பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை
இப்படி அதிரடியாகப் பேசும் அமைச்சர்களை ஜெயலலிதாவால் எப்படி அடக்கி வைக்க முடிந்தது?
அவர்களைவிட பல மடங்கு அதிரடியாகப் பேசியதால்தான்! இன்றைய விஞ்ஞானி அமைச்சர்களுக்கெல்லாம் விஞ்ஞானி, இரட்டை இலை சின்னத்தை பறக்கும் குதிரையின் விரிவாக்கப்பட்ட இறக்கை என கண்டறிந்த அந்த பெரிய விஞ்ஞானிதான்.
எஸ்.பூவேந்தஅரசு, பொன்நகர், சின்னதாராபுரம்
சினிமா கலைஞர்களுக்கு சமுதாய அந்தஸ்து அதிவேகமாகக் கிடைக்க காரணகர்த்தா எம்.ஜி.ஆரா, கலைஞரா?
"கலைவாணர்' என்.எஸ்.கிருஷ்ணன், "நடிகவேள்' எம்.ஆர்.ராதா போன்ற திராவிட இயக்க கலைஞர்களின் சுயமரியாதைமிக்க பங்கேற்பினால் "நடிகன்'’ எனச் சொல்லப்பட்டவர்கள் ‘"நடிகர்'’என்ற மரியாதையைப் பெற்றனர். அதன் தொடர்ச்சியாக கலைஞர், எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர். உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்களால் சினிமா கலைஞர்களுக்கு சமுதாயத்தில் மரியாதை கூடியது. அதற்கு அந்த துறைமூலம் கிடைத்த பணமும் புகழும் முக்கிய காரணமாகும்.
நித்திலா, தேவதானப்பட்டி
18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்கவேட்டை எப்படி?
வழக்கம்போல சீனா-ஜப்பான் நாடுகளின் பதக்க வேட்டையுடன் ஒப்பிடும்போது, இவ்வளவு பெரிய நாடான இந்தியாவின் அளவு கம்மிதான். ஆனாலும், விளையாட்டுத் துறை என்பது சவலைக்குழந்தையாக உள்ள நாட்டில்தான் ஹெபத்ட்லான் (7) போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார் மேற்குவங்கத்தில் ஏழைத் தொழிலாளிகளான பெற்றோருக்குப் பிறந்த ஸ்வப்னா. ஏற்கனவே சர்வதேச தடகளப் போட்டியில் அசத்திய அசாமின் ஹிமாதாஸ் 400 மீட்டர் ரிலே ஓட்டத்தில் இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கம் பெற காரணமாக இருந்தார். "தங்கல்' படத்தில் முன்னுதாரணமாகக் காட்டப்பட்ட மல்யுத்த வீராங்கனை ஜினேஷ் போகாத் தங்க வேட்டையில் வெற்றி பெற்றிருக்கிறார். தடை தாண்டி ஓடுவதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தருண் அய்யாசாமி வெள்ளிப் பதக்கத்தால் மின்னுகிறார். 800 மீட்டர் ஓட்டத்தில் மஞ்சித்சிங்கும், 1500 மீட்டர் ஓட்டத்தில் ஜின்சன் ஜான்சனும் தங்கமாக ஜொலிக்கிறார்கள். எதிர்பார்த்த சில போட்டிகளில் இந்தியா ஏமாற்றினாலும், இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் மானத்தைக் காப்பாற்றியுள்ளனர், பலவித அரசியல் விளையாட்டுகளை உள்ளடக்கிய நாட்டின் சார்பில் பங்கேற்ற வீரர்களும் வீராங்கனைகளும்.
ஜி.மகாலிங்கம், காவல்காரன்பாளையம்
"சிறையில் சூரிய வெளிச்சம் -காற்றோட்டத்துடன் தனி கழிவறை, டி.வி.வசதி எல்லாம் கொண்ட சொகுசுஅறை ரெடி' என்று லண்டன் நீதிமன்றத்தில் இந்தியாவின் சார்பில் வீடியோ சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாமே?
