Skip to main content

மாவலி பதில்கள்!

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

தந்தை பெரியாரின் வீட்டில்கூட பூஜை அறை இருந்ததாமே?

ஆமாம்.. ஈரோட்டில் உள்ள அவரது பூர்வீக வீட்டில் பூஜை அறை மட்டுமா, அடிக்கடி பலவித பூஜை புனஸ் காரங்களும் நடத்தப்பட்டன. பூஜை செய்வதாக வந்த வர்கள் தனது பெற்றோரை ஏமாற்றி நடத்திய அக் கிரமங்களைப் பார்த்துதான் பெரியார் என்ற நாத்திகர் உருவானார்.

பிரதிபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

காவிரியில் இவ்வளவு தண்ணீர் வந்தும் கடை மடைப் பகுதிகளுக்குச் சென்று சேர இன்னும் 75 நாட்கள் ஆகுமாமே?

மேட்டூரிலிருந்து கல்லணை வழியாக கடைமடை வரை 7 நாட்களில் தண்ணீர் போய்ச் சேர்ந்த காலம் உண்டு. இப்போது காவிரியிலும் கொள்ளிடத்திலும் வெள்ளம் பாய்ந்து மதகுகள் உடைகின்றன. கடைமடைப் பகுதி காய்ந்து கிடக்கிறது. இதுதான் நிர்வாக லட்சணம். ஆற்றுக்கு காய்ச்சல் கண்டதாக எடப்பாடி சொல்கிறார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது காவிரியோ-கொள்ளிடமோ அல்ல, எடப்பாடி அரசுதான்.

ப.பாலாசத்ரியன், பாகாநத்தம்.

"ஒரு தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்பில் கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்...' என்ற பாட்டு ஞாபகமிருக்கிறதா?

எம்.ஜி.ஆர். நடித்த "உரிமைக்குரல்' படத்தில் ஒலித்த பாட்டு. எம்.ஜி.ஆருக்காக டி.எம்.எஸ். பாடிய பாடல்களை எப்போதும் தன் வாகனத்தில் ஒலிக்கச்செய்து ரசிக்கும் கலைஞருடைய வாரிசின் செயல்பாடு, இந்தப் பாட்டை ஞாபகப்படுத்துகிறது. அவரது உரிமைக்குரலுக்கு உடன்பிறப்புகள் தரும் ஆதரவுக்குரல் எப்படி என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

மறைந்த தலைவர்களைப் பற்றி தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக விமர்சனம் செய்வது தவிர்க்கப்படவேண்டும் என்ற ஓ.பி.எஸ். பேச்சு?

தனிப்பட்ட விமர்சனம் என்பது ஒருவர் மறைந்தாலும் இருந்தாலும் தவிர்க்கப்பட வேண்டியது. அரசியல் காரணங்களும் அதன் விளைவுகளும் எல்லாக் காலத்திலும் ஆராயப்பட வேண்டியவை.

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி-1.

"நீர் மேலாண்மை குறித்து அ.தி.மு.க. அரசுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை' என குற்றம்சாட்டுகிறாரே ஸ்டாலின்?

தொலைநோக்குப் பார்வை இல்லாமல் இருக்கலாம். ஆழ்நோக்குப் பார்வை இருக்கிறது. அதாவது, அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எவ்வளவு ஆழத்துக்கு மணல் எடுக்க லாம் என்கிற பார்வை.

சீ.எழில்பாபு, வானமாதேவி.

கோவா அரசின் காலியாக உள்ள 80 அக்கவுண்ட்டெண்ட் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்ற 8,000 பேரும் தோல்வியடைந்துள்ளனர். தேர்வு எழுதியவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்?

அரசுப்பணிகளில் தகுதியானவர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், அந்தத் தகுதியைப் பெற 8,000 பேரில் 80 பேர்கூட இல்லை என்பது குறித்து தேர்வெழுதியவர்களைவிட, தேர்வு நடத்தியவர்கள்தான் கவலைப்பட வேண்டும்.

