நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

தூக்குத் தண்டனைக்கு பதிலாக வலி இல்லாத மரண தண்டனை விதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு குறித்து?

அரசாங்கத்தின் சட்டப்பூர்வமான கொலையான மரண தண்டனை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக நிறைவேற்றப்படுகிறது. தூக்கில் இட்டுக் கொல்வது, துப்பாக்கியால் சுட்டுக்கொல்வது, விஷ ஊசி போட்டு சாகடிப்பது, தலையைத் துண் டாக்குவது, கல்லால் அடித்துக் கொல்வது என பல விதங்களில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இவற்றில் பல நாடுகளும் பின்பற்றுகிற முறை என்பது தூக்குத் தண்டனைதான். இந்தியாவிலும் அந்த நடைமுறைதான் உள்ளது. பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் கட்டபொம்மன், மருது சகோதரர்கள் தொடங்கி பகத்சிங், ராஜகுரு, சுக தேவ் எனப் பலரும் தூக்கிலிட்டுக் கொல்லப் பட்டனர். சுதந்திர இந்தியாவில் கோட்சே, ஆட்டோ சங்கர் என தூக்கிலிடப்பட்டவர் கள் பட்டியல் நிறைய உள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இருந்த பூட்டோ, ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன் ஆகியோர் ஆட்சி மாற்றத்தின் காரணமாக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தூக்குத் தண்டனையை எதிர்கொண்டபோது உலகளாவிய பரபரப்பு ஏற்பட்டது. தூக்குத் தண்டனையைவிட வலி குறைவான மரண தண்டனை எது என்பதை அனுபவித்துப் பார்த்து சொல்ல முடியாது. காட்டுமிராண்டிகள் காலத்திலிருந்து நாகரிக உலகத்தை நோக்கி நகர்ந்து, இன்று தொழில்நுட்ப யுகமாக மனிதகுலம் மாறியிருக்கிறது. இதில் மரண தண்டனையை எப்படி நிறைவேற்றுவது என்பதைவிட, மரண தண்டனைக்கு மாற்றான கடுமையான தண்டனை என்ன என்பது பற்றி ஆலோசிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

ஜெ. கிருஷ்ணதேவு, புதுச்சேரி

Advertisment

நான் இல்லை என்றால் மு.க. ஸ்டாலின், முதலமைச்சராகியிருக்க முடியாது என்று சீமான் பேசியிருப்பது பற்றி...?

அதாவது, நாம் தமிழர் கட்சி கடந்த சட்ட மன்றத் தேர்தலில் வாங்கிய வாக்கு சதவீதத்தால் தான், அ.தி.மு.க. ஆட்சி வரமுடியாமல் போய், தி.மு.க. ஆளுங்கட்சியாகி, மு.க.ஸ்டாலின் முத லமைச்சராகிவிட்டார் என்பது சீமான் கணக்கு. நாம் தமிழர் கட்சி போட்டியிடாமல் இருந்திருந்தால் அந்த வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு விழுந்திருக்கும் என்று சுற்றி வளைத்து சொல்கிறார் சீமான். இதைத் தான், சீமான் போட்டியிடுவது தன்னுடைய ஆட் சிக்காக அல்ல.. ஓட்டுகளைப் பிரிக்க என்று நேரடி யாகச் சொல்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

ச. இராமதாசு சடையாண்டி, வானூர் -விழுப்புரம்

Advertisment

"ராகுல் காந்திதான் எதிர்க்கட்சியின் முகம் என்றால், மோடியை வீழ்த்த முடியாது' என்ற மம்தா பானர்ஜியின் கருத்து பற்றி...?

mavalianswers

மோடியா லேடியா என்று 2014 நாடாளு மன்றத் தேர்தலில் ஜெயலலிதா கேட்டபோது, தமிழ்நாடு புல்லரித்தது. மோடிக்கு சவால் விடுகிறார் என்று பாராட்டினார்கள். உண்மையில், மோடி தலைமையிலான பா.ஜ.க. செய்யவேண்டிய இந்துத்வா வேலைகளை தமிழ்நாட்டில் வெளிப்படையாகவே செய்தவர் ஜெயலலிதா. அதாவது, இந்த லேடி இருக்கும்போது எதற்காக மோடி என்ற தொனி ஜெயலலிதாவிடமிருந்து வெளிப்பட்டது. 2014ல் தமிழ்நாட்டிலிருந்து ஜெயலலிதா. 2024ல் மேற்குவங்கத்திலிருந்து மம்தா பானர்ஜியாக இருக்கலாம்.

தே.அண்ணாதுரை, கம்பம் புதுப்பட்டி -தேனி

தமிழக பட்ஜெட்டை தியாகராஜன் தமிழில் திக்கித் திக்கிப் படித்து நல்ல திட்டங்கள் கூட தெரியாமல் போய்விட்டதே?

ஒரு பட்ஜெட்டை எப்படி ஒருவர் படிக்கிறார் என்பதில் அந்தத் திட்டங்களின் சிறப்பு இல்லை. அந்தத் திட்டங்கள் எந்தளவு மக்களுக்குப் பலன் தருகிறது என்பதைப் பொறுத்தே அதன் சிறப்பு அமையும். அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்தவரான நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் தமிழ் உச்சரிப்பில் சிக்கல் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டு நிதி நிலைமை குறித்த பல சிக்கல்களுக்கு அவரிடம் தீர்வு இருக்கிறது. அதை அவர் தாக்கல் செய்த பட்ஜெட் வெளிப்படுத்துகிறது.

வாசுதேவன், பெங்களூரு

ஆபரேஷன் தியேட்டர், சினிமா தியேட்டர் வித்தியாசம்..!

இரண்டிலுமே திரை உண்டு. ஒன்று வெண்திரை. மற்றொன்று கணினித் திரை. இரண்டு இடத்திலுமே கொடுக்கிற காசுக்கு தகுந்த பலன் இருக்கிறதா என்பதைத்தான் எதிர்பார்ப்போம். சினிமா தியேட்டருக்கு சென்றால் நாம் படத்தைக் கவனிப்போம். ஆபரேஷன் தியேட்டருக்கு சென்றால் மருத்துவர்கள் நம்மை கவனிப்பார்கள். இரண்டு இடத்திலிருந்தும் வந்த பிறகு, “பொழைச்சிட்டோம்”என்று சொல்பவர்கள் நிறைய பேர் உண்டு.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

மக்கள் மகிழ்ச்சியாக வாழத் தகுந்த நாடுகள் பட்டியலில் தொடர்ந்து 4-வது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளதே... ஏன் இந்தியா பெற முடியாதா!?

பின்லாந்து மக்கள் தாங்கள் செய்ய வேண்டிய வேலைகளை செய்கிறார்கள். தங்கள் உறவுகள் நட்புகளுடன் இனிமையாகப் பழகுகிறார்கள். கல்வி, சுகாதாரம், உணவு, உடை, வீடு எல்லாவற்றுக்கும் அந்நாட்டு அரசின் உத்தரவாதம் இருக்கிறது. பின்லாந்து மக்களில் இறைநம்பிக்கை உள்ளவர்கள் 60% பேர். நாத்திகர்கள் 40% பேர். மனிதம் 100%

டி.ஜெயசிங், கோயம்புத்தூர்

அரசியல் அஸ்தமனம் என்றால் என்னவென்று கூறுங்களேன்?

2024 தேர்தல் முடிவில் தெரியும்.