"சிறுநீர் கழிக்கக்கூட அனுமதிக்க மறுக்கிறார்கள்' என்கிறார் அநியாயமான சட்டங்களால் கைது செய்யப்பட்ட "மே 17' திருமுருகன். "சொகுசு அறையெல்லாம் ரெடிபண்ணிட்டோம்' என மல்லையாவை சிறைக்கு அழைக்க சிறப்புக் கம்பளம் விரிக்கப்படுகிறது. இந்தியாவில் சட்டம் எல்லோருக்கும் சமம் என்கிறார்கள் வெட்கமேயில்லாமல்.
எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
ஒருவழியாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி எண்ணி முடித்துவிட்டதே?
எண்ணி முடித்திருக்கலாம். ஆனால், கறுப்புப்பணத்தை ஒழிப்பதாக எண்ணி, ரூபாய் நோட்டுகளை ஒரே இரவில் செல்லாதவையாக்கிய அரசாங்கத்தின் முட்டாள்தனம் முடியவேயில்லையே!
ஆன்மிக அரசியல்
சாரங்கன், கும்பகோணம்
பேரூர் ஆதீனகர்த்தர் சாந்தலிங்க அடிகளார் இறந்ததற்கு இந்துத்வா அமைப்பினரும் கவலைப்படுகிறார்கள், தமிழுணர்வாளர்களும் வேதனைப்படுகிறார்கள். அவரது மரணம் இந்துமதத்திற்கு இழப்பா, தமிழுக்கு இழப்பா?
கோவையில் உள்ள பேரூர் ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார். சைவ சமய வழிபாட்டு முறையைக் கொண்டது இந்த ஆதீனம். தற்காலத்தில் சைவம்-வைணவம் உள்ளிட்ட பல பிரிவுகளும் இந்து மதம் என்றே கருதப்படுவதால், பேரூர் ஆதினத்தின் சமயப் பணிகள் இந்து மதத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் அமைந்தன. அதனால்தான் பேரூர் ஆதீனத்தின் மறைவுக்கு இந்துத்வா அமைப்புகள் இரங்கல் தெரிவிக்கின்றன. இந்துமதத்திற்குப் பயன்பட்ட பேரூர் ஆதீனத்தின் ஆன்மிகப்பணி, தமிழ் வழிபாட்டு முறைக்கும் பயன் அளித்தது. வடமொழி மந்திரங்களைத் தவிர்த்து, தமிழ் மந்திரங்களால் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியதில் பேரூர் ஆதீனத்தின் பங்கு முக்கியமானது. அதற்காக பிற ஆதீனங்கள், சமய சொற்பொழிவாளர்கள், தமிழுணர்வாளர்களுடன் இணைந்து தெய்வத் தமிழ் மாநாடுகளை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார் நடத்தியிருக்கிறார்.
கோயில் கருவறையில் மட்டுமல்ல, திருமணங்கள் நடைபெறும் மணவறையிலும் சமஸ்கிருத மந்திரங்களைத் தவிர்த்து, தமிழ் மந்திரங்களை ஒலிக்கச்செய்து, மணமக்களும் அவர் வீட்டாரும், திருமணத்திற்கு வந்திருக்கும் உறவினர்களும் நண்பர்களும் செவிகுளிர தமிழ் கேட்கும்படி செய்தவர் சாந்தலிங்க அடிகளார். இதற்காகவே பேரூர் ஆதீனத்தின் சார்பில் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. வழிபாட்டில்-வாழ்க்கை முறையில் தமிழ் ஒலிக்க வேண்டும் என்பதை ஆன்மிகப் பணியுடன் இரண்டறக் கலந்து மேற்கொண்ட பேரூர் ஆதீனத்தின் இறப்பு, சைவ நெறிக்கும் தமிழ்த் தொண்டுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பு. அவரால் பயிற்சி பெற்றவர்கள் அதனை ஈடு செய்தாக வேண்டும்.