சி.கார்த்திகேயன், சாத்தூர்
கர்நாடக மாநிலத்தில் தனது ஐந்து வருட முழுமையான ஆட்சியை காங்கிரஸ் நடத்த பி.ஜே.பி. இடம் தருமா?
என்னதான் பெரும்பான்மை பலம் இருந்தாலும், முழுமையாக ஆட்சி செய்ய விடாத ஜனநாயக விரோத சக்தியாக பா.ஜ.க. செயல்படும் என்ற எண்ணம் அனைத்து தரப்பு மக்களிடமும் பரவியிருப்பதிலிருந்தே அந்தக் கட்சியின் லட்சணத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
ஆளுநர் ஆர்.என்.ரவி, தான் குழந்தை திருமணம் செய்து கொண்டதை மாணவர்கள் முன்பு சொல்வது ஊக்குவிப்பதாக உள்ளதே?
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு மீது பல குற்றச் சாட்டுகளை வைத்தார். அதில் முக்கியமானது, சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்தது தொடர்பான புகாரில், அவர் களின் பெண் பிள்ளைகளுக்கு இரட்டை விரல் சோதனை நடத்தப்பட்டது என்பதாகும். ஆளுநரின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த டி.ஜி.பி., அப்படி எந்த சோதனையும் நடத்தப்படவில்லை என்று விளக்கமாகத் தெரிவித்தார். அத்துடன், சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்பங்களில் குழந் தைத் திருமணங்கள் நடைபெறுவது குறித்து தொடர்ச்சி யான புகார்கள் பதிவாகியிருப்பதும் ஊடகங்களில் வெளியாகின. நமது நக்கீரன் இதழிலும் ஏற்கனவே இது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. (தற்போதும் 24-ஆம் பக்கத்தில் விரிவாக வந்துள்ளது). இடதுசாரி இயக்கங்கள், மாதர் அமைப்புகள் இந்தக் குழந்தைத் திருமணத்திற்கு எதிராகப் போராட்டங்களையும் நடத்தியுள்ளன. குழந்தைத் திருமணம் என்பது சட்ட விரோதம். இந்தியாவில் அது தடை செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்படிப்பட்ட திருமணத்தை கவர்னர் ஆதரிக்கிறாரா என்று முதல்வரும் கேள்வி கேட்டார். எல்லாப் பக்கமும் கேட் போடப்பட்டதால், தனக்கே குழந்தைத் திருமணம்தான் நடந்தது எனப் பெருமையாகச் சொல்கிறார் ஆளுநர். அதாவது, இந்தியாவின் சட்டத்தைவிட பெரியது, அல்லது சட்டத்தை மீறும் அதிகாரம் கொண்டது சனாதனம் என்பதுதான் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்ட ஆளுநர் சொல்ல வருவது.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
குஜராத்தில் 68 நீதிபதிகள் பதவி உயர்வை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பது பற்றி?
பிரதமர் மோடியை ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் அவதூறாகப் பேசிவிட்டார் என்று அவர் மீது குஜராத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவதூறு என்றால் அவதூறுக்குரிய பிரதமர் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். ஆனால், பா.ஜ.க. நிர்வாகி சார்பில் வழக்குத் தொடரப்பட்டு, அது விரைவாக விசாரிக்கப்பட்டு, ராகுல் காந்திக்கு தண்டனையும் அளிக்கப்பட்டதால், அவருடைய எம்.பி. பதவி அவசர அவசரமாகப் பறிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை வழங்கிய கீழ்கோர்ட் நீதிபதிக்கு உடனடியாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இது போல பலருக்கும் பதவி உயர்வு. இந்த நிலையில்தான், குஜராத்தின் 68 நீதிபதிகளுடைய பதவி உயர்வை ரத்து செய்துள்ளது உச்சநீதிமன்றம். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எல்லா மட்டங்களிலும் தலையிடுவார்கள். தங்கள் தலை வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், வெளிப்படையாக எல்லாவற்றையும் செய்வதுதான் மோடி-அமித்ஷா பா.ஜ.க. பாணி நிர்வாகம்.
எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகி, பா.ஜ.க. கூட்டணிக்கு திருமாவளவன் வரவேண்டும்.. என்கிறாரே வானதி சீனிவாசன்?
இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியைக் கட்டமைப்பதில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முனைப்பாக இருக்கிறார். சோனியா, மம்தா, கெஜ்ரிவால், சரத்பவார், உத்தவ்தாக்கரே எனப் பல தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளார். லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளக் கட்சியும் அவருடன் இணைந்து செயல்படுகிறது. நிதிஷ்குமார் ஏற்கனவே தி.மு.க. தலைவரான மு.க.ஸ்டாலினுடன் நல்லுறவில் இருக்கிறார். திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் என்கிற நூற்றாண்டு நினைவு மண்டபத்தை நிதிஷ்குமார் திறந்து வைக்க இருக்கிறார். தி.மு.க.வுடன் காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லிம் அமைப்புகள் இணைந்திருக்கின்றன. கொள்கைரீதியாக இந்தக் கூட்டணியில் தொடர்ந்து பங்கேற்றிருப்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வெற்றி ஃபார்முலா பிற மாநில அரசியலுக் கும் பாடமாக அமைந்தது. தற்போது, எல்லாப் பக்கமும் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு வலுக்கும் நிலையில், தி.மு.க. கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கலாம் என்பது வானதி சீனிவாசனுக்கு மேலிடம் தந்திருக்கும் அசைன் மெண்ட்டாக இருக்கலாம். நேற்று வந்தவர்களெல்லாம் கட்சியிலும், சட்டமன்றத்திலும் முன்னிலைப்படுத்தப் பட்டுள்ள நிலையில், பா.ஜ.கவில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் வானதி சீனிவாசன்தான் திருமாவின் கட்சியிலோ தி.மு.க.விலோ சேருவது சரியாக இருக்கும் என்று அவரது ஆதரவாளர்களே சொல்கிறார்களாம்.
டி.ஜெயசிங், கோயம்புத்தூர்
டாஸ்மாக் கடைகள் இருக்கும்போது கள்ளச் சாராயம் குடிக்க ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள்?
டாஸ்மாக்கில் விலை அதிகம், தரம் குறைவு. இவை இரண்டும் முதன்மையான காரணங்கள். அதுபோக, கள்ளச்சாராயத்தைக் கண்டும் காணாமல் விட்ட காவல் துறை, அந்தத் தொழிலுக்கு துணை நிற்கும் அரசியல் சக்திகள் ஆகியவை அடுத்தடுத்த காரணங்கள்.