மஞ்சுளா சிவலிங்கம், தரமணி -சென்னை
தேசியக் கட்சிகளாக இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்காலம் என்னவாகும்?
மாநிலக் கட்சிகளாகவேனும் தாக்குப்பிடித்தாக வேண்டிய சூழல் உருவாகும். இந்தியாவின் பல மாநிலங்களிலும் காங்கிரசை தவிர வேறு கட்சியே ஆட்சிக்கு வர முடியாது என மக்கள் நம்பிய காலம் ஒன்று இருந் தது. மேற்குவங்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாக்கம் திரிபுரா மாநிலத்திலும் வலுவாக இருந்தது. இந்திய ஒன்றிய அரசை அமைப்பதிலும் 1989, 1996, 2004 காலகட்டங்களில் இடதுசாரிகளின் தேவையும் பங்களிப்பும் இருந்தது. காங்கிரஸ் கட்சியை மீறி ஒரு மாநிலக் கட்சி அதனுடைய மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியும் என முதன்முதலில் இந்தியாவுக்கு உணர்த்தி யது தமிழ்நாடுதான். அண்ணா அதை சாதித்தார். இன்று தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்ன நிலையில் இருக்கிறதோ அதே நிலை யில்தான் பல மாநிலங்களிலும் இருக்கிறது. சோவியத் யூனியன் வீழ்ச்சியும்-உலகளாவிய புதிய பொருளாதாரக் கொள்கையும் இடது சாரிகளிடமிருந்து உழைக்கும் மக்கள் கட்டமைப்பை விலகச் செய்துவிட்டன. கோவை, திருப்பூர் தொடங்கி மேற்குவங்கம் வரை இதுதான் நிலைமை. கேரளாதான் மிஞ்சியிருக்கிறது. காங்கிரசிடம் ராஜஸ்தானும் சட்டீஸ்கரும் உள்கட்சி மோதல்களுடன் நீடிக் கின்றன. பஞ்சாபையும் ஆம் ஆத்மியிடம் இழந்துவிட்டது. காலத்திற்கேற்ற மாற்றம், மாநில மக்களின் உணர்வுகள், அதற்கேற்ற கட்டமைப்பு, மக்களிடம் செல்வாக்கு மிக்க தலைவர்கள், மக்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை இவற்றை வளர்க்க வேண்டிய இடத்தில் காங்கிரசும் கம்யூனிஸ்ட் இயக்கங்களும் இருக்கின்றன.
ரேகா, கன்னியாகுமரி
பத்திரிகைகள் ஜனநாயகத்தின் நான்காவது தூண்தானே? ஏன் ஒன்றிய அரசுகளின் பிரதமர்கள், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் பல மாநில முதல்வர்கள், பத்திரிகையாளர்கள் மீது கொடூர தாக்குதல்கள், கைது நடவடிக்கைகள் எல்லாம் எடுத்தார்கள்?
நாடாளுமன்றம், அதிகாரவர்க்கம், நீதிமன்றம் இவைதான் அரசியல் சாசனம் உருவாக்கியுள்ள ஜனநாயகத் தூண்கள். மூன்று தூண்கள் மட்டுமே இருந்தால் சமநிலையாக நிறுத்துவது சிரமம். அதனால் நான்காவது தூணாக செயல்படவேண்டிய பொறுப்பு மிக்கவை ஊடகங்கள். நான்கு தூண்களில் மக்களின் நம்பிக்கைக்குரியவை நீதிமன்றங்களும் பத்திரிகைகளும்தான். நீதி மன்றத்தில் மற்ற இரு தூண்களால் நேரடியா கத் தலையிட முடியாது. அதிகாரப்பூர்வத் தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே அசைக்க முடியாத ஆதாரங்களுடன் உண்மைச் செய்திகளை வெளியிடக்கூடிய வலிமை பத்திரிகைகளுக்கு உண்டு. அந்த ஒரு தூண் நேர்மையாக செயல்பட்டால், மற்ற இரு தூண்களின் உண்மைத் தன்மை வெளிப்பட்டு விடும். அதனால்தான் அதன் மீது காலம் காலமாகத் தாக்குதல் நடைபெறுகிறது.
தே.மாதவராஜ், கோயமுத்தூர் 45
மம்தாவுக்கு இப்போதுதான் ஞானோதயம் பிறந்ததா,? காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க?
அவரே பழைய காங்கிரஸ்காரர்தான். மேற்கு வங்க காங்கிரஸ் உள்கட்சி அரசியலுக்கு பலிகடாவாகித் தனிக்கட்சி தொடங்கியவர் மம்தா. இப்போது அவரது தேவையை எதிர்பார்க்க வேண்டிய இடத்தில் காங்கிரஸ் இருக்கிறது. இணைந்திருக்கும்போது உள்ள பலம், பிரிந்திருக்கும்போது இல்லை என்பதை காங்கிரசும் மம்தாவும் உணர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
"ஹிட்லர், முசோலினியின் மறுஉருவம் மு.க.ஸ்டாலின்'"... என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறலாமா?
அவருக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. எதை வேண்டுமானாலும் சொல்லலாம். மெயின் ரோட்டில் நின்றுகூட நிறைய சொல்லலாம்.
மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி
வடநாடுகளில் பா.ஜ.க.வின் கை ஓங்கியிருக்க என்ன காரணம் மாவலியாரே..?
ஆடுகள் மோதிக்கொண்டிருந்தால் ஓநாய்க்கு வேட்டைதான்.
த. சத்தியநாராயணன், அயன்புரம்
கட்சியிலிருந்து நீக்கப்படுவது, ஓரம் கட்டப்படுவது இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
நீக்கப்படுவது என்பது தாக்கப்படுவது போல. வேறு இடத்தில் சிகிச்சை பெற்று பிழைத்துக் கொள்ளலாம். ஓரங்கட்டப்படுவது என்பது உயிருடன் சமாதி வைப்பது போல. உஷாராக இல்லாவிட்டால் மூச்சு அடங்கிவிடும்.