கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு-77
அ.தி.மு.க. அரசியலில் ஆரம்பம் முதல் டி.டி.வி., அடுத்து சசிகலா, அடுத்து ஓ.பி.எஸ். ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கி, யாருடைய தலையீட்டுக்கும் அடி பணியாமல் இ.பி.எஸ். அ.தி.மு.க.வை தன்வசப் படுத்திவிட்டாரே... அவர் அரசியல் சாணக்கியர்தானே?
அரசியலில் சாணக்கியத்தனம் என்பது குழி பறிப்பது. அதை இ.பி.எஸ். சரியாக செய்து, போட்டியாளர்களை வீழ வைத்து, தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார்.
கி.சோழராஜன், எல்.ஆர்.பாளையம் -புதுச்சேரி
வரும் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகத்தில் கலைஞர் குறித்த பாடம் இடம்பெறப் போகிறதாமே, அது பற்றி...
மாணவர்களுக்கான புத்தகங்களில் தலைவர்கள் பற்றிய பாடம், இந்திய அரசியலமைப்பு, தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக, முதல்வராக ஆனவர்கள் பற்றிய விவரங்கள் ஒரு காலத்தில் இருந்தன. பின்னர், ஆட்சியாளர்களின் அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக புத்தகங்களில் இருந்து ஒரு சில பாடங்கள் நீக்கப்பட்டன. செம்மொழி மைய நோக்குப் பாடல் அச்சிடப்பட்டிருந்த புத்தகங்களில் பச்சை ஸ்டிக்கர் போட்டு ஒட்டும் வேலையை ஆசிரியர்கள் பார்க்க வேண்டியிருந்தது. பாடப்புத்தகத்தில் ஒருவரைப் பற்றிய வரலாறு இடம்பெறும்போது அதைப் படிக்கும் மாணவர்கள் நெடுங்காலத்துக்கு அதனை நினைவு வைத்திருப்பார்கள். விவரம் தெரியும்போது அது குறித்து விவாதிப்பார்கள். அந்த வகையில் கலைஞரின் தமிழ்த் தொண்டு பற்றி 9ஆம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் இடம்பெறுவது மிகவும் பொருத்தமானதுதான்.
எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் மட்டுமே நாட்டைக் காப்பாற்ற முடியும் என்கிறாரே ஸ்டாலின்?
தி.மு.க. வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மட்டுமல்ல, ஸ்டாலின் முன்னெடுத்திருக்கும் அகில இந்திய அளவிலான சமூகநீதிக் கோட்பாட்டுக்குள் பல மாநிலக் கட்சிகளையும் இணைத்து, காங்கிரசையும் உடன்படச் செய்தாக வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.க.வுக்கு வலுவான போட்டி இருந்தால் மட்டுமே அவர் நினைப்பது போல நாட்டைக் காப்பாற்ற முடியும்.
டி.ஜெயசிங், கோயம்புத்தூர்
எதிர்க்கட்சிகள் ஓன்றிணைவதை பொறுக்காத பா.ஜ.க. உங்களில் யார் பிரதமர் என்று கேள்வியை எழுப்பியுள்ளதே?
தேசிய முன்னணி தொடங்கப்பட்டபோது காங்கிரஸ் கேட்ட கேள்வி இது. தேசிய முன்னணிக் குள்ளும் தேவிலால், சந்திர சேகர் என பிரதமர் பதவி மீது குறி வைத்து தலைவர் களுக்கிடையே போட்டி நிலவியது. ஆனால், வலிமையான காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டு, தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்த போது ஒட்டுமொத்த கூட்டணியும் வி.பி.சிங்கை பிரதமராக்கியது. 1977ல் இந்திராகாந்தியை வீழ்த்தி ஜனதா வெற்றி பெற்ற போதும் இதுபோல யார் பிரதமர் என்ற கேள்வியை காங்கிரஸ் வைத்தது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார். தேவகவுடா, மன்மோகன்சிங் பிரதமராக வருவார்கள் என்றா மக்கள் வாக்களித்தார்கள். ஆட்சியை மாற்ற வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டால் அவர்கள் அதற்கேற்ப வாக்களித்துவிடுவார்கள்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனியார் நிறுவனங்களின் வேலை நேரத்தை மாற்ற அவசியம், அவசரம் என்ன?
வெளிநாட்டுத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மின்னணு, கணிணி, தகவல் தொழில்நுட்பம், தோல் அல்லாத காலணி தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்த 12 மணி நேர வேலை, 3 நாள் விடுமுறை என்ற சட்ட முன்வடிவு அவசரமாக நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஆதரித்தது. தோழமைக் கட்சிகளான கம்யூனிஸ்ட்டுகள், விடுதலை சிறுத்தைகள், காங்கிரசார் கடுமையாக எதிர்த்தனர். தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச.வும் தன்னுடைய எதிர்ப்பை அரசுடனான தொழிற்சங்கங்களின் சந்திப்பின்போது பதிவு செய்தது. குறிப்பிட்ட நிறுவனங்களுக்குத்தான் இந்த 12 மணி நேர வேலை என்று வரையறுக்கப்பட்டாலும் அது நாளடைவில் அனைத்து முதலாளிகளுக்கும் சாதகமாகிவிடும் என்ற நியாயக் குரலுக்கு -உரிமைக்குரலுக்கு செவிமடுத்து, நிறைவேற்றப் பட்ட மசோதாவின் செயல்பாட்டை நிறுத்தி உத்தரவிட்டிருக்கிறார் பாட்டாளி இயக்கத்தின் தலைவரான ஸ்டாலினின் பெயர் கொண்ட முதல்வர்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
அன்னா ஹசாரே என்ன ஆனார்? அடுத்த கைது கெஜ்ரிவால் என்று கூறப்படுகிறதே
எல்லா ஆட்சியிலும் ஊழல் தொடர்கதைதான். ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்தபோது, ஊழலுக்காக டெல்லியில் உண்ணாவிரதம் என்ற பெயரில் படுக்கை போட்ட அன்னா ஹசாரே, பா.ஜ.க. ஆட்சியின் ஊழல்கள் பற்றி வாய் திறக் காமல் வீட்டி லேயே படுத்து விட்டார். அன்னா ஹசாரேவின் சீடராக இருந்து அரசியல் கட்சி ஆரம்பித்த கெஜ்ரிவால் ஒரு டீசன்ட் அரசியல் வாதியாக இமேஜை வளர்த்து வந்தார். அரசிய லுக்கு வந்தபிறகு டீசன்ட் டாவது, ஜென்டில்மேனா வது என்று அவர் மீதும் அவர் ஆட்சி மீதும் ஊழல் சேற்றை வீசி, அமலாக்கத் துறையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது