வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு, சென்னை-110

kuldeepnair"ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் நாட்டையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது' என்று காங்கிரஸ் குற்றம்சாட்டுவது சரியா?

ஊர் சிரிக்கிறது என்று சொன்னால், ஊரே வாய் திறந்து சிரிக்கிறது என்று அர்த்தமல்ல. ஊரில் உள்ள மக்கள் சிரிக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஆர்.எஸ்.எஸ். இந்த நாட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்றால், ஆர்.எஸ்.எஸ்.ஸின் கட்டுப்பாட்டில் உள்ள பா.ஜ.க. தலைமையிலான அரசின் கட்டுப்பாட்டில் நாடு இருக்கிறது என்று அர்த்தம்.

வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி-17

Advertisment

மறைமுகமாக கோவில்-குளங்களுக்குச் செல்லும் அரசியல்வாதிகள் -அவரது குடும்பத்தினர், வெளிப்படையாக செல்லும் அரசியல்வாதிகள்-அவரது குடும்பத்தினர் இவர்களில் யாருக்கு ஆண்டவன் அருள் கிட்டும்?

வெளிப்படையாகச் சென்றவர்களும் ஆட்சி செய்து -ஆட்சி இழந்து -ஊழல் செய்து தண்டனை பெற்றிருக்கிறார்கள். மறைமுகமாகச் சென்ற குடும்பத்தாரின் தலைவர்களும் ஆட்சி செய்து -ஆட்சி இழந்து -ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு -வழக்குகளைச் சந்தித்திருக்கிறார்கள். இதில் ஆண்டவன் அருள் கிடைத்ததோ இல்லையோ, நாட்டை ஆண்டவர்கள் என்ற பெயர் பெற்றுவிட்டனர்.

எஸ்.பூவேந்தஅரசு, பொன்நகர், சின்னதாராபுரம்

Advertisment

எந்த நேரமும் படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பவர்கள் அதிலேயே லயித்துவிடுவதால், தங்கள் சொந்த சுக-துக்கங்களை மறந்துவிடுகிறார்களா?

தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவற்றையும் மறக்கும் அளவுக்கான லயிப்பு என்பது மயக்கம் -போதை. அது எந்த வகையானதாக இருந்தாலும் நல்லதன்று. படிப்பதும் எழுதுவதும் அந்தக் கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்று செயல்படுவதும் தனது சொந்த சுகதுக்கங்களைக் கடந்த பெரும்பணி. அண்மையில் மறைந்த 95 வயது பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், தன் படிப்பையும் எழுத்தையும் ஜனநாயகம் காக்கும் வாளாகவும் கேடயமாகவும் பயன்படுத்தினார். 80-க்கும் அதிகமான இதழ்களில் அவருடைய கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இந்திராகாந்தியின் எமர்ஜென்சிகால கொடுமைகளை எதிர்த்து எழுதியதால், சிறைத்தண்டனை பெற்ற எழுத்தாளர். அரசியல் செய்திகளை வாசகர்களுக்கு எப்படித் தரவேண்டும் என்பதற்கு அவரது புத்தகங்கள், இதழியல் இலக்கணமாகும். தனக்குக் கிடைத்த தூதரகப் பதவி, ஐ.நா. மன்றப் பொறுப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் வாய்ப்பு அனைத்திலும் ஜனநாயகமும் அமைதியும் தழைப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொண்ட சிந்தனையாளர். நக்கீரன் ஆசிரியரை பொடாவில் கைது செய்தபோது, அதனை எதிர்த்து நாடாளுமன்றக் குழுவிடம் தனது கருத்தை அழுத்தமாகப் பதிவுசெய்தவர் குல்தீப் நய்யார். பிரேக்கிங் நியூஸ்களில் லயித்துக் கிடக்கும் இன்றைய ஊடகத்தினர், குல்தீப் நய்யாரின் பிரேக் செய்யமுடியாத இதழியல் பணிகளை அறிய வேண்டியது அவசியம்.

