அதிதன் சமரன், முகப்பேர் -சென்னை

எல்லா பிரச்சினைக்கும் அரசே தீர்வு காண முடியாது என்று ஒன்றிய அரசின் பிரதமர் கூற்று எதைக் காட்டுகிறது?

எதுவாக இருந்தாலும் நேருதான் காரணம், காங்கிரஸ்தான் சீரழித்தது என்று சொல்லிக் கொண்டு ஓட்டு மட்டும் வாங்குவோம். எத்தனை முறை ஆட்சிக்கு வந்தாலும் எங்கள் பா.ஜ.க.வுக்கு சரி பண்ணத் தெரியாது என்று சொல்லாமல் சொல்கிறாரோ!

செந்தில்குமார் எம்., சென்னை-78

Advertisment

பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை என்கிறாரே கமல்?

பதவியே வேண்டாம் என்று முடிவு செய்த காந்தியும் பெரியாரும் தேர்தல் அரசியலுக்கே வராமல் இருந்தவர்கள். தேர்தல் அரசியலுக்கு வர முடிவு செய்த அண்ணா, தனது கட்சி மாநாட்டில் தொண்டர்களிடம் வாக்குப்பதிவு நடத்தி அதன்மூலம் தேர்தல் களத்திற்கு வந்தார். எம்.ஜி.ஆர்., வைகோ உள்ளிட்ட மற்ற தலைவர்கள் கட்சி ஆரம்பித்ததே, தேர்தலில் வெற்றி பெற்று பதவி யைப் பெறுவதற்காகத்தான். ஒரு சில தலை வர்கள், தங்களுக்கு சாதகமான சூழலைப் பார்த்து தேர்தல் களத்தைக் கண்ட வர்கள். இரண்டு கழகங்களுக்கும் மாற்று எனக் கட்சி ஆரம்பித்தவர்கள் விஜயகாந்த்தும், சீமானும். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு ட்விட்டர் அரசியல் செய்து, மக்கள் நீதி மய்யம் எனும் தனிக் கட்சியை ஆரம்பித்தவர் கமல். 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், தற்போதைய உள்ளாட்சிக் களம் ஆகியவற்றில் பலவித அனுபவங்கள் கிடைத்திருக்கும். பதவிக்கு வருவது அத்தனை எளிதல்ல என்பதை அறிந்ததால், பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை என்ற மனநிலைக்கு வந்திருக்கலாம். எல்லாருக்கும் எம்.ஜி.ஆராக வேண்டும் என்ற ஆசையின் விளைவே அரசியல் கட்சி. எம்.ஜி.ஆருக்கு இணையாக செல்வாக்கு பெற்ற நடிகர் திலகம் சிவாஜி, எம்.ஜி.ஆரின் வாயால் வாரிசு எனச் சொல்லப்பட்ட பாக்யராஜ் இருவரின் அரசியல் கட்சி அனுபவங்களைக் கவனித்தால், ரஜினி போல அரசியலுக்கே வரவில்லை என்று ஒதுங்கிக் கொள்வார்கள்.

mm

Advertisment

மஞ்சுளா சிவலிங்கம், தரமணி -சென்னை

மகாத்மா காந்தி இன்று உயிரோடு இருந்திருந்தால் கோட்சேவின் கையிலிருந்து துப்பாக்கியை வாங்கி, தானே சுட்டுக் கொண்டிருப்பார் என்ற ராகுல் காந்தியின் ஆவேசம் நியாயம்தானா?

ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வின் அரசியல் சித்தாந்தத்தை தீர்மானிக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் இலக்கு அகண்ட பாரதம். மகாத்மா காந்தியின் விருப்பம், ஒருங்கிணைந்த இந்தியா. இந்து மத நாடாக அகண்ட பாரதத்தை அறிவிக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். கொள்கை. இந்து-முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் இணைந்து வாழ வேண்டும் என்பது காந்தியின் கனவு. அதற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். கடைசியாக அவரது உயிரையே பறித்தான் கோட்சே. அந்த கோட்சேவைக் கொண்டாடும் கூட்டத்தார் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் நிலையில், முஸ்லிம் மக்களின் உணவு, முஸ்லிம் மாணவிகளின் உடை, அவர்களின் மதம் சார்ந்த உரிமைகள் அனைத்துக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி, அவர்கள் மீது தாக்குதலை நடத்தி, உயிர்ப் பறிப்பும் நடப்பதுடன், முஸ்லிம்களை பாகிஸ்தானுக்குப் போ எனப் பேசும் போக்கு ஆட்சியில் இருப்பவர்களின் ஆதரவுடன் தொடர்ந்து நடைபெறும் நிலையில், காந்தியால் எப்படி சகித்துக்கொண்டு வாழ முடியும்? அத்துடன் வரலாற்றையும் திரிக்கின்ற வேலை தொடர்ந்து நடைபெறுவதால், ராகுல்காந்தி சொல்வதுபோல, கோட்சேவின் துப்பாக்கியை வாங்கி, காந்தி தானே சுட்டுக்கொண்டு செத்துப் போனார் என்று எழுதி வைத்தாலும் ஆச்சரியமில்லை.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு-77

ஸ்ரீ ராமா னுஜர் சிலையை இப்போது பிரதமர் மோடி திறந்து வைத் துள்ளார்... ஆனால் கலை ஞர் அன்றே ஸ்ரீ ராமானுஜர் காவியத்தை எழுதி, தொலைக்காட்சியிலும் வெளி யிட்டுவிட்டாரே?

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு 100 வயது வரை வாழ்ந்தவர் ராமா னுஜர். வைணவ சமயத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்காக அந்தக் காலத்திலேயே பாடுபட்டவர். ஆன்மிகம் சார்ந்த சமூக நீதி அவருடைய வாழ்க்கை நெறியாக இருந்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை அரவணைத்து மதத்தில் புரட்சி செய்தார். சமஸ்கிருத மந்திரங்களுக்கு மாற்றாக விளங்கும், தமிழ் மந்திரங் களான திவ்ய பிரபந்தங்களை திராவிட வேதம் என முன்னிறுத்தியது வைணவம். 20ம் நூற்றாண்டின் திராவிட இயக்கத் தலைவரான கலைஞர் மிகச் சரியாக தன் படைப் பாற்றல் மூலமாக சமூக நீதிப் பார்வையில் ராமானுஜரை அறிமுகப்படுத்தினார். சிலையைத் திறந்து வைத்திருக்கும் மோடி அணிந்திருப்பது ஆன்மிக கண்ணாடி.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

நடிகை விஜயசாந்தி -நடிகை ரோஜா அரசியல் களத்தில் இவர்களின் செயல்பாடுகளில் உள்ள வித்தியாசம்?

இருவரும் திரைப்புகழை வைத்து அரசியலில் நுழைந்தவர்கள். இருவரும் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு சென்றவர்கள். பா.ஜ.க., தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி, காங்கிரஸ், பா.ஜ.க எனப் பயணித்த விஜயசாந்தி மக்களவை எம்.பி.யாக இருந்தவர். தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எனப் பயணித்து எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ரோஜா. இதை முழு நேர அரசியல்வாதி செய்தால், அரசியல் துரோகம். திரைப் பிரபலங்கள் செய்தால் மக்கள் பிரபலம்.