மு. முஹம்மது ரபீக் ரஷாதீ , விழுப்புரம்

ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து மாவலியாரின் கழுகுப் பார்வை

கார்ப்பரேட் கழுகு களைப் பாதுகாத்து, சமூக நலம் எனும் கோழிக்குஞ்சு களை இரையாக்கும் திட்டத் தினை நவீன வடிவில் நடப்பு பட்ஜெட்டும் தொடர்கிறது.

Advertisment

mm

Advertisment

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்

அந்த நாளில் பெரியப்பா எம்.ஜி.ஆர். தன்னை நன்கு படிக்கும்படி கூறினார் என்கிறாரே முதல்வர் ஸ்டாலின். அப்போ ஸ்டாலின் அரசியலுக்கு வருவதை எம்.ஜி.ஆர். விரும்பவில்லையா?

அண்ணாவின் திராவிட நாடு இதழுக்கு ஒரு கட்டுரை வந்தது. அதன் எழுத்து நடை -கருத்தாழம் ஆகியவற் றைப் படித்துப் பார்த்துவிட்டு வெளியிடச் செய்தார் அண்ணா. பிறகு, திருவாரூ ருக்கு அவர் வந்தபோது, "இந்த ஊரி லிருந்து ஒருவர் கட்டுரை எழுதியிருந்தார். அவரைப் பார்க்க வேண்டும்' என்று சொல்ல, எழுத்தாளர் வந்து அண்ணாவை சந்தித்தார். பள்ளி மாணவனாக இருந்த எழுத்தாளரைப் பார்த்த அண்ணா, "முதலில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பிறகு எழுத்து, அரசியல் என்று ஆர்வம் காட்டலாம்' என்றார். அந்த எழுத்தாளர்தான் கலைஞர் மு.கருணாநிதி. அன் றைய சமூகத்தில், கல்வி கிடைப் பது பெரும் பாடு. அதனால், அனைத்து தரப்பினரும் படித்து முன்னேற வேண்டும் என்பதையே தலைவர்கள் முதன்மையாக வலி யுறுத்தினர். எம்.ஜி.ஆரின் சிறுவய தில் அவரால் படிக்க முடியாத குடும்பச் சூழல் இருந்தது. கல்வி கற்க வாய்ப்புள்ளவர்கள் படிக்க வேண்டும் என்பதையும், இல்லாதவர்களுக்கு அந்த வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும் என்பதையும் திராவிட இயக்கத்தில் இருந்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதைத்தான் தனது நண்பரின் மகனிடம் எம்.ஜி.ஆரும் சொல்லியிருக்கிறார். மு.க.ஸ்டாலின் உள்பட கல்லூரிப் படிப்பு முடித்த பல பேர் அரசியலில் ஈடுபட்டு பல பொறுப்புகளுக்கு வந்துள்ளனர்.

கே.கே.வெங்கடேசன், அழகேசன்நகர் -செங்கல்பட்டு

"மக்களுக்கான நேரத்தை ஒருவருக்கொருவர் குறை சொல்வதில் செலவிடக்கூடாது' என எம்.எல்.ஏ.க் களுக்கு மும்பை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது பற்றி?

சட்டமன்றம் என்பது சத்தமன்றமாக இல்லாமல், மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், அந்தத் திட்டங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவதற்குமான இடமாக அமைய வேண்டும். நீதிமன்றம் இதனை நினைவூட்டியுள்ளது. தனிப்பட்ட விருப்பு -வெறுப்புகளில் மூழ்கியிருக்கும் மக்கள் பிரதிநிதிகள் கவனத்தில் கொள்ளவேண்டிய உத்தரவு இது.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு 77,

அ.தி.மு.க. எம்.பி. நவநீதகிருஷ்ணனின் கட்சிப் பதவிகளை, அ.தி.மு.க. தலைமை பறித்துள்ளது பற்றி?

அரசியலில் தனக்கு நேர் எதிரியாக இருந்த ராஜாஜி மறைந்த போது இறுதி நிகழ்விற்கு, சக்கர நாற்காலியில் சென்று, கடைசி வரை இருந்து, கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர் பெரியார். காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி திராவிட ஆட்சிக்கு அடித்தளமிட்ட அண்ணா உயிர்ப்போராட்டம் நடத்தியபோது, மருத்துவ மனையில் கவலையோடு காத்திருந்தவர் பெருந் தலைவர் காமராஜர். ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி மறைந்தபோது, இறுதி ஊர்வலத்தில் முதல்வர் எம்.ஜி.ஆரும் எதிர்க்கட்சித் தலைவர் கலைஞரும் ஒரே காரில் பயணித்தனர். இந்த அரசியல் நாகரிகம் ஜெயலலிதாவின் அரசியல் வருகைக்குப் பிறகு மெல்ல மெல்ல மறைந்தது. அப்பா தாமரைக்கனி தி.மு.க.கார ராக இறந்தபோது, மகன் இன்பத்தமிழன் அ.தி.மு.க. வில் அமைச்சராக இருந்ததால் தன் தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தக்கூடச் செல்லவில்லை. அந்தளவுக்கு அரசியல் நாகரிகம் சீரழிந்திருந்தது. தி.மு.க.வினர் வீட்டுத் திருமணங்களில் அ.தி.மு.க. வினர் கலந்துகொள்வதே ரகசிய டீல் என்ற அளவில் செய்திகளாகி, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டன. ஜெயலலிதா இப்போது இல்லாவிட்டாலும் அவர் உருவாக்கிய அரசியல் பண்பாட்டுச் சிதைவு அ.தி.மு.க.வில் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான், தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் இல்லத் திருமணத்தில் அ.தி.மு.க. எம்.பி. நவநீதகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசியதற்காக கட்சி எடுத்துள்ள நடவடிக்கை.

ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர் -செங்கல்பட்டு

கனடாவில் லாரி ஓட்டுனர்களிடம் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்ததால் பிரதமர் ட்ருடோ குடும்பத்துடன் தலைமறைவாக இருக்க நேர்ந்தது பற்றி?

லாரி டிரைவர்களுக்குத் தடுப்பூசி கட்டாயம் என்பதாலும், ஒரு வார தனிமைப்படுத்தும் முடிவாலும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, டிரைவர்கள் லாரியுடன் கனடா தலைநகர் டொரோன் டோ நகருக்குள் நுழைந்தனர். பல இடங்களிலும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டனர். அதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் ட்ரூடோ தனது குடும்பத்துடன் ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனாலும், “நாம் இந்த கொரோனா போராட்டத்தில் இன்னும் வெல்லவில்லை. எல்லாரையும் கொரோனா வெறுப்படையச் செய்துள்ளது. போராட்டம் நடத்துவது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஆனால், "கொரோனா கட்டுப்பாடுகளில் நான் தெளிவாக இருக்கவே விரும்புகிறேன்'’என உறுதி காட்டியுள்ளார் கனடா பிரதமர்.

பி.மணி, வெள்ளக்கோவில் -திருப்பூர் மாவட்டம்

ஆட்சிதான் மாறியிருக்கிறதே தவிர காட்சி மாறவில்லையே... அதானுங்க, லஞ்ச லாவண்யங்கள் அப்படியே தொடருகிறதே?

ஆட்சி மாறினாலும் அதிகாரிகள் மாறுவதில்லை, ஆட்சி முறை மாறவில்லை... நிர்வாகச் செயல்பாடுகளிலும் மாற்றமில்லை. நேற்றும் இன்றும் இதுதான் நிலை. நாளை யாவது மாறக்கூடும் என்ற நம்பிக்கையிலேயே வாழ்கிறோம்.