தா.விநாயகம், ராணிப்பேட்டை
2022-ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை "டைம்ஸ்' இதழ் தேர்ந்தெடுத்துள்ளதைப் பற்றி?
அடித்தவன் மீது கோபமும், அடிவாங்கி யவன் மீது இரக்கமும் ஏற்படுவது இயல்பு. ரஷ்யா அடித்தது. உக்ரைன் அடிவாங்கியது. 21ஆம் நூற்றாண்டில் உலகம் கண்ட இரு நாடுகளுக்கிடையிலான நேரடி உக்கிரப் போர் என்பது ரஷ்யா-உக்ரைன் போர். அதன் தாக்கமும் பாதிப் பும் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் இருந்தது. பல்லாயிரம் உயிர்கள் பறிகொடுக்கப்பட்டு, பெருமளவில் பொருளா தாரச் சேதமும் ஏற்பட்ட நிலையிலும், நாட்டு மக்க ளுக்கு நம்பிக்கை தந்து, அவர்களுடன் துணை நின்றவர் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி. அந்த அடிப்படையில் சிறந்த மனித ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார். உண்மையான சிறப்பு என்பது, கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்பதுதான். அதை அன்றே பாடிச் சென்றிருப்பவர் தமிழ்நாட்டில் பிறந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
"அ.தி.மு.க.வை ஆதரித்ததற்காக மக்களிடம் பாவமன்னிப்பு கேட்டுள்ளாரே... அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த கோவை செல்வராஜ்..?
தங்களுடைய நிலைப்பாட்டை நியாயப் படுத்துவதற்காக அரசியல்வாதிகள் இதுபோல மன்னிப்பு கேட்பது புதிதல்ல. "அம்மா இட்லி சாப்பிட்டார் என்று நாங்கள் சொன் னது பொய். நாங்கள் யாரும் மருத்துவ மனையில் அம்மாவைப் பார்க்கவில்லை. எங்களை மன்னித்துவிடுங்கள்' என்று ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு மன் னிப்பு கேட்டவர் அன்றைய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இப்போது மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்பதாகச் சொல்லும் கோவை செல்வராஜோ ஆரம்பத்தில் காங்கிரஸ் காரர். ராஜீவ் படுகொலைக்குப் பின் நடந்த தேர்தலில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.வாகி, சட்டமன்றத்திலேயே "ஜெ.காங்கிரஸ்' எனப் பெயர் பெறும் வகையில் அன்றைய ஆளுங் கட்சியான அ.தி.மு.க.வின் நேரடி ஆதரவாள ரானவர். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு சசிகலா, இ.பி.எஸ். என விசுவாசத்தைக் காட்டி, கடைசியில் ஓ.பி.எஸ். பக்கம் வந்தவர். அங்கே இப்போதைக்கு அரசியல் பருப்பு வேகாது என்பதால் ஆளுங்கட்சியான தி.மு.க. பக்கம் வந்திருக்கிறார். கோவை மண்டலத்தில் அ.தி.மு.க.வின் செல்வாக்கைத் தகர்க்க நினைக்கும் தி.மு.க. இவரைப் போன்றவர்களால் பலம் கிடைக்கும் என நம்புகிறது. கோவை செல்வ ராஜ் மக்களிடம் மன்னிப்பு கேட்டி ருக்கலாம். மக்கள் இவரைப் போன்றவர்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும், எத்தனை தொண்டர்கள் இவர் பின்னால் இருக்கிறார் கள் என்பதையும் தி.மு.க உணர்ந்தாக வேண்டும்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
கட்சி துவங்கிய பத்து ஆண்டுகளில் ஆம் ஆத்மி தேசிய கட்சியாக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து...?
இந்திய அரசியலின் தன்மை மாறி வருவதன் அறிகுறியைக் காட்டுகிறது. கார்ப்பரேட் உலக அரசியலில் எல்லாவித ஊழல்களையும் அனுமதித்துக்கொண்டே ஊழலுக்கு எதிராகப் பேசி மக்களை ஈர்ப்பது வழக்கமாகி விட்டது. காங்கிரசின் பலவீனமும், மாநிலக் கட்சிகளில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளும் ஊழல் குற்றச்சாட்டுகளையும், வாரிசு அரசியல் என்கிற விமர்சனத்தையும் முன்வைத்து புதிய அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கின்றன. அத னைப் பயன்படுத்திக் கொண்டு, தன்னை வளர்த் துள்ள கட்சி, ஆம் ஆத்மி. டெல்லியில் தன்னுடைய வெற்றிக்கொடியை நாட்டி, அதனை பஞ்சாபிலும் பறக்க விட்டு, இப்போது குஜராத்துக்குள் மெல்ல தலை காட்டியிருக்கிறது. பா.ஜ.க.வை விரும்பா தவர்களின் வாக்குகளை ஆம் ஆத்மி ஈர்க்கிறது. காங்கிரஸ்தான் பிரதான எதிர்க்கட்சி என்ற மனநிலையை மாற்ற நினைக்கும் பா.ஜ.க.வுக்கு ஆம் ஆத்மியின் வளர்ச்சி உதவுகிறது. இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் சமத்துவம், மதநல்லிணக்கம் போன்றவற்றில் ஆம் ஆத்மிக்கு பெரிய அக்கறை கிடையாது. மேலோட்டமான பொருளாதாரப் பார்வையுடன் வாக்குகளைக் கவரும் அரசியலே அதன் நோக்கமாக உள்ளது. இன்றைய நிலையில், மாற்றத்தைத் தேடும் வாக்காளர்களின் மனநிலைக்கு ஏற்ற கட்சியாக ஆம் ஆத்மி இருக்கிறது. குஜராத்தில் பா.ஜ.க. இந்துத்வா அரசியலை வைத்து தொடர்ந்து ஆட்சி செய்வதால், ஆம் ஆத்மி தலைவரான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், ரூபாய் நோட்டில் லட்சுமி படத்தை அடிக்க வேண்டும் என்றார். காங்கிரசும் அதன் தோழமைக் கட்சிகளும் வெற்றி பெறுவதைவிட ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் தனக்கு பாதகமில்லை என நினைக்கிறது பா.ஜ.க.
வாசுதேவன், பெங்களூரு
வங்கதேச கிரிக்கெட் அணியிடம் இரண்டாவது ஒருநாள் ஆட்டத்திலும் தோல்வியைத் தழுவிய இந்திய அணி கற்க வேண்டியவை ஏதாவது உண்டா?
விளையாட்டில் வெற்றி-தோல்வி சகஜம்தான். தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்தடுத்த வெற்றிகளை நோக்கிப் பயணிக்க வேண்டும். வங்க தேச அணி அந்தப் பாடத்தைப் புதிதாகக் கற்றிருக்கிறது. இந்திய அணி பழைய பாடங்களை மறந்துவிட்டது போலும்.