எம்.கல்யாணசுந்தரம், கும்பகோணம்
"அரசை குறை கூறினால் நாக்கை அறுப்பேன்' என மாண்புமிகு அமைச்சர் துரைக்கண்ணு பேசியிருக்கிறாரே?
மேடையில் வாய் வீரம் காட்டிய அதே மந்திரி, தன் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் பெட்டிப் பாம்பாக பம்மிவிட்டாரே! வாக்குகளை அறுவடை செய்ய வேண்டுமென்றால், நாக்கை அடக்கத்தான் வேண்டும்.
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
கலைவாணர் என்.எஸ்.கே. பிறந்த நாகர்கோவில், மாநகராட்சி ஆகிறதாமே?
கலைவாணர் தமிழ்நாட்டின் கலைச்சொத்து. அவரைத் தந்த நாகர்கோவில் பெருமைக்குரியது. அவரைப் போன்ற பல ஆற்றல்மிக்கோரைத் தந்துள்ளது. மாநகராட்சியாகும் என்ற அறிவிப்பு மட்டும் நாகர்கோவிலுக்குப் புதுப் பெருமையைத் தந்துவிடாது. ஏற்கனவே ஜெ. ஆட்சியில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர், திண்டுக்கல் மக்களிடம் நிலவரம் கேட்டால், உண்மை தெரியும்.
திராதி, துடியலூர், கோவை
இந்தியாவில் 2016-ல் தனி மனித மது நுகர்வு ஆண்டுக்கு 6.4 லிட்டர் என உயர்ந்துவிட்டதே?
இந்திய ‘குடி’மக்களின் கொள்ளளவு இரு மடங்காகியிருக்கிறது. கேளிக்கையாக குடிப்பதும், குடிக்கே அடிமையாவதும் வேறு வேறு என்ற நிலை மாறி, கேளிக்கை நாள் எப்போது வரும் என ஏங்க ஆரம்பிக்கும்போதே குடிமக்கள் அடிமையாகிவிடுகிறார்கள். அதனால் மது நுகர்வு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை
தமிழிசையிடம் உள்ள மாநில பா.ஜ.க. தலைவர் பதவியைத் தட்டிப் பறிக்க நினைக்கும் எஸ்.வீ.சேகரின் வியூகம் எப்படி?
"தன்னை தலைவராக்கினால் பா.ஜ.க.வின் வாக்கு வங்கியை உயர்த்துவேன்' என்கிறார் எஸ்.வீ.சேகர். அதற்குப் பதிலடியாக, "எஸ்.வீ.சேகர் தனது நாடகத்திற்கான வசனத்தைப் பேசுகிறார்' என்கிறார் தமிழிசை. தலைவர் பதவிக்கான போட்டி பலமடைந்து வருவது தெரிகிறது. தாமரையின் வாக்குப் பலம்தான் தமிழ்நாட்டில் கனவாகவே இருக்கிறது.
லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)
செல்போனை திருடியதற்காக கரூரில் ஒரு சிறுவனை ஒரு கிராமமே அடித்துக் கொன்றுவிட்டதே?
சிறுவன்தான் திருடியிருப்பான் என்று செல்போனை பறிகொடுத்தவருக்கு ஏற்பட்ட சந்தேகமும், தந்தையை இழந்து ஏழைத் தாயின் பராமரிப்பில் வளர்ந்த சிறுவனுக்கு ஆதரவாக வேறு யாரும் இல்லை என்பதும்தான் ஊர் மக்களே சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு இந்தக் கொடூரத்தை செய்யக் காரணமாகியிருக்கிறது. பாலசுப்ரமணியன் என்ற உண்மையான ஏழைத்தாயின் மகனை நோக்கி வீரம் காட்டிய இந்த சமூகத்தால், "ஏழைத்தாயின் மகன்' என்று சொல்லிக்கொண்டு, நடுராத்திரியில் நடுரோட்டில் ஒட்டுமொத்த மக்களையும் நிறுத்தியவர் மீதும் அவரைப்போல மாநிலத்துக்கு மாநிலம் அதிகாரத்தில் உள்ள மில்லியனர் ஏழைகள் மீதும் கோபம் காட்ட முடியுமா? குறைந்தபட்சம், தேர்தல் நேர மொய் பணத்தையாவது மறுக்கும் மனத்துணிவு உண்டா?
மணி, சென்னை-93
"இந்தியாவின் இரும்பு மனிதர்' எனப்பட்ட முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் பட்டேலுக்கு வெளிநாடான சீனாவில் சிலை செய்து வாங்கியிருப்பது சரியானதா?
"மேக் இன் இந்தியா' என முழங்கியபடி உலக நாடுகளெல்லாம் சுற்றி வந்த பிரதமரின் ஆட்சியில் எல்லாமும் சரியானதே!
__________________
ஆன்மிக அரசியல்
நித்திலா, தேவதானப்பட்டி
நாட்டில் பக்தர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். அப்படி இருந்தும் கோவிலில் சாமி சிலைகள் காணாமல் போவதும் அவை போலீஸ் சோதனையில் சிக்குவதும் தொடர்கிறதே?
சிக்கியவை கொஞ்சம்; தப்பியவை ஏராளம். ஆனால், இங்கே சோதனைகளும் அதில் சிக்கும் சிலைகளும் ஊடகச் செய்திகளாகி, உண்மையை நோக்கிய பயணத்தை மறைத்துவிடுகின்றன. பணபலம் படைத்தவர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் கூட்டணி சேர்ந்து செயல்படுவதால்தான் சிலை கடத்தல்கள் தொடர்கின்றன. அறநிலையத்துறையினரும் இதில் பங்காளிகள் என்றாலும் அவர்கள் மீது மட்டுமே பழிபோட்டு திசை திருப்பும் வேலைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. காஞ்சிபுரம் தேவநாதன் போன்ற கோவில் கருவறையையே நாசமாக்கிய அர்ச்சகர்கள் உள்ள நாட்டில் சாமி சிலைகளின் மதிப்பை யார் அறிவார்? அது குறித்து வாய் திறக்காமல், அறநிலையத்துறை ஊழியர்கள் வீட்டுப் பெண்களை இழிவுபடுத்திப் பேசிய நபர் மீது, புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் போலீசார் பாதுகாப்பு கொடுத்து வருகிறார்கள். இதனைக் கண்டித்து அறநிலையத்துறையினர் தங்கள் குடும்பத்தாருடன் பெருமளவில் திரண்டு, சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
அறநிலையத்துறையில் ஊழல்கள் களையப்படவேண்டிய அதே நேரத்தில், அதை அகற்றிவிட்டு, கோவில்களை அபகரிக்க நினைக்கும் கூட்டத்தாரிடமிருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் கருதி பல கட்சியினரும் போராட்டத்திற்கு ஆதரவளித்துப் பேசினர். இது குறித்த செய்திகள் வெளியாக வேண்டிய நாளில்தான், ஒரு பங்களாவில் பதுக்கப்பட்டிருந்த சிலைகள் ரெய்டில் சிக்கிய செய்தி முக்கியத்துவம் பெற்றது. அதிகாரத்தின் பிடியிலிருந்து சாமி சிலைகளாலேயே மீள முடியவில்லையே!