தே.மாதவன், கோயமுத்தூர்-45

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைதாகி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள் ?

Advertisment

bb

எல்லா நாட்டிலும் ஆளுங்கட்சிகள் அதிகார வரம்பை மீறுகின்றன. எல்லா நாட்டிலும் எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை மட்டுமே நம்பியிருக்கின்றன. இம்ரான்கானின் பிரதமர் பதவியைப் பறிப்பதில் தொடங்கி, அவரை சிறையில் அடைப்பது வரை எல்லாவற்றிலும் கடும் வேகத்தை பாகிஸ்தான் கண்டிருக்கிறது. இம்ரானுக்கு இப்போதும் மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது. அவரைக் கைது செய்த முறை எல்லாரையும் அதிர வைத்தது. அதனை எதிர்த்து அவரது கட்சியினர் போராட்டங்களை நடத்தினர். இம்ரான்கானை விடுதலை செய்ய உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். பாகிஸ்தானில் ஜனநாயகம் சிறகடிக்க முடியாத சிறைப்பறவையாக இருக்கிறது.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

துணை நிலை ஆளுநரைவிட டெல்லி முதல்வருக்கே அதிகாரம் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து?

ஜனநாயகத்தின் சிறப்பு என்பதே மக்களின் தீர்ப்புதான். ஆளுநர் அல்லது துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிப்பவர்கள் அந்த இடத் திற்கு நியமிக்கப்படுபவர்கள். முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதிநிதிகளான ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவர். ஒருவரை நியமிப்பது என்பது ஒன்றிய அரசு, பிரதமர், ஜனாதிபதி ஆகியோரின் விருப்பம் சார்ந்தது. ஓர் அரசைத் தேர்ந்தெடுப்பது என்பது மக்களின் முடிவு. தாங்கள் தேர்ந்தெடுத்த அரசு சரியாக செயல்படவில்லை என மக்கள் கருதினால், அடுத்த தேர்தலில் அவர்களை வீழ்த்தும் அதிகாரமும் உண்டு. எனவே முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு மக்கள்தான் எஜமானர்கள். மக்களாட்சி நடைபெறும் நாட்டில், நியமனப் பொறுப்பில் உள்ள துணை நிலை ஆளுநரைவிட, ஜனநாயகப் முறைப்படி பதவிக்கு வந்த முதல்வருக்கே அதிகாரம் என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் இந்தியாவின் ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளது. டெல்லி போன்ற மாநிலங்கள் முழுமையான அதிகாரம் கொண்டவை அல்ல. இன்னமும் அந்த மாநிலத்தில், காவல்துறை என்பது ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் பொறுப்பில்தான் உள்ளது. அப்படிப்பட்ட மாநிலத்தில் துணை நிலை ஆளுநரின் அதிகாரம் எந்த வரையறைக்குட்பட்டது என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் தலைநகரில் உள்ள ராஜ்பவனில் இருப்பவர்கள் தங்கள் அதிகார வரம்பை உணர்ந்து கொள்ள வேண்டும்.

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

"ஓ.பி.எஸ்.ஸை நம்பி இருட்டில் கூட செல்லலாம்...' என்ற டிடிவி.தினகரனின் பேச்சு?

1999ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனக்குத் தொடர்பில்லாத அன்றயை பெரியகுளம் (இன்றைய தேனி) தொகுதியில் போட்டியிட்டார் தினகரன். அப்போது அவருக்கு அறிமுகமானவர் ஓ.பி.எஸ். அந்தத் தேர்தலில் தினகரன் வெற்றிபெற்று எம்.பி.யானார். அதன்பிறகு 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அதே பெரியகுளம் தொகுதியில் தினகரன் போட்டியிட்டார். காங்கிரஸ் வேட்பாளர் ஹாரூணிடம் தோல்வியடைந்தார். இதற்கிடையே, டான்சி வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா பதவியேற்றது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால், ஜெ. பதவி விலக, 2001ல் ஓ.பி.எஸ். முதல்வர் ஆனார். 2014ல் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபோதும் ஓ.பி.எஸ்.தான் முதல்வர் ஆனார். அதே ஓ.பி.எஸ்., ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, தான் வகித்துவந்த முதல்வர் பதவியை தினகரனின் சின்னம்மா சசிகலா பறித்தார் என்பதற்காக ஜெ. சமாதியில் தர்மயுத்தம் நடத்தினார். தினகரனையும் அவர் குடும்பத்தையும் நம்பி ஓ.பி.எஸ்.தான் வெளிச்சத்திலும் இருட்டிலும் பலமுறை நடந்திருக்கிறார். அதனால், அவர் கையைப் பிடித்துக்கொண்டு இருட்டிலும் செல்லலாம் என தினகரன் நினைத் திருக்கலாம்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் "சென்னை சூப்பர் கிங்ஸ்' அணி மீது தமிழ்நாடு ரசிகர்கள் அதீத பாசம் வைப்பது சரியா?

mm

Advertisment

கிரிக்கெட் விளையாட்டு என்பது கவர்ந்திழுக்கும் தன்மைகள் பலவற்றைக் கொண்டது. ஐ.பி.எல். போட்டிகள் ரசிகர் களை பரபரப்பிலேயே வைத்திருக்க வேண் டும் என்கிற முழுமையான வணிக நோக்கம் கொண்டவை. ஏலம் எடுக்கப்பட்ட ப்ளேயர்களைக் கொண்டு, லாபம் குவிப் பதற்காக போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஏற்கனவே கிரிக்கெட்டில்தான் தேசப்பற்று நிறைந்திருக்கிறது என நம்பிய ரசிகர்கள், இப்போது ஐ.பி.எல். அணிகளைப் பார்த்து மாநிலப் பற்றுக்கு மாற்றப்பட்டிருக்கிறார் கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் ஆட்டமும் அணுகு முறையும் பலருக்கும் பிடிக்கும். ஆனால், அவர் உள்பட அந்த அணியில் யாரும் தமிழ்நாட்டுக்காரர்கள் இல்லை. பச்சைத் தமிழன் என்று சொல்வதுண்டு. தோனியையும் அவர் டீமையும் மஞ்சள் தமிழர்களாகப் பார்க்க வைத்திருப்பது சூப்பர் கிங்ஸ் அணியின் முதலாளியான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் வெற்றிகரமான வியாபார உத்தி.