சி. கார்த்திகேயன், சாத்தூர்
இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் இரண் டாம் பாகமும் வெளியான நிலை யில் அமரர் கல்கியின் ரசிகர்கள் மனநிலை எப்படி இருக்கிறது?
மணிரத்னம் தன் "நாயகன்' படத்தை மும்பை தமிழரான வரதாபாய் சாயலில் எடுத் தார். அது பற்றி விமர் சனம் வந்தபோது இது அவர் கதையல்ல என் றார். "பம்பாய்' படத் தில் இந்து-முஸ்லிம் மோதல் காட்சிகள் சிவசேனாவை சித்தரிப்பதாக விமர்சனம் வந்தபோது, பால்தாக்கரேவை சந்தித்து படத்தைப் போட்டுக் காட்டி, இது உங்கள் அமைப்பு பற்றியது அல்ல என்றார். இருவர் படத்தின்போதும் சர்ச்சை வந்தது. கலைஞ ரிடம் படத்தைப் போட் டுக்காட்டி, உள்நோக்கத்துடன் எதுவும் எடுக்கவில்லை என்றார் மணிரத்னம். "குரு' என்ற படத்தில் அம்பானியின் வாழ்க்கை சாயல் தெரிவதாக விமர்சனம் வந்ததும், அம்பானிக்கு போட்டுக்காட்டி இது உங்களை விமர்சிக்கவில்லை என்று சமாதானம் செய்தார். கல்கி இன்று இருந்திருந்தால், அவருக்கும் "பொன்னியின்செல்வன் 2' படத்தைப் போட்டுக் காட்டி, இது உங்கள் நாவலை அப்படியே எடுத்த படமல்ல என்று மணிரத்னம் விளக்கியிருக்கலாம். கல்கி எப்போதோ அமரராகிவிட்டார்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
சிங்கப்பூரில் கஞ்சா கடத்தியதாக தமிழன் தங்கராஜ் சுப்பையா தூக்கிலிடப்பட்டதை இந்தியா தடுக்கவே இல்லையே?
ஒரு நாட்டின் சட்ட திட்டங்களில் இன்னொரு நாடு அத்தனை எளிதாக தலையிட முடியாது. பாகிஸ் தானில் உளவு பார்த்ததாகவும் குண்டுவெடிப்புகளுக்கு காரணமாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இந்தியரான சரப்ஜித்சிங் என்பவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டு என்பது இந்தியா என்கிற இறையாண்மை மிக்க அரசின் மீதும் கறை படியச் செய்வது என்பதால் இந்திய அரசின் சார்பில் பாகிஸ்தான் நாட்டுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. மரண தண்டனை குறைக்கப்பட்டாலும் 22 ஆண்டுகள் பாகிஸ் தான் சிறையில் இருந்தார் சரப்ஜித் சிங். மலேசியாவும் சிங்கப்பூரும் ஒன்றாக இருந்த காலத்தில் அதன் பெயர் மலேயா. அங்குள்ள மலைத்தோட்டங்களில் தமிழர்கள் வேலை பார்த்து வந்தனர். தங்களின் உரிமைகளுக்காக சங்கம் அமைத்துப் போராடிய தொழிலாளர்கள் மீது அன்றைய மலேயா அரசு தாக்குதல் நடத்தியது. துப்பாக்கிச் சூட்டில் தமிழ் தொழிலாளர்கள் பலியாயினர். அன்றைக்கு மலேயாவை ஆண்டது பிரிட்டிஷ் அரசு. அதனை எதிர்த்துப் போராடிய தொழிலாளர் தலைவரான கணபதி, தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்டவர். தலைமறைவாக இருந்த கணபதி கைது செய்யப்பட்டார். கைத்துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியாவின் பிரதமராக இருந்த நேரு, மலேயாவின் பிரிட்டிஷ் அரசுக்கு கோரிக்கை வைத்தும் ஏற்கப்படவில்லை. 1949 மே 4 அன்று கணபதி தூக்கிலிடப்பட்டார். அப்போது தமிழ்நாட் டில் ஒரு கட்டுரை வெளியானது. “"நமது சர்க்கார், நமது நாட்டு கணபதியை அநாதையாக மாளவிடாது என மனத்தைத் திடப்படுத்திக் கொண்டோம். அதுமட்டுமல்ல, காமன்வெல்த்தோடு ஏற்படும் உறவு, கணபதியைக் காப்பாற் றும் என நம்பி கண்ணீரைத் துடைத்துக் கொண்டோம். துடைத்த கையை எடுக்க வில்லை. தூக்குமேடை கணபதியைத் தின்று ஏப்பமிட்ட சப்தம் நமக்கு கேட்டு விட்டது'’என்று அந்தக் கட்டுரையில் எழுதியவர் கலைஞர். தொழிலாளர் உரிமைகளுக்காக பாடுபட்ட கணபதி யையே மரண தண்டனையிலிருந்து மீட்க முடியவில்லை. போதைப்பொருள் கடத்தலில் குற்றம்சாட்டப்பட்ட தங்கராஜ் சுப்பையாவுக்கு யார் குரல் கொடுப்பா?
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
கர்நாடகாவில் அண்ணாமலை கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது குறித்து?
அந்த மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கு எதிரான இனரீதியான எதிர்ப்பு அண்மைக் காலமாக சற்று அடங்கியிருந்தது. ஒரு காலத்தில் காவிரி விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு வாட்டாள் நாகராஜ் போன்ற கன்னட அமைப்பின் தலைவர்கள் அங்குள்ள தமிழர் களுக்கு எதிராக நிற்பார்கள். ஆட்சியாளர்களும் கண்டும், காணாமல் இருப்பார்கள். அந்த அமைப்பினர் தற்போது அரசியலில் பெரிய செல்வாக்கில் இல்லை. கர்நாடக அரசியல் களமும் மாறியிருக்கிறது. கர்நாடகாவில் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணியாற்றி, தன்னைப் பெருமைமிகு கர்நாடகக்காரன் என அறிவித்துக்கொண்ட அண்ணாமலை, இப்போது தமிழ்நாட்டின் பா.ஜ.க. தலைவராகவும், கர்நாடகத் தேர்தல் பொறுப்பாளராகவும் இருக்கிறார். தமிழர் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட, அதை கர்நாடக பா.ஜ.க. தலைவர் ஈஸ்வரப்பா நிறுத்தச் சொன்னதுடன், கன்னட கீதத்தை ஒலிக்கச் செய்தார். அண்ணாமலை எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் நின்றார். பின்னர் தமிழ்நாட்டு நிருபர்கள் அது பற்றிக் கேட்டபோது, தமிழ்த்தாய் வாழ்த்து மெட்டு சரியில்லை என்று வெட்கமின்றிப் பொய் சொன்னார். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு மெட்டமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். அரை நூற்றாண்டு காலமாக அதுதான் பாடப்பட்டு வருகிறது. அண்ணாமலைக்கு கன்னட அரசியல்வாதிகளின் உணர்வு என்ன என்பது தெரியும். அங்கே தன்னை செல்வாக்கான ஆளாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதால் ஓட்டுக் காக கர்நாடகத் தமிழர்களைப் பகடைக்காய்களாக்கி, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை உண்டாக்கச் செய்திருக்கிறார்.