திராதி, துடியலூர் கோவை

டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு, 1076-க்கு போன் செய்தால் 40 சேவைகளை வீட்டிற்கே கொண்டுவந்து தருகிறது. தமிழகத்தில் இது மாதிரி எப்போது நடக்கும்?

தமிழ்நாட்டில் நடக்கும் அ.தி.மு.க. ஆட்சியை 108-க்கு போன் செய்து ஆம்புலன்ஸில் ஏற்றி அவசர அறுவை சிகிச்சைக்குக் கொண்டுபோன பிறகு.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

Advertisment

"வாராக்கடன் பிரச்சினைக்கு முந்தைய மன்மோகன்சிங் அரசுதான் காரணம்' என்கிறாரே பிரதமர் மோடி?

வங்கிகளை நாட்டுடைமையாக்கிப் பலருக்கும் கடன்தர வழிசெய்த இந்திராகாந்தி அரசுதான் காரணம் என்று சொல்லாமல் இருந்தவரை மகிழ்ச்சி அடையுங்கள். செய்யாத சாதனைகளை தன்னுடைய ஆட்சிக்குரியதாகவும், செய்யத் தவறிய நடவடிக்கைகளை முந்தைய ஆட்சிக்குரியதாகவும் வெளிப்படுத்துவது மோடி ஆட்சியின் நான்கரை ஆண்டுகால நடைமுறை.

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6

Advertisment

முதலாளித்துவ சமூக அமைப்பில் சோசலிச அரசை ஏற்படுத்தாமல் சோசலிச சமூகத்தை ஏற்படுத்த முடியுமா?

முடியவே முடியாது. இருந்தாலும் அம்பானி-அதானிகளிடம் இதுபற்றி ஒரு வார்த்தை கேட்டுவிட்டு நமது ஆட்சியாளர்கள் முடிவு செய்வார்கள்.

nambirajan

நித்திலா, தேவதானப்பட்டி

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து இத்தனை ஆண்டுகாலம் கழித்து விடுவிக்கப்பட்டிருக்கிறாரே, அவருடைய மனக்காயங்களுக்கு சட்டம் தரக்கூடிய மருந்து என்ன?

கிரியோஜெனிக் விமான இயந்திர தொழில்நுட்பத்தை பிற நாடுகளுக்கு விலைக்கு விற்றார் என்பதுதான் விஞ்ஞானி நம்பி நாராயணன் மீதான குற்றச்சாட்டு. இது தொடர்பாக மரியம் ரஷீதா, ஃபாசூயா ஹசன் ஆகிய இரு பெண்களின் பெயர்களும் இணைக்கப்பட்டன. இஸ்ரோவின் இன்னும் சில ஆய்வாளர்களும் குற்றம்சாட்டப்பட்டனர். கேரள மாநில அரசியலின் விளையாட்டும் இதில் அடங்கியிருந்தது. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, குற்றச்சாட்டுகள் பொய்யானவை என நிரூபணமாகி, பழிச் சொல்லிலிருந்து விடுபட்டிருக்கிறார் நம்பி நாராயணன். அவருக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டதோடு, இந்த வழக்கிற்கான மூலகாரணம் குறித்து விசாரிக்க தனி கமிட்டியும் அமைத்திருக்கிறது உச்சநீதிமன்றம். கைது, சிறை, விசாரணை என நெருக்கடிக்குள்ளான காலங்களில் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறார். அவருடைய மகளோ, "நீங்கள் இறந்துவிட்டால், குற்றச்சாட்டு உண்மை என்ற அவப்பெயருடனேயே தலைமுறை தலைமுறையாக நாங்கள் இழிவுபடுத்தப்படுவோம். உண்மை வெல்லும்வரை உயிருடன் இருங்கள்' என ஊக்கம் தந்தது முக்கியமானது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் உடைமைகளையும், உறவுகளையும் இழக்க நேரிட்டது. இந்தியாவில் இதுபோல பல வழக்குகள் உண்டு. குற்றச்சாட்டுப் பொய் என்றால், அதன்பேரில் அனுபவித்த கொடுமைகளுக்குச் சட்டம் சரியான சிகிச்சை அளிப்பதில்லை. நக்கீரன் ஆசிரியர் மீது போடப்பட்ட பொய் "பொடா' வழக்குபோல!

bookfair

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

தமிழகத்தில் பரவலாக நடத்தப்படும் புத்தக விற்பனை விழாக்கள் சொல்லும் செய்தி என்ன?