ப.பாலாசத்ரியன்-பாகாநத்தம்

ஒரு தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்பில் கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்.. என்ற பாட்டு ஞாபகமிருக்கிறதா?

எம்.ஜி.ஆர். நடித்த "உரிமைக்குரல்' படத்தில் ஒலித்த பாட்டு. எம்.ஜி.ஆருக்காக டி.எம்.எஸ். பாடிய பாடல்களை எப்போதும் தன் வாகனத்தில் ஒலிக்கச் செய்து ரசிக்கும் கலைஞருடைய வாரிசின் செயல்பாடு, இந்தப் பாட்டை ஞாபகப்படுத்துகிறது. அவரது உரிமைக்குரல்தான் எடுபட மறுக்கிறது.

nayanthara

ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

"அறம்', "கோலமாவு கோகிலா' எந்த நயன்தாரா அசத்தல்?

கலெக்டர் என்றாலும் கடத்தல்காரர் என்றாலும் கேரக்டராக மாறி, ரசிகர்களைக் கட்டிப்போடுவதில் நயன்தாரா எப்போதும் அசத்தல்தான்.

நித்திலா, தேவதானப்பட்டி

திருவாரூர்..? திருப்பரங்குன்றம்..?

ஒன்று, அப்பாவின் புகழ் சொல்லும் இடம். மற்றொன்று, மகன் செல்வாக்கு காட்ட நினைக்கும் இடம். அதாவது... திருவாரூரில் சிவன், திருப்பரங்குன்றத்தில் முருகன். வேறு எதையாவது நினைத்தீர்களா?

ஆன்மிக அரசியல்

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

ஏகலைவனின் கட்டை விரலை தந்திரமாக வாங்கிய துரோணாச்சாரியார் காலத்திலேயே ஆன்மிக அரசியல் தொடங்கிவிட்டதா?

ஆன்மிக அரசியல் என்ற போர்வையில் மத அரசியல், சாதி அரசியல், வருணாசிரம அரசியல், நிலவுடைமை அரசியல் எனப் பலவும் அரசாட்சி செய்திருக்கின்றன. பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்னும் நான்கு வருணத்திற்குள் வராமல் அதற்கும் கீழானவர்கள் என ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் ஏகலைவன். அரச குமாரர்களுக்கு வில்வித்தை கற்றுத் தந்த துரோணரின் பயிற்சியைத் தொலைவில் இருந்து பார்த்துப் பயின்று, அர்ஜுனர்களையே வெல்லும் வல்லமையை ஏகலைவன் பெற்றவன். அவன், தன் நன்றியை துரோணரிடம் நேரடியாகச் சொன்னபோது, குருகாணிக்கையாக அவனது வலதுகை கட்டைவிரலைத் துரோணர் கேட்டுப் பெற்றது என்பது கல்விக் கட்டணமல்ல; கொடுந்தண்டனை.

இந்த தண்டனைகள் இப்போதும் தொடர்வதால்தான், கல்வி -வேலைவாய்ப்பு -வாழ்வுரிமைகளில் சமூகநீதி தேவைப்படுகிறது. வில்வித்தை கற்றதற்காக ஏகலைவனின் கட்டை விரல் வெட்டுப்பட்டது. மக்களுக்கு நன்மை தருவதற்காக யாகம் வளர்த்தான் என்பதற்காக மாவலி மன்னன் மண்ணோடு மண்ணாக அழுத்தப்பட்டான். தவம் செய்ததற்காக சம்பூகனின் தலையைக் கொய்தனர். அவதார புருஷர்களைக் கொண்டே இத்தகைய அநீதிகளை நியாயப்படுத்துகின்றன புராணங்கள். இவை எதுவுமே ஆன்மிக அரசியல் அல்ல. ஆதிக்கம் செலுத்தியோரின் சுயநலன் காக்கும் அரசியல்.