உமரி பொ.கணேசன், மும்பை-37

குஜராத்தில் நிலக்கடலை கொள்முதலில் ரூ.4,000 கோடி ஊழல் நடந்துள்ளதே? தற்போது அதை விசாரணைக் கமிஷன் விசாரித்து வருகிறதே... இதுதான் ஊழல் இல்லாத பி.ஜே.பி. அரசா?

அரசு நிலத்தை அதானி குழுமத் திற்கு குறைந்த விலைக்கு கொடுத்தது தொடங்கி, குஜராத்தில் மோடி ஆட்சிக் காலத்திலேயே பல ஊழல்கள் நடந்துள்ளன. ஆனால், குஜராத் மாடல் என்ற இமேஜ் கட்டமைப்பில் இவை யெல்லாம் மறைக்கப்பட்டன. கடலளவு ஊழல்கள் மறைக்கப்பட்ட நிலையில், கடலை ஊழல் காட்டிக்கொடுத்துள்ளது.

பி.மணி, வெள்ளக்கோவில்.

"முல்லைப்பெரியாறு அணையை திறந்ததுதான் கேரளாவின் வெள்ளத்திற்கு காரணம்' என்று கேரள அரசு குற்றம் சாட்டியுள்ளதே?

இடுக்கி அணையை மறந்துவிட்டு, முல்லைப் பெரியாறு பற்றி மட்டும் பேசுவதன் மர்மம் என்ன? இயற்கையின் பாதிப்புகளுக்கு அரசியல் சாயம் பூசி, ஆட்சியை அணை கட்டிக் காப்பாற்றிக் கொள்ளும் உத்தியில் இடதுசாரிகளும் விதிவிலக்கல்ல.

------------------------------
ஆன்மிக அரசியல்

mavalianswers

சி.கார்த்திகேயன், சாத்தூர்.

கிருபானந்த வாரியார், காஞ்சி சங்கராச் சாரியார், மதுரை ஆதீனம் போன்றவர்கள் ஆன்மிகத்தோடு மறைமுக அரசியலும் செய்துள்ளார்களே?

வாரியார் தனது சொற்பொழிவுகளில் அரசியலைத் தொட்டுப் பேசி எதிர்விளைவுகளைக் கண்டவர். மதுரை ஆதீனம் வெளிப்படையாகவே அரசியல் கட்சி மேடை களில் ஏறி, தமிழுணர்வைத் தாறுமாறாக வெளிப்படுத்தியவர். ஆன்மிகப் பணியைச் சேர்ந்த இருவருக்கும் அரசியல் முலாம் என்பது கூடுதல் விளம்பரம் தந்தது. காஞ்சி மடத்தின் நிலை என்பது வேறு. சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்கிற மகா பெரியவர் காலத்திற்குப் பிறகு, ஜெயேந்திரர் கையிலெடுத்தது அதிகார அரசியல். அவரது காலத்தில் இந்தியாவின் குடியரசுத் தலைவர்களாக இருந்தவர்களில் கே.ஆர்.நாராயணனைத் தவிர மற்ற அனைவரும் அவர் காலடியில் உட்கார்ந்தவர்கள்தான். அதுபோல, பிரதமர்களாக இருந்தவர்களில் வி.பி.சிங் தவிர அத்தனை பேரும் அவரது ஆசிக்காகக் காத்திருந்தவர்கள். டெல்லியின் போக்குகளை காஞ்சிபுரம் தீர்மானிக்கும் என்கிற அளவிற்கு ஜெயந்திரர் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். 1991-ல் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதன் பின்னணியிலும் காஞ்சி மடத்தின் கைங்கர்யம் உண்டு. எந்த ஜெயலலிதா வுக்காக இதையெல்லாம் ஜெயேந்திரர் செய்தாரோ, அந்த ஜெயலலிதா ஆட்சியிலேயே, நக்கீரன் அம்பலப்படுத்திய சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரும் அவருக்கு அடுத்த பீடாதிபதியான விஜயேந்திரரும் கைது செய்யப்பட, காஞ்சி மடத்தின் அரசியல் அதிகாரம் தவிடுபொடியானது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்