பி.மணி, வெள்ளக்கோவில்
உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்கிற பழமொழி அரசியல் கட்சிகளுக்கோ அரசியல்வாதி களுக்கோ பொருந்தாமல் போவது ஏன்?
எல்லா இடங்களிலும் இது உண்டு. அரசியலில் அப்பட்டமாக வெளிப்பட்டுவிடுகிறது. அவ்வளவுதான்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
"ஆட்சிக்கு வந்த அடுத்த நொடி இந்தந்த அமைச்சர்கள் கம்பி எண்ணுவார்கள்' என்று சொன்ன ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ஒருவரைக் கூட உள்ளே வைக்கவில்லையே?
ஓடி ஒளிந்த ராஜேந்திரபாலாஜியையும், உள்ளாடை போடாமல் கிளம்பி வந்த ஜெயக்குமாரை யும் உள்ளே வைத்தது தி.மு.க அரசு. இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இதுதான் சட்ட நடவடிக்கை. எதிரிகள் எல்லாரையும் தூக்கி உள்ளே வைப்பது ஜனநாயகமல்ல. அது சர்வாதிகாரமாகவோ, எமர்ஜென்சியாகவோ இருக்க வேண்டும். சட்டரீதியான நடவடிக்கைகள் தாமத மாகத்தான் நடக்கும். அதுதான் இயல்பு. 1996ல் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கு போடப்பட்டது. 18 ஆண்டுகள் கழித்து 2014ல் அவர் குற்றவாளி எனத் தண்டிக்கப்பட்டார். வழக்கு வலுவாக இருந்தால் இரும்புப் பெண்மணி, இரும்பு ஆண்மணி எல்லாரும் கம்பி எண்ண வேண்டியதுதான். வெறும் பழிவாங்கும் நடவடிக்கை என்றால் ஜாமீனில் எளிதாக வந்துவிடுவார்கள்.
மு.முஹம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்
ஆயுதமேந்திய கலவர கும்பல்கள் அதிகார வர்க்கத்தின் ஆசியுடன் செயல்படுவதை பிரதமர் மோடியின் மவுனம் உறுதி செய்கிறது என்கின்றதே எதிர்க்கட்சிகளின் கூட்டறிக்கை?
பிரதமர் மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்ததை மறந்திருக்க முடியாது. குஜராத் ரயில் எரிப்பு கொடூரத் தைத் தொடர்ந்து, திட்டமிட்ட மத வன்முறை குஜராத்தில் நடத்தப்பட்டடது. முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்பட்டு, கொல்லப்பட்டனர். எரிக்கப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த குழந்தையைக் கொன்ற கொடூரமும் நடந்தது. காவிக் கொடியுடன் நடந்த இந்தக் கல வரத்தின்போதும் மவுனமாக இருந்தவர்தான் மோடி. இரண்டுநாள் அவர் மவுனமாக இருந்ததால், ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொல்வதற்கு அந்த மவுனமே சம்மதமாக ஆயிற்று. அன்று அவர் முதல்வர், இன்று அவர் பிரதமர். அவ்வளவுதான் வேறுபாடு.
மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி
டெல்லி அரசுப் பள்ளிகளின் தரத்திற்கு யார் காரணம்?
இந்தியாவின் தலைநகரப் பகுதி ஒரு தனி மாநிலமாக இருக்கும்போது ஒன்றிய அரசு, மாநில அரசு இரண்டு அரசுகளின் கவ னிப்பும் கூடுதலாக இருக்கும். சட்டம்-ஒழுங்கு உள்ளிட்டவை ஒன்றிய அரசின் கட்டுப்பாட் டில் இருப்பதால், வளர்ச்சித் திட்டங்களை மாநில அரசு முழுமையாக கவனம் செலுத்தி, செயல்படுத்த முடியும். அத்துடன், அரசு அதிகாரிகள், உயர் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்களின் வாழ்விடம் என்பதும் தரத்தின் மீது அக்கறை செலுத்த வைக்கிறது. அதைச் சரியாக உணர்ந்து செயல்படக் கூடிய வராக முதல்வர் கெஜ்ரிவால் இருக்கிறார்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
"தமிழ்நாடு மட்டும் தனிநாடாக இருந்தால், உலகில் 18-வது நாடாகவும், பொருளா தாரத்தில் வல்லரசு நாடாகவும் இருக்கும்'' என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் கூறினாராமே உண்மையா?
உலகளாவிய வளர்ச்சியையும் இந்திய மாநிலங்க ளின் நிலைமையையும் ஒப்பிட்டு ஆய்வு செய்த அமர்த்தியா சென், தமிழ்நாட்டின் சமூக நீதி மற்றும் சமூக நலத் திட்டங்களின் செயல்பாடு ஏற்படுத்தியுள்ள நன்மை களைக் குறிப்பிட்டு, இப்படி மதிப்பீடு செய்திருக்கிறார்.
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு-77
"கவர்னர் உயிருக்கு ஆபத்து.. தமிழக அரசு மீது. நடவடிக்கை. எடுங்கள்' என்று அ.தி.மு.க. ஜனாதிபதி, பிரதமர் இருவரிடமும் புகார் அளித்துள்ளது பற்றி?
ராஜாவை மிஞ்சும் ராஜவிசுவாசிகள். அப்படியே பழகிவிட்டார்கள்.
வாசுதேவன், பெங்களூரு
குஜராத் மாநிலம் சபர்மதியில் காந்தி ஆசிரமத்தில் பிரிட்டன் பிரதமர் ராட்டையில் நூல் நூற்றது?
நூல் நூற்றால் துணி நெய்யலாம். நெய்த துணியை என்ன செய்யலாம்? பிரிட்டன் பிரதமர் பார்வைக்குத் தெரியாதபடி குஜராத்தின் குடிசைப் பகுதியை துணி கட்டி மறைத்து வைக்கலாம். இதெல்லாம் காந்திக்கே தெரியாத ஐடியா. மோடி வகையறாக்களின் குஜராத் மாடல் இப்படிப்பட்டதுதான். அதையெல்லாம் அறியாத விருந்தினரான பிரிட்டன் பிரதமர் ராட்டை சுற்றியிருக்கிறார். பிரதமரோ நமது காதில் பூ சுற்றிக்கொண்டிருக்கிறார்.
கல்லுக்குட்டை லோகு, பெருங்குடி
இந்தியாவின் முதல் பத்து மெகா கோடீஸ்வரர்கள் நாட்டின் ஒட்டு மாத்த செல்வத்தில் 57 சதவிதத்தை குவித்து வைத்திருக்கிறார்கள் என்பது உண்மையா மாவலி?
பத்தில் இரண்டு பேர்தான் மகா கோடீஸ்வரர்கள். அதில் ஒருவர், இந்திய தேசியக் கொடியின் பின்னணியுடன் பிரிட்டன் பிரதமர் அருகில் நின்று போஸ் கொடுத்திருக்கிறார். அதானிகளும் அம்பானிகளும் வாழ்கிறார்கள். அதைப் பார்த்து நம்மை மகிழச் சொல்கிறார்கள் ஆட்சியாளர்கள்.
டி.ஜெய்சிங் கோயம்புத்தூர்
நான் அடிக்கிற மாதிரி அடிப்பேன் நீ அழுற மாதிரி அழு இது எந்த நிகழ்வுக்கு பொருந்தும்?
ஐ.பி.எல். போட்டிகளைப் பார்ப்பதில்லையா?