மு.ரா.பாலாஜி, கோலார்தங்கவயல்

மதுரையில் தமிழ்த்தாய்க்கு சிலை வைக்கும் திட்டம் என்ன ஆனது?

ஜெயலலிதா ஆட்சியில் 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் தமிழ்நாட்டு மக்கள் நெற்றியில் "111' போட்டதுபோல ஆனது. அந்த "111' தமிழ்த்தாய்க்கும் சேர்த்தே போடப்பட்டுள்ளது.

நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

Advertisment

தி.மு.க.வை உடைக்க முயன்ற ஈ.வெ.கி.சம்பத், எம்.ஜி.ஆர்., வைகோ போன்றவர்களுக்கும் மு.க.அழகிரிக்கும் என்ன வித்தியாசம்?

முதன் மூன்றும் தலைமையுடன் ஏற்பட்ட உரசல்களால் உருவான பிளவு. கடைசியோ, உடன்பிறப்புகளே பங்காளிகளாக மாறியதன் விளைவு. பங்காளிகளுக்குள் கண்கள் பனித்து -இதயம் இனிக்கும் சூழல் வருமா எனத் தெரியாததால் கட்சித் தொண்டர்கள் இம்முறை கவனமாகவே தலைமைப் பக்கம் நின்றுவிட்டார்கள்.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

Advertisment

மீண்டும் வாக்குச்சீட்டு முறையிலான தேர்தல் என்ற கோரிக்கை ஏற்புடையதுதானா?

134 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் வாக்குச்சீட்டு முறையில் மீண்டும் தேர்தல் என்றால், பலவித இடர்ப்பாடுகளை சந்திக்கத்தான் வேண்டும். அதே நேரத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து அரசியல்கட்சிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் சந்தேகக் கேள்விகளை எழுப்புகின்றனர். ஜனநாயகத்தில் பொதுமக்கள் கையில் உள்ள ஒரே அதிகாரம், வாக்குரிமை. அதன் நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாகும்போது, உரிய முறையில் சீர்படுத்தவேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. வாக்குச்சீட்டோ, வாக்கு இயந்திரமோ மக்களின் தீர்ப்பை மாற்றும் அதிகாரம் எவருக்கும் கிடையாது.

கதிர்தியாகு, விருதாசலம்

இனி தி.மு.க.வில் முடியாட்சிதானா?

தி.மு.க.வின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், வாரிசு அரசியல் என விமர்சிப்போரும், 50 ஆண்டுகாலமாக கட்சிக்கு உழைத்து படிப்படியாக மேலே வந்திருப்பது உள்கட்சி ஜனநாயகம் என ஆதரிப்போரும் உள்ளனர். உள்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையிலான அந்தப் படிப்படியான வாய்ப்பு கட்சிக்காக உழைக்கும் எல்லோருக்கும் கிடைக்கும்படி மு.க.ஸ்டாலின் செயல்பட்டால் முடியாட்சி என்ற விமர்சனத்திற்கு இடமில்லாத ஜனநாயக காற்று தடையின்றி வீசும்.

mavalianswers

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபல் ஆறு கேள்விகள் எழுப்பியுள்ளாரே?

மக்கள் ஒரேயொரு கேள்விதான் கேட்கின்றனர். "எங்களை நடுத்தெருவில் நிறுத்தியதால் கறுப்புப் பணத்தை ஒழிச்சிட்டீங்களா' என்று! அதற்கே பதில் இல்லாத மோடி அரசிடம், கபில்சிபல் ஆறு கேள்விகள் கேட்டாலும் ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் பதில் வராது.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டியிடமாட்டோம்' என்ற கமல் பேச்சு?

முதன்முதலாக இடைத்தேர்தலில் களமிறங்கி பலத்தைக் காட்ட இது திண்டுக்கல்லும் அல்ல, தான் எம்.ஜி.ஆரும் அல்ல என்பது கமலுக்கு நன்றாகவே தெரியும். தனது திரைவாழ்வில் ஒரு கட்டத்திற்குப் பிறகு, ரஜினி படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் தன் படங்கள் ரிலீசாவதைத் தவிர்த்தவர் கமல். அரசியலிலும் அதே கவனத்தைக் கையாள்கிறார்.

பி.மணி, குப்பம், ஆந்திரா

பூமிக்கு அடியில் பல வருடங்கள் இருக்கும் கரியின் பொறுமை வைரம்? மனிதனிடம் ஏன் அந்த பொறுமை இல்லை?

பிறக்கும்போதே வைரமே... தங்கமே எனக் கொஞ்சுகிறோம். பிறகு இறக்கும்வரை எதற்காக பொறுமை காக்க வண்டும், அவசரமாக அனுபவிப்பதே வாழ்க்கை என நினைத்துவிடுகிறார்கள்.

_______________

ஆன்மிக அரசியல்

தூயா, நெய்வேலி

தசரா விழா கோலாகலமாகக் கொண்டாடப்படும் கர்நாடக மாநிலம் மைசூருவில், மகிஷா தசரா என அதை மாற்றிக் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பது புதுவித ஆன்மிக அரசியலா?

புராணங்கள் அடிப்படையில் பண்டிகைகள் கொண்டாடப்படுவது இந்த மண்ணின் வழக்கமாக உள்ளது. அதே நேரத்தில், புராணங்கள் குறித்த மாறுபட்ட பார்வையும் மக்களிடம் உண்டு. டெல்லியில் ராமலீலா கொண்டாடப்படும் அதே நாளில் மத்தியபிரதேசம், ஜார்கண்ட், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் பழங்குடி மக்கள் வாழும் கிராமங்களில் ராவணனைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடுகிறார்கள். நரகாசுரனை கிருஷ்ணன் கொன்று ஒழித்ததை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் பண்டிகையாக தீபாவளி கோலாகலப்படுகிறது. ஆனால், அதனை திராவிட நரகாசுர திருவிழாவாக தெலங்கானா மாணவர்கள் கொண்டாடுகின்றனர். திருமாலின் 10 அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம்தான் விஸ்வரூபம் எடுத்து, தன் கால்களால் மாவலி எனும் மகாபலி சக்ரவர்த்தியின் தலையை பூமிக்குள் அழுத்திக் கொன்றது. அந்த மாவலி மன்னனைத்தான் கேரள மக்கள் ஓணம் திருவிழாவில் கொண்டாடுகிறார்கள். இப்படி மக்களின் பார்வையில் புராணங்கள் அலசப்பட்டு, அவர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கத்தில் பல பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். எருமைத் தலை கொண்ட மகிஷா என்ற அரசனை துர்க்கை வதம் செய்து அழித்ததைக் கொண்டாடும் விழாதான் தசரா. மைசூரு என்பதற்கு தமிழில் எருமையூர் என்றுதான் அர்த்தம். மகிஷா மன்னன் ஆண்ட மண்ணில், அவனைப் போற்றும் விழாவுக்குப் பதில், அவனைக் கொன்றதைக் கொண்டாடுவது எப்படி சரியாக இருக்கும் என மாற்றுக் கோணத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள் கன்னட முற்போக்கு சிந்தனையாளர்கள். தசராவை, மகிஷா தசராவாக மாற்றி, தங்கள் மன்னனுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பது ஆன்மிக அரசியல் அல்ல, பண்பாட்டு முழக்கம்.