எம்.கல்யாணசுந்தரம், கும்பகோணம்
அலெக்சாண்டர்-நெப்போலியனுக்குப் பிறகு "மாவீரன்' பட்டம் ஹெச்.ராஜாவுக்குத்தான் பொருந்துமா?
அரசியல்வாதிகளில் பல மாவீரன்கள் வந்து போய்விட்டார்கள். ஹெச்.ராஜா மாவீரன் அல்ல, அவர் என்ன வீரன் என்பதை நீதிமன்றத்தை நோக்கி அவர் சொன்ன வார்த்தையுடன் பொருத்திப் பார்க்கவும்.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரிடையே பனிப்போர் நிலவுவது உண்மையா?
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் முடிந்து வெளியே வந்த ஓ.பி.எஸ்., "மூத்த அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்' என, தன் அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்தார். இப்போது தி.மு.க.-காங்கிரசுக்கு எதிரான பொதுக்கூட்டத்தில், ‘"அ.தி.மு.க.வில் மகன்களுக்கு கட்சிப் பதவி கிடையாது'’ என ஓ.பி.எஸ்.ஸை மறைமுகமாகத் தாக்கியிருக்கிறார் இ.பி.எஸ். இது பனிப்போரா, பதவிப்போரா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
தமிழறிஞர் கி.த.பச்சையப்பனின் செயலாற்றல் பற்றி?
அண்மையில் ஒரு வழக்கிற்காக நீதிமன்றம் சென்ற தமிழறிஞர் பச்சையப்பன் அந்த வளாகத்திலேயே மாரடைப்பால் இறந்தார். தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த களம் கண்டவர். தமிழாசிரியர்களின் உரிமைக்குப் பாடுபட்டவர். பிற மொழிக் கலப்பு "பிரச்சாரம்' நிறைந்திருந்த நிலையில், தூய தமிழ்ச்சொற்களை இதழியல் துறையினருக்கு ‘"பரப்புரை'’ செய்து, கடைசி மூச்சுவரை தமிழ்த் தொண்டாற்றியவர்.
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
ஒரு திருமணத்தில் மொய்க்கு பதில் பெட்ரோல் கேன் வழங்கப்பட்டிருக்கிறதே?
இன்னொரு திருமணத்தில் கேஸ் சிலிண்டரைக் கொடுத்திருக்கிறார்கள். மோடி ஆட்சியில் வாழ்க்கையை எதிர்கொள்வது எத்தனை சிரமமாக இருக்கிறது என்கிற வயிற்றெரிச்சலை, வாழ்த்தும் நேரத்தில் நேரடியாக வெளிப்படுத்தாமல் மொய் மூலம் மெய்ப்பித்திருக்கிறார்கள்.
சாரங்கன், கும்பகோணம்
பேச்சுவார்த்தையை ரத்து செய்ததற்காக இந்திய பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்திருக்கிறாரே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்?
இரு நாட்டு ஆட்சியாளர்களும் பரஸ்பர பகைமை கொள்வதையே அரசியல் லாபமாகக் கையாள்வது வழக்கமாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை பாகிஸ்தானுக்குப் போகச்சொல்கிறார்கள் மோடி கட்சியினர். பாகிஸ்தானோ, பயங்கரவாதத்திற்கு பக்கபலமாக நின்று, காஷ்மீரில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த போலீஸாரையே கடத்திக் கொன்றுபோடுகிறது. அமைதியும் இணக்கமும் மனதில் இல்லாவிட்டால், பேச்சுவார்த்தை என்பது உதட்டுச் சாயம்போல கரைந்து போய்விடும்.
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
நன்றி, நேர்மை, தர்மம் இவைகளுக்கு இன்றைய அரசியலில் இடமே இல்லையா?
