மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி

அடுத்தவர் உழைப்புக்கு தன்னுடைய பெயரை போட்டுக்கொள்ளும் சிலரைப்பற்றி..?

வலுத்தவர்களின் கை ஓங்குவது வழக்கம்தான். சென்னைக்கு மெட்ரோ ரயில் ஒத்தே வராது என்றும், மோனோ ரயில் திட்டத்தைக் கொண்டு வருவேன் என்றும் அறிவித்தவர் ஜெயலலிதா. ஆனால், தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டு, பல கட்டங் களைத் தாண்டிய சென்னை மெட்ரோ ரயில் திட்டம், அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவடைந்தபோது ஜெயலலிதா அதற்கு பச்சைக் கொடி ஆட்டி, கல்வெட்டு நாட்டிக் கொண் டார். கோயம்பேடு மெட்ரோ நிலையத்துக்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டது. அந்தக் கோயம்பேட்டில் உள்ள மிகப் பெரிய பேருந்து நிலையத்தை கட்டியது கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு. ஆட்சி மாறியதும் திறந்து வைத்தவர் ஜெயலலிதா. அவருடைய பெயர் மிகப் பெரிய கல்வெட்டாக வைக்கப்பட்டதுடன், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரும் சூட்டப்பட்டது. நொங்கு பறித்தவர் ஒருவர், நோண்டித் தின்றவர் இன்னொருவர் என்பது எல்லாத் துறைகளிலும் உண்டு.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

Advertisment

தேசிய பங்குச் சந்தை ஊழல் விஸ்வரூபம் எடுக்கிறதே?

கணக்கிட முடியாத சைபர்களுடன் கூடிய மிகப் பெரிய தொகை தேசிய பங்குச் சந்தை ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அதன் முன்னாள் தலைவர் சித்ரா சுப்பிரமணியத்தை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. ஆ.ராசா, கனிமொழி முதல் அ.தி.மு.க ஜெயக்குமார் வரை பிரபலங்கள் கைதானால் அதை மீடியாக்கள் வளைத்து வளைத்துக் காட்டும். துருவித் துருவி விசாரணை என்று செய்தி வெளியிடும். அங்கே இவ்வளவு சிக்கியது, இங்கே இவ்வளவு சிக்கியது என்று செய்திகள் வெளி யிடும். சித்ரா சுப்ரமணியம் கைது பற்றிய செய்திகூட பத்தோடு பதினொன் றாக வெளியாகிறது. கைதான படமோ வீடியோவோ கண்ணுக்கே தெரிய மாட்டேன் என்கிறது. 2ஜி ஊழல் என ஊதிப் பெரிதாக்கிய இதே நாட்டில்தான் அதைவிட அதிக தொகை கொண்ட தேசிய பங்குச் சந்தை ஊழல் அடக்கி, அமுக்கி வாசிக்கப்படுகிறது. அதற்கு காரணம், நூல் அளவு வித்தியாசம்தான்.

பா.ஜெயப்பிரகாஷ், -தேனி

Advertisment

"இன்னும் 30ஆண்டுகளுக்கு மு.க.ஸ்டாலின்தான் தமிழகத்தின் முதல்வராக இருப்பார்'' என்று ஆந்திரா எம்.எல்.ஏ. நடிகை ரோஜா கூறியுள்ளாரே?

ஆந்திர மாநிலத்தின் நகரி தொகுதி, தமிழ்நாடு எல்லையில் உள்ளது. அதன் எம்.எல்.ஏ. நடிகை ரோஜா. தமிழ் நாட்டு சினிமாவும் அரசியலும் அவருக்கு ஓரளவு தெரியும். காற்று வீசும் பக்கத்தில் ரோஜாவின் வாசம் வீசுவது இயல்புதான். மேடைக்கேற்ற வாசம் வீசுகிறது.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

கவர்னர் பதவிக்கு பலர் பி.ஜே.பி. கட்சியில் இருக்கும் நிலையில் கூடுதல் பொறுப்பு பதவிக்கு எதற்கு தமிழிசை நியமனம்?

தெலங்கானாவின் முழுநேர கவர்னராக தமிழிசை இருக்கிறார். அங்கே பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்கத் தில் ஆளுநர் உரை நிகழ்த்துவதைத் தவிர்த்திருக்கிறது முதல்வர் சந்திர சேகர ராவ் தலைமையிலான அரசு. புதுச்சேரி யின் துணைநிலை ஆளுநராகவும் பொறுப் பில் இருக்கிறார் தமிழிசை. அங்கே முதல் வர் ரெங்கசாமி தலைமையிலான அரசை விட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் கூடுதலாக உள்ளது. முழுப் பொறுப்பை விட, கூடுதல் பொறுப்பில் தமிழிசை நீடிப்பதையே அவரை அந்தப் பதவிக்கு பரிந்துரைத்த மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு விரும்பும்.

ff

வாசுதேவன், பெங்களூரு

அஸ்வினுக்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்து உள்ளாரே கபில்தேவ்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹேட்லி எடுத்திருந்த விக்கெட் சாதனையை முறியடித்து உலகளவில் அதிக விக்கெட் எடுத்த நம்பர் 1 பவுலர் என்ற சாதனையைப் படைத்தவர் இந்தியாவின் கபில்தேவ். அவரது அந்த சாதனை நாளில் ஸ்டேடியம் முழுவதும் ரசிகர்கள் திரண்டிருந்து, விக்கெட் விழும் அந்த நொடிக்காகக் காத்திருந்தனர். இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டன. டி.வி.யில் லட்சக்கணக்கானவர்கள் நேரலையில் ரசித்தனர். அத்தகைய ரசிகர்களில் ஒருவர் அஸ்வின். அவர் இப்போது கபில்தேவ் எடுத்த சாதனை அளவு விக்கெட்டுகளைத் தாண்டியிருக்கிறார். தன்னைத் தாண்டும் இளைய தலைமுறையை மனதார வாழ்த்துவது என்பது முந்தைய தலைமுறையின் புகழ் மகுடத்திற்கு பெருமை சேர்க்கும். அஸ்வின் சாதனை படைத்தார்; கபில் பெருமை பெற்றார்.

அதிதன் சமரன், தரமணி -சென்னை

மாவலிக்கு பேய், பிசாசு, குட்டிச்சாத்தான்களை நேரில் கண்ட அனுபவங்கள் உண்டா?

ஒருசில மனிதர்களிடம் இவற்றைக் கண்ட அனுபவம் நிறைய உண்டு.

கே.கே.வெங்கடேசன், செங்கல்பட்டு

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியா?

ராஜீவ்காந்தி படுகொலையும் அது தொடர்பான விசாரணையும் பல அரசியல் பின்னணிகளைக் கொண்டவை. அகப்பட்டவர் கள் ஆயுள் கைதிகளாயினர். அகப்படாதவர்கள் ஆண்டு அனுபவித்தனர். நீதி தேவதையின் கண்கள் எப்போதும் கட்டப்பட்டே இருக்கின்றன.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு-77

"ஒரே நாடு... ஒரே தேர்தல்' என்ற முழக்கம் மீண்டும் ஒலிக்கத் துவங்கிவிட்டதே?

என்னது யோகி மீண்டும் முதல்வராகி யிருக்கும் உத்தரபிரதேச அரசை கலைக்கப் போகிறாரா பிரதமர் மோடி?