிக் கட்சிகள் வளருவதற்கான வாய்ப்பின்றி அமைதியான ஆன்மிகம் செழித்திருக்கிறதென்றால், ஈராயிரம் ஆண்டுகளாக எத்தனையோ பெரியார்களும், இறைத் தொண்டு செய்த அடிகளார்களும் விதைத்த விதையும் அதன் விளைச்சலும்தான் காரணம்.