யுத்தம் -வியூகம் -வெற்றி இவற்றிற்காக எதையும் செய்பவர்களுக்குத்தான் அரசியலில் எப்போதுமே இடம் உண்டு; வேத காலம் முதல் தேர்தல் களம்வரை.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
"எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியிருக்காவிட்டால் அண்ணா பெயரே யாருக்கும் தெரிந்திருக்காது' என செல்லூர் ராஜு பேசியிருக்கிறாரே?
பெரியாரும் அண்ணாவும் இல்லாவிட்டால் எம்.ஜி.ஆரே அரசியல் தலைவராகியிருக்க முடியாது. ஜெயலலிதா தொடங்கி செல்லூர் ராஜுவரை ஒருத்தருக்கும் அரசியலில் அட்ரஸே இருந்திருக்காது.
_______________
ஆன்மிக அரசியல்
சுந்தரமூர்த்தி, திருவெண்ணெய்நல்லூர்
இஸ்லாம்-கிறிஸ்தவ மதங்களை ஆதரிப்பதும் இந்து மதத்தை எதிர்ப்பதும்தான் பகுத்தறிவா?
பகுத்தறிவு என்பது எந்த ஒரு மதத்திற்கும் ஆதரவாக நிற்பதல்ல. மதங்களின் உண்மை நோக்கத்தையும் அதன் செயல்பாட்டு முறையையும் பகுத்தறிவதாகும். இந்து என்ற சொல் குறித்து அண்ணல் அம்பேத்கர் தொடங்கி பலரும் ஆய்வுசெய்து கருத்துகளை வெளியிட்டுள்ளனர். கடவுள் நம்பிக்கை கொண்டவரும் சைவ சித்தாந்தவாதியும் சட்டப்பேரறிஞருமான மறைந்த கா.சுப்பிரமணியம் என்கிற கா.சு.பிள்ளை பின்வருமாறு கூறியிருக்கிறார்:
“""ஒரு சமயத்திற்குப் பெயர் அதன் கடவுளை வைத்தாதல், தலைமையாசிரியரை (சமயத் தலைவர்) வைத்தாதல், அருள்நூலை வைத்தாதல் எழுவது முறை. சைவம், வைணவம் எனும் சமயப் பெயர்கள் அவ்வச் சமயக் கடவுட் பெயரான் வந்தனவாம். கிறிஸ்தவ மதமும் மகம்மதிய மதமும் அவ்வச் சமயத் தலைவரது பெயரால் வந்துள்ளன. புத்தமும், ஆருகதமுங்கூட அவ்வாறேயாம். இந்து என்ற சொல்லோ மேற்குறித்த எவ்வாற்றானும் வந்ததாகத் தோன்றவில்லை. இந்திய நாட்டில் சிந்து நதிக்கரையில் உள்ளவர்களைக் குறிக்கும் "ஹிந்து' என்ற பாரசீகச் சொல்லை, கிரேக்கர் ‘"இந்து'’ என வழங்க... அவர் வழக்கைப் பின்பற்றிய மேலைத் தேசத்தார் யாவரும் இந்நாட்டில் உள்ளாரை இந்துக்கள் எனவும், இந்நாட்டை "இந்தியா' எனவும் வழங்கலாயினர். இந்து எனும் இச்சொல் இப்பொருளில் ஆரியம், பண்டைத்தமிழ் என்னும் இரு மொழி நூல்களிலும் கிடையாது. சைவ சித்தாந்தமும், ஸ்மார்த்த வேதாந்தமும், வைணவமும் ஆகியவற்றுள் ஒன்றிற்கும் பிறிதொன்றிற்கும் உள்ள வேறுபாடு கிறிஸ்தவ மதத்திற்கும் மகமதிய மதத்திற்கும் உள்ள வேறுபாட்டினும் மிகவும் அதிகமாம். மத்துவ சமயம் வைணவத்திற் கிளைத்தது. அவ்வாறே இலிங்காயதமும் சைவத்தின் கிளை நெறிகளில் தோன்றியதொன்றாம். இந்து மதம் என்றொரு சமயம் உண்மையில் கிடையாது.''’’