ஆனந்தன் சக்திவேல், பெருங்குடி, கல்லுக்குட்டை

1912 இதே ஏப்ரல் 10ஆம் தேதி டைட்டானிக் கப்பல் கிளம்பியது. புராணங்களில் பலரையும் காப்பாற்றிய சமுத்திர தேவனும் சமுத்திர தேவியும் டைட்டானிக் காதலர்களை ஏன் காப்பாற்றவில்லை?

mm

Advertisment

பிரிட்டனிலிருந்து அமெரிக்காவுக்குப் புறப்பட்ட பிரம்மாண்டமான பயணிகள் கப்பல்தான் டைட்டானிக். 110 ஆண்டுகளுக்கு முன் கட்டமைக் கப்பட்ட டைட்டானிக் கப்பல், நீச்சல் குளம், பார்ட்டி ஹால் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்டதாக இருந்ததால், பிரிட்டனின் பெரும் பணக்காரர்கள் ஒரு பொழுது போக்கு டிரிப்பாக அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டனர். வணிக நோக்கத்திற்காகப் பயணித்த பணக்காரர்கள், விலையுயர்ந்த துணிமணிகள், ஆபரணங்கள், கலைப் பொருட்களைக் கப்பலில் எடுத்துச் சென்றனர். இங்கிலாந்திலும் அயர்லாந்திலும் பிழைக்க முடியாமல் இருந்த மக்களும் தங்களுக்கான புது வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி பயணத்தை மேற்கொண்டனர். கோலாகலமான தொடக்க விழாவுடன், கப்பலின் கேப்டன், எட்வர்ட் ஸ்மித் வழிகாட்டுதலில் உற்சாகமான பயணத்தைத் தொடங்கியது டைட்டானிக். 1912 ஏப்ரல் 15 அன்று எதிர்பாராதவித மாகப் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானதில் கப்பலில் இருந்த பல பயணிகள் உயிரிழந்தனர். படகு மூலம் சிலர் தப்பித்து, அடுத்து வந்த மீட்புக் கப்பலில் ஏறி, உயிர் பிழைத் தனர். பயணிகள் உயிரைக் காப்பாற்றுவதில் அக்கறை செலுத்திய கேப்டன் ஸ்மித், கப்பலோடு சேர்ந்து மூழ்கினார். உலகை அதிர வைத்த கடல் சோகம்தான் டைட்டானிக். அதைத் தண்ணீர் தாஜ் மகாலாக மாற்றியது, 1997ல் வெளியான டைட்டா னிக், திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் திரைக்கதை அமைப்பு. 1985 முதல் மேற்கொள்ளப் படும் கடல் ஆய்வுகளில் டைட்டானிக்கின் சிதைந்த பகுதிகள் பல கிடைத்துள் ளன. டைட்டானிக் தொடர்பான பல புத்தகங்களும் வெளியாகியுள்ளன. டாக்குமெண்ட்ரி படங்கள் எடுக்கப்பட்டன. உண்மை கதாபாத்திரங்களையும் கற்பனையான ரோஸ்-ஜேக் காதல் ஜோடியையும் கச்சிதமாக இணைத்து உலகளாவிய ரசிகர்களை ஈர்த்த ஜேம்ஸ் கேமரூனின் திறமை, சமுத்திர தேவனுக்கும் சமுத்திர தேவிக்கும் இல்லை போலும்.

புவனா பிரியன், தரமணி, சென்னை.

புனித வெள்ளிக்கும் ஈஸ்டருக்கும் என்ன வித்தியாசம்?

புதிய ஏற்பாடு எனும் பைபிள்படி, புனித வெள்ளி என்பது, தனது சீடர்களில் ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்ட இயேசுநாதரை ஆட்சியதிகாரம் சிலுவையில் அறைந்து உயிர் பறித்த வெள்ளிக் கிழமை. ஈஸ்டர் என்பது, சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதர், மூன்றாம் நாள் உயிர் பெற்று எழுந்ததாகச் சொல்லப்படும் ஞாயிற்றுக் கிழமை. நடைமுறை ஏற்பாடுகளின்படி, புனித வெள்ளி என்பது பிரார்த்தனைக்குரியது. ஈஸ்டர் என்பது பிரார்த்தனைகளுடன் பிரியாணியும் சேர்ந்த ஞாயிறு.

மஞ்சுளா சிவலிங்கம், முகப்பேர்

எத்தனையோ நடிகைகள் புதிது புதிதாக வந்துகொண்டே இருந்தாலும் சில்க் சுமிதா நினைவுகள் மட்டும் அனைவர் நெஞ்சிலும் மறையாமல் இருப்பதற்கு என்ன காரணம்?

டி.ஆர்.ராஜகுமாரியை கனவுக் கன்னியாக நினைத்திருந்த ரசிகர்களின் தலைமுறையில் இப்போது பலர் இல்லை. சரோஜாதேவி, சாவித்திரி ரசிகர்களுக்கு கனவில் வந்தாலும் கண் மங்கலாகத் தெரிகிறதாம். சில்க் ரசிகர்கள் பலர் இப்போதுதான் மூத்த குடிமக்களுக்கான வயதுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களால் இன்னமும் அந்த கண் வீச்சிலிருந்து மீள முடியவில்லை. படப்பிடிப்பின்போது சில்க் ஸ்மிதா கடித்துவிட்டு வைத்துச் சென்ற ஆப்பிள், அப்போதே 200 ரூபாய்க்கு ஏலம் போனது என்ற கதையை இப்போதும் வாயைப் பிளந்து ரசித்துக் கேட்கிறார்கள் சில்க் ரசிகர்கள்.

தா.விநாயகம், ராணிப்பேட்டை.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு, மத்திய அரசு வழங்கியுள்ளதை பற்றி?

மத்தியில் ஆள்பவர்களிடம் செல்வாக்காக இருந்தால், தீபாவளி நேர ஊசிப் பட்டாசு வெடியி லிருந்து பாதுகாக்கக்கூட ஒய் பிரிவு பாதுகாப்பு கிடைக்கும். அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.

தே.அண்ணாதுரை, கம்பம்,

சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்கிறதே மாநில அரசு?

உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதித் தேவைக்கு ஒன்றிய அரசைத்தான் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. ஒன்றிய அரசோ, தான் சொல்லும் மாற்றங்களைச் செய்தால்தான் நிதி வழங்க முடியும் என்று மாநில அரசுகளுக்கு நிபந்தனை விதிக்கிறது. டெல்லியிடமிருந்து நிதியைப் பெறுவதற்காக, பொதுமக்களின் தலையில் கை வைக்கிறது மாநில அரசு. மக்களாட்சியின் விநோதங்களில் இதுவும் ஒன்று.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

புத்தரின் "ஆசையே துன்பத்திற்கு காரணம்', ஈஷாவின் ஜக்கி வாசுதேவின் "அத்தனைக்கும் ஆசைப்படு' என்ன வித்தியாசம்?

புத்தருக்கு புல்லட் தேவைப்படவில்லை. ஜக்கிக்கு புல்லட், கார் இன்னும் பல வசதிகள் இருந்தாலும் போதவில்லை.