அறிவுத் தேன் பருக ஆயிரமாயிரம் தேனீக்கள் ஆர்வமாக இருக்கின்றன. ஆனால், அவை பூக்களை நோக்கி வருவதைவிட, தேன் சுமந்த புத்தகப் பூக்கள் வாசகத் தேனீக்கள் இருக்குமிடம் நோக்கியும் இணையம் வழியாகவும் சென்று சேரவேண்டும் என்பதைத்தான்.

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

புல்லட் நாகராஜை பிடிக்க முடிந்த போலீசால், எஸ்.வீ.சேகரை பிடிக்க முடியவில்லையே?

"எங்க லிமிட்டுக்குட்பட்ட எளிய ரவுடிகள் மேலேதான் கை வைக்க முடிகிறது' என்கிறார்கள் போலீசார்.

ஆன்மிக அரசியல்

வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி-17

கண்கண்ட தெய்வமாக காலங்காலமாக வழிபட்டு வந்த விக்கிரகங்களை களவாடி, டூப்ளிகேட் சிலைகளை வைத்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், தர்மகர்த்தாக்கள், குருக்கள் எல்லாரும் நன்றாகத்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குத் தண்டனையே கிடையாதா?

கடவுள் பல வடிவங்களில் கண்களுக்குத் தெரிவார் என்பது ஆன்மிக நம்பிக்கை. பக்தர்களுக்கு தெய்வ விக்கிரகங்களாகத் தெரிபவை, நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ளோருக்கு மார்க்கெட்டில் மதிப்புமிக்க சிலைகளாகத் தெரிந்திருக்கின்றன. தமிழ்நாட்டுக் கோவில் சிலைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல மதிப்பு இருப்பதால், உள்ளூர் பூசை -உற்சவம் -கோவில் நிர்வாகம் இவற்றில் கிடைக்கின்ற வருமானத்தைவிட பலப்பல மடங்கு அதிகமாக லாபம் பார்க்கலாம் என்பதால்தான் அரசியல்வாதிகள்+அதிகாரிகள்+தர்மகர்த்தாக்கள்+அர்ச்சகர்கள் உள்ளிட்ட பலரும் சர்வதேச வியாபாரிகளுடனும் இடைத்தரகர்களுடனும் கூட்டு சேர்ந்து பழங்காலச் சிலைகளைக் கடத்திவிட்டு, அதேபோன்ற டூப்ளிகேட்டை வைத்து பக்தர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலான திருட்டுப்பாதை.

அர்ச்சகர்கள் வெறும் இயந்திரங்களைப்போல செயல்படுகிறார்கள் என நீதிமன்றம் கண்டிக்கிறது. அது உண்மைதான். அர்ச்சகர்கள் மட்டுமின்றி, அறநிலையத்துறையைச் சார்ந்தவர்களும் அதேபோல செயல்படுவதும், லாபநோக்கம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பதும், கோவில் கொள்ளைகளுக்கு வழி வகுக்கின்றன. சட்டம் சாவகாசமாகச் செயல்படுகிறது. இது எச்.ராஜா போன்ற மதவெறி சித்தாந்தவாதிகளுக்கு வாய்ப்பாகி, வாய்க்கொழுப்புடன் பேச வைக்கிறது. "நெஞ்சகமே கோவில் -நினைவே சுகந்தம் -அன்பே மஞ்சன நீர் -பூசை கொள்ள வாராய் பராபரமே' என்கிறது தமிழ் வழிபாடு. அதில் பக்தர்களுக்குத் திருப்தி கிடைப்பதில்லை. நிம்மதி தேடி கோயில்களுக்குச் செல்கிறார்கள். கூட்டம் அதிகமுள்ள இடங்களை வணிகத்தலமாக்குவது சந்தைப் பொருளாதாரம். இந்தியாவின் மிகப்பெரிய சந்தையாகிவிட்டன கோயில்களும் அவற்றில் உள்ள சிலைகளும். சட்டத்தின் கரங்கள் இறுகாவிட்டால், திருட்டு வணிகமும் வன்முறை அரசியலுமே பெருகும்.